Broad Minded என்பதை பரிணாமத்தில் வளரும் ஒரு நிலை அல்லது மனதை கடக்கும் ஒரு நிலை என்று எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார்.
மனதை கடக்கும் வழிகள் சிலவற்றை கர்மயோகி கூறியிருக்கிறார்.
1. மனம் எண்ணங்களால் மட்டுமே ஆற்றலைப் பெறுகிறது. நாம் கடந்த கால நினைவுகளில் வாழ்வதை விட்டால், அந்த அனுபவங்களின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் இருந்தால், நம் அபிப்பிராயம், முன்முடிவுகள், விருப்பு, வெறுப்புகள், கருத்துகள், ஆகியவை முன்நின்று வாழ்வை நடத்தாமல் இருந்தால் அதன் மூலம் மனதின் பிடியில் இருந்து வெளியே வர முடியும்.
2. பிரிக்கும் கருவி மனம். குறிப்பாக தனக்கு எது நல்லது, எது கெட்டது என்று மட்டுமே நினைக்கும் அகந்தையின் கருவி அது. எந்த சூழலிலும் ஏதோ ஒரு ஒருமைப்பாட்டை கரஸ்பாண்டன்ஸ் பார்த்து – நும் அகமே புறம்- என்று ஏற்றுக்கொண்டால் மனதில் இருந்து வெளியே வர முடியும்.
3. காலமும் இடமும் மனதின் அஸ்திவாரம். அது நம் புலன்களை அடிப்படையாகக் கொண்டது. நம் வரையறை உள்ள தன்மை அதனாலேயே வருகிறது. அதற்கு data கொடுப்பது நம் புலன்கள். நம் புலன்களை நம்பாமல் இருக்க முடியுமானால், ஒவ்வொன்றிலும் உள்ள சத்தியத்தை ,இறைவனின் திருவுள்ளத்தை நம்மால் பார்க்க முடிந்தால் நாம் மனதில் இருந்து வெளியே வர முடியும்.
4. பரிணாமத்தில் முன்னேற்றம் என்னும் செயலை முழுமையாக நிறைவேற்ற பிரம்மம் தன்னை மறந்ததைத்தான், நாம் அறியாமை என்கிறோம். அதன் வெளிப்படும் தளம் மனம். அதனால் எந்த ஒரு செயலிலும் பிரம்ம நோக்கத்தை மட்டுமே நினைவுகூர்ந்தால் மனதில் இருந்து வெளியே வரலாம்.
5. நம் கடந்தகால எண்ணங்களே நம் உணர்வுகளில் எதிர்கால எதிர்பார்ப்பாக, ஒரு செயலுக்கு அடிப்படையாக அமைகிறது அப்படி இல்லாமல் ஒரு செயல் செம்மை பெற மட்டுமே நம் உடல், உணர்வு , அறிவு இருக்கிறது என்று செயலின் நோக்கில் மட்டுமே பார்த்தால் மனதை கடந்து வரமுடியும்
6. எல்லா எண்ண ஓட்டங்களையும் சமர்ப்பணம் செய்து அனைவருக்குமான நல்லெண்ணத்தை மட்டுமே அளவுகடந்து உயர்த்தினால் மனதை கடக்கிறோம்.
7. ஒரு தாழ்ந்த மனநிலையை எடுத்துக்கொள்ள அல்லது ஒரு தாழ்ந்த செயலை செய்ய நாம் வெட்கப்பட்டால், தயங்கினால், இது தவறு என்னும் நினைவு வந்தால் – அவற்றை தஹ்வாறித்து உயர்ந்ததை செய்தால் – இந்த இடங்களிலெல்லாம் நாம் மனதை கடக்கிறோம்.
8. Non – reaction , Non – Initiative , Silent will போன்ற பண்புகள் மனதை கடக்கும் வழிகள். பிறர் நிலை பார்வை என்பது மனதை கடப்பது அல்ல. அதில் உள்ள உண்மையை உணர்ந்து அது நம்மின் எந்த பாகங்கள் என அறிந்து அதன் முழுமையை காண முயல்வதே மனதை கடப்பது.
இதுபோன்ற ஏராளமான கருத்துக்கள் ஆத்ம சமர்ப்பணம் பெரிய காரியம் போன்ற புத்தகங்களில் ஆங்காங்கே உள்ளது.
நீங்கள் சொல்லும் expand என்பதை மனதின் விரிவு என்று ஒரு புரிதலுக்காக அதை எடுத்துக் கொள்ளலாமே தவிர, ஒரு ஆன்மாவின் பண்பை ஆரம்பிப்பதற்கு எடுத்துக் கொள்ளலாமே தவிர, உண்மையில் மனதின் விரிவு என்பது அகந்தையின் விரிவே.
நல்லெண்ணத்தை உயர்த்தினால் மனதில் இருந்து விடுபடலாம் என்று கூறினேன் அதை மனம் விரிவடைவதாகப் புரிந்துக் கொள்ளலாம். ஆனால் அதன் உண்மையான பொருள் நல்லெண்ணத்திற்கு எதிரான கயமை, பொறாமை, கெட்ட எண்ணம் போன்றவை – குறிப்பாக சுயநலத்தின் எந்த வடிவங்களும் இல்லாத அளவிற்கு குணத்தை மாற்றுவதே மனதில் இருந்து வெளியில் வருவது. காரணம் மனமே நம் நடத்தை, மனப்பான்மை, மேனர்ஸ் கேரக்டர் போன்றவற்றை முடிவு செய்கிறது. அதனால் நல்லெண்ணத்திற்கு எதிரானவற்றை இல்லாமல் செய்வதே மனதைக் கடந்து ஆன்மாவின் பண்புகளுக்கு பிரம்ம நோக்கத்திற்கு செல்வது.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு முறுகலான தோசை பிடிக்கும். ஒரு ஓட்டலுக்கு பிறருடன் செல்லும்போது அவர்களுக்காக அங்கு கிடைக்கும் எந்த தோசை ஆனாலும் – கல் தோசை, செட் தோசை – என்று எது வேண்டுமானாலும் சாப்பிடுகிறேன். இங்கே மனதிலிருந்து வெளியே வந்து பிறர் நிலை பார்வை, விட்டுக்கொடுத்தல், நடத்தை ,பண்பாடு என்று ஏதோ ஒரு உயர்நிலையை எடுத்துக் கொண்டதாக நினைக்கலாம். ஆனால் அதன் பின்னால் எனக்கு மற்ற தோசை பிடிக்காது என்னும் அகந்தையின் பிரிவினை விரிவு ஒன்று எப்போதும் இருக்கும். அல்லது அவர்களுக்காக நான் செய்கிறேன் என்பதாவது இருக்கும். இப்படி இல்லாமல் எந்த தோசை ஆனாலும் அல்லது இட்லியே ஆனாலும் அதை தோசை போல நினைப்பது அதை ஆனந்தமாக உண்பது பகவான் சொல்லும் ரசா. அதாவது நம் ஜீவனின் எந்த பாகத்திலும் முரண்பாடு இல்லாத ஒரு நிலை. அதுவே மனதை கடப்பது.
நம் அகந்தையை அறிவது முதல் நிலை. அது மனதின் மூலமே வெளிப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்வது அடுத்த நிலை. ஏற்றதை செயல்படுத்துவது மூன்றாவது நிலை. இது முள்ளை முள்ளால் எடுப்பது போன்றது. நம்மால் நம் நாம் பெற்ற ஞானத்தால் அவ்வளவுதான் செய்ய முடியும். அதுவேய முனிவர்கள் , ரிஷிகள் செய்தது. அப்போதுகூட மனம் பற்றற்ற நிலை என்னும் அகந்தையின் விரிவாகத்தான் மாறுமே தவிர சமநிலை என்னும் ஆன்மாவின் நோக்கத்திற்கு மாறாது. அது சித்திக்க அருள் வேண்டும். அதை சமர்ப்பணம் மட்டுமே தரும் என்கிறார் கர்மயோகி .
இத்துடன் கீழ் கொடுத்துள்ள லிங்க் ஐ படித்தால் மேலும் தெளிவு பெறலாம்.