Share on facebook
Share on telegram
Share on whatsapp

டோக்கன் ஆக்ட்

அழகான மாலை நேரம். மண்வாசனை மழை வரப்போவதை கட்டியம் கூறியது. மழை என்றாலே அருள் என்பதால் மேலே விழும் ஒவ்வொரு துளியிலும் அன்னையின் ஸ்பரிசம். எதிர்பார்த்துக் கொண்டு அண்ணாச்சி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். மீதி சில்லறையில் இரண்டு ரூபாய் நாணயங்களைப் புரட்டிப் பார்த்து பாக்கெட்டில் போட்டேன்…. ஆம்…. பகவானின் உருவம் பதித்த நாணயம் வந்த பிறகு

இந்தப் பழக்கம் வந்து விட்டது. ஒன்று கிடைத்தாலும் சிலிர்க்கும். பகவானே என்னைத் தேடி வந்ததுபோல ஒரு சந்தோஷம்.

அண்ணாச்சி சிரித்தார். “நீங்கள் அன்னை பக்தரா?” கல்லாவில் தேடி ஒரு நாணயம் எடுத்துத் தந்தார். அன்று ஆரம்பித்து – தியான மையம் செல்லும் வழியில் அவர் கடை இருப்பதால் – அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டிருப்போம்.

ஒரு விடுமுறை நாள்…. அண்ணாச்சிக் கடையின் அருகில் சிறு குழந்தைகள் எல்லாம் “ஓ’ என கூச்சலிட்டு விளையாட, கடைக்குள்

சிறு குழந்தை ஒன்று கண்ணை உருட்டி உருட்டி எல்லாவற்றையும் கேட்க… தெருவில் காதலர்கள் இழைந்து கொண்டு பைக்கில் செல்ல….கார்களில் நெருக்கமாகக் குடும்பத்தினர் பறக்க….

அண்ணாச்சியிடம் சொன்னேன், “எல்லோரையும் பார்க்க சந்தோஷமாக இருக்கு. முன்பெல்லாம் காரில் செல்பவர்களைப் பார்த்தால் பொறாமைவரும். குழந்தைகளின் கூச்சல் எரிச்சல் தரும். இழைந்து கொண்டு செல்லும் காதலர்களைப் பார்த்தால் கோபம் வரும். இப்போது அவையெல்லாம் போய்விட்டன”என்றேன்.

அண்ணாச்சி உற்றுப் பார்த்தார்.

“நிஜமாக அப்படி நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான். சில மாதங்களுக்கு முன்வரை எனக்கும் அப்படித் தான் இருந்தது. ஆனால் ஒரு நாள் எனக்குள்ளேயே சென்று பார்த்த போது தான், நான் போடும் வேஷங்களும்… என்னை நானே இப்படி எல்லாம் சொல்லி ஏமாற்றிக்கொள்வதும் தெரிந்தது. மாற முயன்றேன்.ஒரு சின்ன விஷயத்தில் கூட அன்னையை பின்பற்ற முடியவில்லை.யோக வாழ்க்கையெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். நம்மால் அது முடியாது” என்று பெருமூச்சு விட்டார். “இப்போதெல்லாம் வெறும் பிரார்த்தனை செய்வதோடு திருப்தி அடைகிறேன்”என்று முடித்தார்.

தியான மையம் செல்லும் நேரமாகி விட்டதால் கிளம்பினேன்.

அண்ணாச்சி நெகடிவ் “போர்ஸோ?’ அன்னைக்கே “உன்னால் முடியாது’என்று சொன்னவர்கள் என்னை விடுவார்களா? அவர் சாதாரண பக்தர். ஆனால் நான் அதையெல்லாம் தாண்டிய அன்பனாயிற்றே. சிரித்துக் கொண்டே சென்றேன்.

தியான நேரம் ஆரம்பமாகியது. மெதுவாக எண்ணம் அடங்கி,மூச்சை மட்டும் உணர, உள்ளே செல்ல ஆரம்பித்தேன்…. வழக்கமான அந்த சுகந்தம் இல்லாமல்…. என்ன இது? ஒரே இருட்டு? அலையலையாய் நிழலுருவங்கள்…. போட்ட கூச்சல் காதே செவிடாவதுபோல இருந்தது….

– “சென்ற வாரம் ரவி கார் வாங்கியபோது, “பார்த்து ரவி, இப்படித்தான் நிறைய பேர் கிரெடிட் கார்ட், லோன் என்று அகலக் கால் வைத்து மாட்டிக்கொள்கிறார்கள். நடுத்தெருவுக்கு வந்து விடுகிறார்கள்.உஷாராக இரு’ என்று வாழ்த்துவது போலச் சொன்னாயே…. எனக்காகத்தானே…..” பொறாமை கைகொட்டிச் சிரித்தது.

– எரிச்சல் குதித்தது. “ஆமாம்! தினேஷ் வீட்டு கிரஹப்பிரவேசத்தில், “எனக்கும் அதுபோல மாமனார் கிடைத்தால், நானும் தான் இதுபோன்று கட்டுவேன்’என்று சொன்ன போது எனக்கு எவ்வளவு குஷி தெரியுமா?”…..

– “ரிசப்ஷனிஸ்ட் கீதாவைப் பற்றி நீ பேசுவதும், டூர் போய் வரும் ஜி.எம்.ஐயும், பி.ஏ. ஜானகியையும் பற்றி நீ நினைப்பதெல்லாம் எங்களுக்கு நல்ல தீனி…” கும்மாளமிட்டது காமமும், வக்ரமும்….

– “பிரபாகரன் கஷ்டப்பட்டு முடித்த பிராஜக்டில் கடைசி நேரத்தில் சேர்ந்து, எல்லாம் நீயே செய்ததாகப் பேர் தட்டிக்கொண்டு சென்றாயே”…. கயமை கட்டிப்பிடித்தது.

– இன்னும்…. இன்னும்…. பொய், கள்ளம், அதிகாரம், அகந்தை அத்தனையும் சுற்றி நின்று கும்மியடிக்க….

திடுக்கிட்டு விழித்தேன். இவ்வளவு கேலவமானவனா நான்? அன்னையை பார்க்கவே கூச்சமாக இருந்தது. திடீரென நிர்வாணமான உணர்வுடன் தடுமாறி வெளிவந்தேன்.

அண்ணாச்சி கடையைத் தாண்டும்போது, “என்ன சுரத்தில்லாமல் வருகிறீர்கள்?”…. அக்கறையுடன் கேட்டார்.

“நீங்கள் சொன்னது சரிதான்! என்னை நானே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறேன். மாறவேண்டும் என்று மனது நினைத்தவுடனேயே, மாறி விட்டதாக அகந்தை சொல்ல ஆரம்பித்துவிட்டது. அறிவும் அதையே நம்ப ஆரம்பித்துவிட்டது…. என்ன செய்யலாம்?”

அண்ணாச்சி சிரித்தார். “அது தெரிந்தால் நான் செய்யமாட்டேனா?…ஆனால்…. ஏதோ பேச்சுவாக்கில் நான் சொன்னதை வைத்து நீங்கள் கேட்டதால், அதையே செய்யுங்களேன். “சொல்பவரெல்லாம் அன்னையே! சொல்வனவெல்லாம் அன்னையே!’ என்று நினையுங்கள். அன்னையே வழிகாட்டுவார்….” அன்னை படத்திலிருந்து ஒரு சாமந்தியை எடுத்து கையில் அழுத்தினார். இழந்த சக்தி வருவதுபோல இருந்தது.

வீடு வந்து அன்னை படத்தின் முன் அமர்ந்தேன். “என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. உங்கள் வழிமுறைகளையெல்லாம் பின்பற்ற நீங்களே சொல்லிக் கொடுங்கள். இன்றிலிருந்து “சொல்பவர் எல்லாம் அன்னையே! சொல்வனவெல்லாம் அன்னையே!’ வழிகாட்டுங்கள் தாயே!….” வேண்டினேன். மெதுவாக ஒரு நிம்மதி பரவுவது போல இருந்தது.

இரவு சாப்பாட்டுக்கு பின் மகளுடன் பேசிக்கொண்டு இருந்தேன். திடீரென கேட்டாள், “ஏம்ப்பா! இவ்வளவு சத்தமா பேசறீங்க? நாம ரெண்டு பேர் தானே இருக்கோம்” திடுக்கிட்டேன். அன்னை வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தச் சிறு விஷயத்தைக்கூடவா இது வரை செய்யவில்லை?…. யோசிக்கும்போதே அடுத்த குட்டு வந்தது,

“நாலு நாள் நான் ஊரில் இல்லைனா, வீடே நாறிப்போகுது. போட்டது போட்டபடி, படித்த பேப்பரை மடிக்காமல், குடித்த காபி டம்ளரை கழுவாமல், யூஸ் அண்ட் த்ரோவைக் கூடவா தூக்கி போடக் கூடாது. இதில் வாய் கிழிய என்னை சுத்தம், சுத்தம்என்று விரட்டுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை” சகதர்மிணி குட்ட….இத்தனை அடிகளை மீறியும் அன்னையின் Cocoon of Peace கட்டிக் கொண்டு படுத்ததில் நல்ல தூக்கம் வந்தது.

மறுநாள்…. ஆபீஸில் உடனடியாக பிஸினஸ் டூர் கிளம்பச் சொல்ல,அடுத்த பதினைந்து நாட்களுக்கு அனைத்தும் மறந்துபோனது.திரும்பி வந்தபோது…. ஆபீஸ் வேறு இடத்திற்கு மாறி இருந்தது.

எனக்குத் தனி கேபின் கொடுக்கப்பட சந்தோஷமாக அமர்ந்தேன்.

அண்ணாச்சி வந்திருப்பதாக பியூன் வந்து சொல்ல, எழுந்து சென்று வரவேற்றேன். “என்ன இந்தப் பக்கம்?….”

“நான் கொள் முதல் செய்யும் கொடவுன் அடுத்த தெருவில் தான் உள்ளது. உங்கள் ஆபீஸ் இங்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.அதுதான்….” என்றவாறே சுற்றிப் பார்த்தார்….. சிரித்தார்….

“உண்மையாகவே மாறவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டீர்கள் போல இருக்கிறதே” என்றார். அந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. “எப்படித் தெரியும்?”….

“பழைய ஆபீசையும் இந்த ஆபீசையும் ஒப்பிட்டுப் பாருங்கள்”….. யோசித்தேன். ஆம். பழைய ஆபீஸ் கொடவுன் கம் ஆபீஸ் என்பதால்

எப்போதும் கெமிக்கல் நெடியும், பவுடர் தூசும் இருக்கும். பின்னால் இருக்கும் சேரி மற்றும்…. கூவம் உபயத்தில் எப்போதும் “நறுமணமும்’,”நல்ல வார்த்தைகளும்’…. ஆனால் இப்போது…. சுத்தமான, அமைதியான இடம், அழகான பூந்தோட்டம் உபயத்தில் சுகந்தம்…. புரிவதுபோல இருந்தது.

அகத்தின் குப்பையை, நாற்றத்தை புறம் காட்டிக்கொண்டே இருந்திருக்கிறது. நான்தான் புரிந்துகொள்ளவில்லை…. மெதாகக் கேட்டேன், “அப்படியென்றால் இந்த இடம் நான் மாறிவிட்டேன் என்பதற்கு அடையாளமா?”

அண்ணாச்சி வேகமாக மறுத்தார். “இல்லவே இல்லை. அது அன்னையின் பரந்த மனதுக்கு அடையாளம். நாம் மாற வேண்டும் என்று நினைத்தவுடனேயே அதற்கான சூழ்நிலையைக் கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்துகிறார். ஆனால் நாம் தான் அவரை நம்புவதில்லை. நாம் ஓர் அடி அன்னையை நோக்கி எடுத்து வைத்தால், அவர் நான்கடி நம்மை நோக்கி வருகிறார்…. இவ்வளவு சொல்கிறேனே!…. பத்து ரூபாய்க்கு வெங்காயம் வாங்கும் கஸ்டமரை திருப்திபடுத்த என்னவெல்லாம் செய்கிறேன். அன்னையின் திருப்திக்கு எதையாவது செய்கிறேனா?…..”தழுதழுத்தார்.

“ஆமாம்! இந்தச் சம்பளத்திற்காக, ஜி.எம். சொல்வதை அப்படியே கேள்வி கேட்காமல், ஏற்றுக் கொண்டு செய்ய முடிகிறது…. அன்னையின் சட்டங்களை அப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறதா?’…. அண்ணாச்சி சென்ற பிறகும் என் இயலாமை என்னை அழுத்தி உட்கார வைத்திருந்தது.திடீரென ஓர் உறுதி வந்தது. “சொல்பவரெல்லாம் அன்னையே!சொல்வனவெல்லாம் அன்னையே!’ என்பதை இன்று முழுவதும் கடைப்பிடிக்க முடிவு செய்தேன். அன்னைப் படத்தை ஏறிட்டேன்.

“அன்னையே இதையே “டோக்கன் ஆக்ட்’ஆக ஏற்றுச் சொல்லித் தாருங்கள். உங்கள் வழி முறைகள் அனைத்தையும் பின்பற்ற இது ஓர் ஆரம்பமாக இருக்கட்டும்” வேண்டினேன். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பது உண்மை. அழ தெரியாத, அழ திராணியற்ற குழந்தைக்கு அதன் தாய் தேடிவந்து பாலூட்டுவாள் என்பது சத்தியம். அது அடுத்த அடுத்த சம்பவங்களில் தெரிய ஆரம்பித்தது.

காண்ட்ராக்ட் மேனேஜர் கதவைத் தட்ட உள்ளே அழைத்தேன்.

“சார் Aviation Fuel Tank Protective Coating டெண்டருக்கு நாளை கடைசி தேதி சார்…. நீங்கள் ரேட் இன்னும் ஃபைனலைஸ் செய்யவில்லையே….” இழுத்தார்.

“ஏன் வழக்கம் போல ஏ.ஈ. சொல்படி செய்வதுதானே!”

“இல்லை சார்! அந்த ஆளுக்கு “கட்டிங்’ கொடுக்காமல் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். காரணம் இது கொஞ்சம் ரிஸ்க்கான வேலை. மெடீரியல் அட்ஜஸ்ட் செய்ய முடியாது….. என்ன செய்யலாம்?”…..பொறி தட்டியது. “சொல்பவரெல்லாம் அன்னையே! சொல்வனவெல்லாம் அன்னையே!’…. இலஞ்சம் கொடுக்கக்கூடாது…. நிமிர்ந்தேன். “சேகர்! ச.மீ.க்கு ரூ.820/- கோட் செய்யுங்கள்”. அதிர்ந்தார் சேகர். “சார்! இது மிக அதிகம். எல்-3கூட வரமாட்டோம்”.

“பரவாயில்லை. இந்த பிராஜக்டை பொருத்தவரை, நேர்மையாக செய்ய வேண்டிய முறைப்படி, போடவேண்டிய பொருட்கள் முழுவதையும் போட்டுச் செய்யப் போகிறோம். யாருக்கும் எதுவும் தரப் போவதில்லை” என்றேன்.

மறுநாள் 11 மணி…. கதவு தட்டப்பட, “எஸ்! கம் இன்!” என்றேன். ஜி.எம். கைகுலுக்க கை நீட்டினார். “காண்ட்ராக்ட் எடுப்பதில் நீங்கள் புலி என்பதை

மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்” என்றார். புரியாமல் பார்த்தேன். “உங்கள் gamble ஜெயிச்சிடுச்சி. High risk job என்பதால் past experience அடிப்படையில் நம்மையே செய்யச் சொல்லிவிட்டார்கள். யாருக்கும் எதுவும்வேண்டாமாம். கெட்ட பெயர் வாராமல் இருந்தால் போதும் என்கிறார்கள்”… பேசிக் கொண்டே போக… அன்னை சட்டங்களின் மகிமை புரிய ஆரம்பித்தது.

இது நாள் வரை புரியவில்லை என்று “கதை’ பண்ணிக்கொண்டிருந்த

“டோக்கன் ஆக்ட்’டும் புரிய ஆரம்பித்தது. அடுத்து, கேயெஸ் எண்டர்பிரைசஸ் கருணாகரன் உள்ளே நுழைந்தார். “இவர் ஏன் வருகிறார்? ஏற்கனவே ஐம்பதாயிரம் தரவேண்டும். மீண்டும் கிரெடிட் கேட்க வந்திருப்பாரோ? என்ன செய்வது?’ சிந்தித்தேன். எங்கள்மூலமாக அவர் செய்த சப்ளை ஒன்றுக்கான மூன்று இலட்சம் செக் எங்கள் வசம் இருந்தது. ஜி.எம். வேறு, “அவன் பாக்கியை வாங்கிவிட்டு இதைக் கொடு. இந்த சந்தர்ப்பத்தை விட்டால், நாம் எப்போதும் வசூல் செய்ய முடியாது’ என்றிருக்கிறார்…. குழம்பினேன்.

பெல் அடித்து, கிளார்க்கிடம் கருணாகரன் ஃபைலை எடுத்து வரச் சொன்னேன். உள்ளே நுழைந்த கிளார்க் மெதுவாக சொன்னார், “நல்ல மனுஷன் சார்! செக்கைக் கொடுங்கள். நிச்சயம் அதிலிருந்து நம் பாக்கியைத் தருவார்”. “சொல்பவரெல்லாம் அன்னையே!சொல்வனவெல்லாம் அன்னையே!’…. இந்தக் கொள்கை இதற்கு ஒத்துவருமா? அவரே விவேகம், பாகுபாடு எல்லாம் பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறாரே…. இந்த நேரத்தில் அவர் பிடி நம் கையில் இருப்பதுதானே விவேகம்…. அறிவு ஆயிரம் கேள்வி கேட்டது…. பதிலும் அதிலேயே இருந்தது. ஆம்…. பிடியை விடவேண்டும். அதுவும் நம்மிடம் வலு இருக்கும்போது பிடியை விட வேண்டும்…. துணிந்தேன். “ஓ.கே. செக்கைக் கொடுத்துவிடுங்கள்” என்றேன்.

கருணாகரனுக்கு நம்பமுடியவில்லை. சந்தோஷத்துடன் தம் பிரீப்கேஸை திறந்தார். ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தார். பிரித்துப் படித்த எனக்குக் கண்கள் விரிந்தது. நாங்கள் போய் மண்டியிட்டுக் கொண்டிருக்கும் ஒரு எம்.என்.சி.யின் சப்ளை ஆர்டர், அதுவும் நாங்கள் கனவிலும் எதிர்பாராத அளவிற்கு. கருணாகரன் தொடர்ந்தார், “சார்!இது முக்கியமான ஆர்டர். ஆனால் இதற்காக கிரெடிட் கேட்டால் நீங்கள் தரமாட்டீர்கள். அதனால் இந்த ஆர்டரை அப்படியே back to back நீங்களே செய்யுங்கள். எனக்கு கமிஷன் மட்டும் கொடுங்கள் போதும்” என்றார்.

எதையுமே நம்பமுடியாமல் அன்னையின் சிரிப்பையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.

இப்படியே அந்த வாரம் முழுவதும் “டோக்கன் ஆக்ட்’ஐ பின்பற்ற,அற்புதங்கள் அன்றாடமானது. மனம் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டு இருந்தது.

அப்போதுதான் அந்த இடிசெய்தி வந்தது. எங்கள் கம்பெனியில் அகில இந்திய அளவில் product மேனேஜர் என்பது மிக முக்கியமான,அதிகாரமிக்க போஸ்ட். வி.பி.யும், எம்.டி.யுமே தலை வணங்க வேண்டும்.இம்முறை “இன்டர்னல் ஸோர்சி’லிருந்தே எடுப்பது என்று முடிவு செய்ததால்…. அசரீரிபோல யாரோ சொல்ல…. “சொல்பவரெல்லாம் அன்னையே! சொல்வனவெல்லாம் அன்னையே!’ என்று அப்ளை செய்து இருந்தேன்.

மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த போது தான் அந்தச் செய்தி தாக்கியது. என்னைவிட பலமடங்கு ஜூனியர் ஒருவருக்கு அது தரப்பட்டது.கோபம், அழுகை பெருக்கெடுக்க…. தியான மையம் கிளம்பினேன்.அண்ணாச்சி எதிர்ப்பட்டார். “என்ன இந்த நேரத்தில்?”…. சொன்னேன்….

“அன்னை என்னைக் கைவிட்டுவிட்டார்கள். அவரென்ன செய்யமுடியும்?

எனக்கு அதிர்ஷ்டமில்லை….” புலம்பினேன்.

சிரித்தார் அண்ணாச்சி. “உங்களுக்கு வேண்டியனவெல்லாம் செய்யத் தான் அன்னை இருக்கிறாரா?”

கேள்வியின் அழுத்தம் என்னைத் தாக்கியது. “இருந்தாலும்…..” இழுத்தேன்.

தொடர்ந்தார், “அன்னைக்கும் ஒரு நோக்கம் உண்டு. தாய் உள்ளத்துடன் அனைத்தையும் அளித்தாலும், குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாததை எந்தத் தாயும் தரமாட்டாள். ஒருவேளை இந்த போஸ்ட் உங்கள் அகந்தைக்கு ஊட்டச்சத்தாக அமையலாம். அகந்தை வளர உதவும் எதையும் அன்னை தரமாட்டார்கள். மற்றபடி அதிர்ஷ்டம், கர்மம் எல்லாம் அன்னைக்குட்பட்டவையே. இந்த மனநிலையை சமர்ப்பணம் செய்யுங்கள்.அன்னை முடிவு அனைத்தும் நன்மைக்கே”.

எந்த அறிவுரையையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நான் இல்லை. என்றாலும் வேறு வழியில்லை. மனது துடிக்கும் போதெல்லாம் அடக்கி, அன்னையை நினைத்தேன். மெதுவாக ஓர் அமைதி பரவ ஆரம்பித்தது. என் ஆட்டத்தை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. அன்னையின் முடிவின் காரணத்தைத் தெரிந்துகொள்ளும் அளவிற்கு நான் புத்திசாலியா?…. நினைக்கவே அசிங்கமாக இருந்தது.

” Sorry Mother! Let Thy Will be done …Not my will” என்னையறியாமலேயே சொல்ல ஆரம்பித்தேன்.

சனி, ஞாயிறு விடுமுறை கழிந்து….. திங்களன்று தெளிந்த மனதுடன் ஆபீசுக்குள் நுழைய…. கைதட்டல்தான் என்னை வரவேற்றது. புரியாமல் விழித்தேன். கன்கிராட்ஸ்! ஆல் இண்டியா product மேனேஜரைத் தானே எதிர்பார்த்தீர்கள். உங்களை product மேனேஜர் (ஆசியா-பசிபிக்) ஆகவே போட்டிருக்கிறார்கள், தெரியுமா?…. வேறு எதுவும் என் காதில் விழவில்லை…. நெடுஞ்சாண்கிடையாக அன்னை படத்தின் முன் விழுந்தேன். என் நெகிழ்ச்சியை, அழுகையை, நன்றியைக் காட்ட நான் வெட்கப்படவில்லை. விழுந்தது நானா? என் அகந்தையல்லவா!…..

மாலை…. அண்ணாச்சி கடையில் நின்றேன். “முகம் பயங்கரக் களையாகிவிட்டதே….. நாட்டை தாண்டிப்போற சந்தோஷமா?….” கிண்டலடித்தார் அண்ணாச்சி.

“இல்லை! கோட்டை தாண்டிப்போற சந்தோஷம்…..” புரியாமல் பார்த்தார்.

“யோக வாழ்க்கையில் முதல் படி சமர்ப்பணம்தானே?”

“ஆமாம்”.

“அது புரிந்துவிட்டதால், இனி கோட்டைத் தாண்டி விடுவேன் என்ற

நம்பிக்கை வந்து விட்டதால், வந்த சந்தோஷம்” என்றேன்.

“எத்தனை படித்தாலும், எத்தனைச் சொற்பொழிவு கேட்டாலும் புரியவில்லை என்பீர்களே”…..

“அது எனக்கு நானே சொல்லிக்கொண்ட போலிச் சமாதானம். அன்னை கையில் கொடுத்தால், என் எண்ணத்திற்கு மாறாக ஏதாவது செய்துவிட்டால், என்ன செய்வது என்று குயுக்தியும், தந்திரமுமாக என் அறிவு சொல்லும் நொண்டிச்சாக்கு. இனி “டோக்கன் ஆக்ட்’ எல்லாம் இல்லை. அனைத்தும் அன்னைச் சட்டப்படியே. அனைத்தும் சமர்ப்பணமே”.

“உண்மையில் சமர்ப்பணம் என்பது ரொம்ப சிம்பிள் தெரியுமா?”

“எப்படி?”….

“அன்னையிடம் சொல்லிவிட்டு, அன்னைச் சட்டங்களுக்கு உட்பட்டு ஒரு காரியத்தைச் செய்தால் போதும், பலனைப் பற்றி நினைக்காமல்”…..ஆமோதிப்பதுபோல வைர ஒளி மின்னலாய் அன்னையும், வெண்தாடி மேகமாய் பகவானும் அருள் மழையாய் பொழிய ஆரம்பிக்க, ஒவ்வொரு துளியிலும் அன்னையின் அரவணைப்பு.

முற்றும்.

****

Author Info
Parinaaman (Ramesh Kumar)

Parinaaman (Ramesh Kumar)

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

அடுத்த கட்டத்தில் அன்னையின் மறுமொழி

“வாருங்கள், வாருங்கள்”, வாய் நிறைய வரவேற்றார் ராஜன். ” ‘நாம் பின்பற்ற முடியாததை, பிறரைப் பின்பற்றச் சொல்வது கயமை’ என்கிறார் அன்னை. என்றாலும், நான் கொடுத்தப் பட்டியலை வைத்து உடனடியாக அன்னையைத் தரிசித்ததால் கயமையும்

Read More »

சாசனம்

மும்பை மேரிடன் ஹோட்டல். பன்னிரண்டாவது மாடி பால்கனியில் இருந்து பார்த்தபோது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சூரியோதயம். உள்ளே திரும்பினால் அதையும் தாண்டிய அதிசயமாய் அன்னையின் புன்முறுவல். கண்ணாலேயே கட்டிப்போடும் அந்த வாஞ்சையில் நெகிழ்ந்தேன்.

Read More »

அடுத்த கட்டம்

மொட்டைமாடி. நாள் முழுதும் அடித்த வெயிலுக்கு மேகமூட்டமும், தென்றல் உடலை வருடுவதும் இதமாக இருந்தது. தொடர்ந்து கும்மென்று மரமல்லிகையின் வாசம். ஆகஸ்ட் மாதத்தில் மரமல்லிகையின் பருவம் ஆரம்பிப்பதுகூட ஏதோ சொல்வது போலிருந்தது. என் பார்வையே அதைச் சொல்லி இருக்க வேண்டும். “ஆரம்பித்துவிட்டாயா?’ என்பது போல் பார்த்தார் நண்பர்

Read More »

More Articles

அடுத்த கட்டத்தில் அன்னையின் மறுமொழி

“வாருங்கள், வாருங்கள்”, வாய் நிறைய வரவேற்றார் ராஜன். ” ‘நாம் பின்பற்ற முடியாததை, பிறரைப் பின்பற்றச் சொல்வது கயமை’ என்கிறார் அன்னை. என்றாலும், நான் கொடுத்தப் பட்டியலை வைத்து உடனடியாக அன்னையைத் தரிசித்ததால் கயமையும்

Read More »

சாசனம்

மும்பை மேரிடன் ஹோட்டல். பன்னிரண்டாவது மாடி பால்கனியில் இருந்து பார்த்தபோது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சூரியோதயம். உள்ளே திரும்பினால் அதையும் தாண்டிய அதிசயமாய் அன்னையின் புன்முறுவல். கண்ணாலேயே கட்டிப்போடும் அந்த வாஞ்சையில் நெகிழ்ந்தேன்.

Read More »

அடுத்த கட்டம்

மொட்டைமாடி. நாள் முழுதும் அடித்த வெயிலுக்கு மேகமூட்டமும், தென்றல் உடலை வருடுவதும் இதமாக இருந்தது. தொடர்ந்து கும்மென்று மரமல்லிகையின் வாசம். ஆகஸ்ட் மாதத்தில் மரமல்லிகையின் பருவம் ஆரம்பிப்பதுகூட ஏதோ சொல்வது போலிருந்தது. என் பார்வையே அதைச் சொல்லி இருக்க வேண்டும். “ஆரம்பித்துவிட்டாயா?’ என்பது போல் பார்த்தார் நண்பர்

Read More »