சமர்ப்பணம் என்னும் வார்த்தையை நாம் மிகச் சாதாரணமாகக் கையாள்கிறோம். நீண்ட கால அன்னை அன்பர்கள் யாரிடம் எது கேட்டாலும் இறுதியில் அவர்கள் சொல்வது சமர்ப்பணம் செய் என்பது தான் . சமர்ப்பணத்தால் மலையை நகர்த்த முடியும், எதையும் நொடியில் செய்து விட முடியும் என்று சொல்பவர்களையும் அவர்களுக்கு நடந்ததாக சொல்வதையும், பார்த்து, கேட்டு நான் ஆச்சரியப்படுகிறேன், பொறாமைப்படுகிறேன். அவர்கள் எல்லாம் எப்படி அன்னையை, அருளை , அவர்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள் என்று. அப்படிப்பட்டவர்களுக்கு நான் இனி பகிர்ந்து கொள்ளப்போவது பொருந்தாது.
இதில் குறிப்பாக சமர்ப்பணம் – Thy Will – உன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்று சொல்பவர்கள் உண்டு. அதற்கு அப்பா சொல்லும் உதாரணம் – என் மகளின் திருமணத்தை சமர்ப்பணம் செய்கிறேன் என்று சொல்பவர்க்கு திருமணம் நடக்காமல் இருக்கவே வாய்ப்பு அதிகம். காரணம் அன்னை திருமணத்தை விரும்பவில்லை. அதே போல படிப்பை சமர்ப்பணம் செய்பவர்க்கு படிப்பு வராமல் போகலாம். காரணம் அன்னை விரும்புவது self-education. அதனால் அப்படி சொல்பவரையும் நான் இங்கு சேர்க்கவில்லை. பெரிய காரியம் புத்தகத்தில் சில இடங்களில் சமர்பணத்தில் தோல்வி அன்னையின் வெற்றி என்கிறார். ஆனால் அன்னையிடம் வந்து 15 ஆண்டு ஆகியும் சமர்ப்பணம் என்றால் என்னவென்று முழுதும் புரியாமல், நானும் செய்கிறேன் என்று செய்து பலன் பெற்றாலும், அதைப்பற்றி முழுதும் அறிய நான் முற்பட்டபோது எனக்குத் தோன்றியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் சமர்ப்பணம் (Consecration) என்றால் என்ன. அகராதி தரும் பொருள்படி – “இறைவன் வந்து தங்குவதற்கு ஏதுவாக , ஒரு இடத்தைப் புனிதப்படுத்துவது – “உதாரணம் கும்பாபிஷேகம்”.
அதையே அன்னைக்காகச் சொல்லும் போது ஒரு இடத்தை, செயலை, அன்னையின் அருள் செயல்படும் இடமாக, அவர் நோக்கமான பரிணாமத்தில் முன்னேற்றம் – evolution நடக்கும் இடமாக, அதற்கு ஏற்ற பண்புகள் இருக்கும் இடமாக மாற்றுவது சமர்ப்பணம்.
இதில் பண்புகள் என்னும் போது நோக்கம், மனப்பான்மை அன்னைக்கு முக்கியம். உயர் சித்தம் அன்னையின் தேவை. அதற்கு முயல்பவர்கள் யாரும் என் அருளைப்பற்றி கவலைபடத் தேவையில்லை, அது என்றும் அவரைத் தேடி வரும் என்கிறார். அதற்காக நான் காத்திருக்கிறேன் என்கிறார்.
உதாரணமாக நான் படிப்பை சமர்ப்பணம் செய்கிறேன் என்று ஒருவர் சொன்னால் – நல்ல வேலைக்கு படிப்பு தேவை என்று நினைப்பவர் நல்ல திறமை, திறன் பெறுகிறார். அறிவு வளர படிப்புத் தேவை என்று நினைப்பவர் Consultant, Advisor ஆகிறார். பண்புகள் வளர படிப்புத் தேவை என்று நினைப்பவர் தொழிலதிபர் ஆகிறார். ஞானம் பெற படிப்புத் தேவை என்று நினைப்பவர் ஆன்மீகவாதி ஆகிறார்.
கர்மயோகி சொல்வது சமர்ப்பணம் செய்து ஒரு செயல் நடந்தால் அதில் தோல்வியில்லாத வெற்றி unfailing success – தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது. அது, ஏதாவது ஒரு பிரச்சினைக்காக இருந்தால் அது போன்ற பிரச்சினை இனி வரவேக்கூடாது என்கிறார். ஆனால் எனக்கு அப்படி இல்லை. சமர்ப்பணம் செய்து நடந்ததாக நினைக்கும் விஷயங்களும் ஒரு புதிய பிரச்சினை கலந்தே வந்திருக்கிறது. அது அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு என்று எடுத்துக் கொண்டாலும் , அதுவும் இல்லாமல் சமர்ப்பணம் வராதா , அப்படிப்பட்ட பலனை அது தராதா என்பது என் கேள்வியாக இருந்தது. இப்பொது புரிந்து விட்டது என்பதோ நான் நிபுணத்துவம் பெற்று விட்டேன் என்பதோ பொருளல்ல. புரியாத நிலையிலிருந்து புரிந்து விட்டது, ஆனால் செய்ய முடியவில்லை என்னும் நிலையில் இருக்கிறேன். என்றாவது ஒரு நாள் செய்யலாம், செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.
நாம் சமர்ப்பணம் என்றால் என்ன செய்கிறோம் – ஒரு செயல் நினைவுக்கு வரும் போது அன்னையை நினைக்கிறோம். அதையே சமர்ப்பணம் என்கிறோம். அல்லது அன்னையிடம் நம் கோரிக்கைகள் அனைத்தையும் வைத்து, முடிந்தால் அதற்கு செய்ய வேண்டிய வழிகளையும் சொல்லிவிட்டு, மனம் முழுக்க எதிர்பார்ப்புடன் இருப்போம். அல்லது நாமாக கல்லூரியில் இடம் தேடினால் அதிக செலவாகும் என்றால், ஒரு அனுமதி பெற அலைச்சல் , செலவு அதிகம் என்றால் அதை அன்னையிடம் சொன்னால், அந்த செலவு குறைவாக அலைச்சல் குறைவாக இருக்கலாம் என்று நினைத்தால் சொல்வோம்.
உண்மையில் சமர்ப்பணம் என்பது எளிதில் நம்மால் செய்ய முடிந்ததைக் கூட அன்னை வழிக்கு விடுவது, ஆனால் நாம் நம்மால் எளிதில் செய்ய முடிந்ததை, அல்லது அன்னை நம் விருப்பத்திற்கு எதிராக செய்வார் என்று தெரிவதை நாம் சமர்ப்பணம் செய்ய மாட்டோம். சமர்ப்பணம் செய்தால் அதிக பட்சம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனக்கு பள்ளிப் படிப்பு கேட்டேன், professional degree கிடைத்தது. டிவிஎஸ் 50 கேட்டேன், கார் கிடைத்தது. இது போல பலருக்கும், மணமகன், மணமகள், தொழில் தகுதிக்கு மீறி அமைந்துள்ளது. ஆனால் இவையெல்லாம் சமர்ப்பணமா, அருளா?
கர்மயோகி இதை சமர்ப்பணமோ அருளோ இல்லை என்கிறார். இவை அனைத்தும் அதிர்ஷ்டம் – Luck என்று கூற கூடிய ஒரு நிலை. நம் ஜாதகத்தில் இருக்கும் கெட்டது இருந்தால் அது குறைவாகவும் நடக்காமல், நல்லது இருந்தால் அது அதிகபட்சமம் நடக்கும் ஒரு நிலை. அன்னையிடம் வைத்த பிறகு நம் கர்மத்தின் பிடி நம்மை விட்டு விலகும் முதல் நிலை. அன்னையின் மேல் உள்ள நம் பக்திக்கு வாழ்வு தரும் பரிசுகளே அவை என்கிறார்.
இது பற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த பக்கத்தை / லிங்க்-ஐ மேல இடது புறம் உள்ள WhatsApp , Telegram logo வை கிளிக் செய்தால் பிறருக்கு பகிர முடியும்.