இதுவரை சொன்னவை அனைத்தும் “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு கருத்தை அடிப்படையாக கொண்டது.
இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்தால் கூட, ஏதாவது ஒரு கோணத்தோடு நிறுத்திக் கொள்வோம் என்றால் கூட, கர்மயோகி ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பல கோணங்களில் கூறுவதால் அவற்றில் சிலவற்றையாவது தொடாமல் எழுத முடிவதில்லை. அது போல ASCENT AND DESCENT பற்றி அவர் கூறும் பிற கருத்துக்களை அறிந்து கொள்வது இங்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் தருகிறேன்.
இது வரை சொன்னதன் மையக் கருத்து – உயர் சித்தங்கள், ஆன்மாவின் பண்புகள், கீழ் நிலை தளங்களான அறிவு, உணர்வு, உடல் ஆகியவற்றில் செயல்படும் போது அவை தானே உயர் நிலைகளை நோக்கிச் செல்கிறது. அதனால் வெளிப்படும் செயல் உயர்ந்த பலன் அளிக்கிறது. அதன் மூலம் வளம், ஆனந்தம் கிடைக்கிறது. இது இறைவன் இறங்கி வரும் நிலைக்கு ஏற்ப மனிதன் உயரும் நிலைக்கு ஒரு உதாரணம் (SUPRAMENTAL FORCE SUPPORTING EVOLUTION OF FORMS).
அது போல சமர்ப்பணம் என்னும் நிலையில், நாம் செய்யும் செயல்களால் நாம் மேலே செல்கிறோம். அதன் மூலம் இறைவனை, அன்னையை நம்மை நோக்கி வர வைக்கிறோம் (MOTHER EXPRESSING HERSELF FOR INDIVIDUAL EVOLUTION). இதன் முக்கிய கோணம் என்னவென்றால் நாம் மட்டுமே செய்வதல்ல. இறைவன் மட்டுமே செய்வதல்ல. மனிதனும் இறைவனும் ஆனந்தத்திற்காக சேர்ந்து செய்யும் நிலை. அதாவது இறைவன் இன்றி நாம் இல்லை. நாம் இன்றி இறைவன் இல்லை. இறைவனின் பகுதி நாம் என்பதன் ஒரு கோணம் இது.
அது நடைமுறையில் நம்முடைய செயலின் SINCERITY யும், அதனால் வெளிப்படும் உயர் பண்புகளின் தரமும், அதனால் நாம் பெரும் ஏற்புத்தன்மையின் அளவும், எவ்வளவோ, அந்த அளவு இறைவனை, அன்னையை, நம்மை நோக்கி வரவைக்க முடியம் (PERFECT EQUILIBRIUM OF DIVINE FORCE AND HUMAN WILL SPEEDS UP THE EVOLUTION ) என்பது மற்றொரு கோணம்.
இது போன்று பல கோணங்களை கர்மயோகி சொல்லி இருக்கிறார். அவையெல்லாம் சாதகர், யோகத்தை மேற்கொள்பவர் செய்ய வேண்டியது என்பதால் – நான் முக்கியம் என்று கருதும் மூன்று கோணங்களை மட்டும் தந்து இருக்கிறேன். குறிப்பாக காலத்தில் – காலத்தை கடந்த நிலை என்னும் கருத்து, யோகத்தை, பரிணாமத்தை விரும்பும் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது.
இப்போது தலைப்புக்கு வருவோம். நாம் படிக்கும் கர்மயோகி அவர்களின் புத்தகங்களிலிருந்தும், கூடல்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றில் கேட்கும் விஷயங்களிலிருந்தும் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்துக் கொள்கிறோம். ஒரு ஞானத்தைப் பெறுகிறோம். செய்தால் நல்லது, முன்னேறலாம் என்று அறிவு சொல்கிறது. ஆனால் செய்வதில்லை. காரணம் அறிவு சொல்வதை எல்லாம் உணர்வு ஏற்றுக் கொள்வதில்லை. உணர்வு விருப்பத்திற்கும், அபிப்ராயத்திற்கும் அடிமையாக இருக்கிறது. உடல் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறது. அது ஒத்துழைக்காமல் எந்த ஞானமும் பயன் தராது. பக்தன் விரும்பாமல் அன்னையால் தர முடியாது என்பதன் நடைமுறை விளக்கம் இது.
இங்கு விருப்பங்கள் என்பது – தன் விருப்பங்களையும், நண்பர்கள், உறவுகள், சமுதாயம் போன்றவற்றையும் அதன் சட்டங்களையும் மதிக்க நினைப்பது. உடல் என்பது தமஸ், பெரும்பாலும் சோம்பேறித்தனம். நாம் பெற்ற அறிவு, உணர்வின் அறிவாக, உடலின் அறிவாக மாற வேண்டும். அது அனுபவங்கள் மூலமே வர முடியும். காரணம், பார்த்ததை, அனுபவித்ததை நம்புவதே நம் உணர்வு. உணர்வு ஏற்றுக் கொண்டால் தவிர உடல் ஏற்காது. நாம் அறிந்த உயர்ந்ததிலிருந்து செயல்பட தாழ்ந்தது இடம் கொடுக்க வேண்டும் என்னும் தத்துவத்தின் தாழ்ந்த வெளிப்பாடு அது.
பிரம்மம் வெளிப்பட மனிதன் தேவை, அன்னைக்கும் பரிணாமத்தை துரிதப்படுத்த மனிதனின் சம்மதம் தேவை என்பது போன்றது அது. அந்த அனுபவங்களின் சாரம் மனதில் இருந்து இறங்கி உணர்வு, உணர்ச்சி என்று வரும் போது உடல் அதை ஏற்றுக் கொள்கிறது.
இதுதான் இயலறி சித்தம் – Intuitive Consciousness – என்று குறிப்பிடப்படுவது என்பதை நாம் சற்று நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. (என் கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும் ஒருவர் – முடிந்த வரை ஆன்மீக சொற்களை தவிருங்கள், அந்த இடங்கள் வரும்போது அதுவரை ஆழ்ந்து செல்வது – திடீரென குழப்பத்திற்கு கொண்டு வந்து விடுகிறது என்றார். இதைவிட எளிமையாக சொல்ல தெரியாத என் இயலாமையின் வெளிப்பாடு அது).
இந்த – இயலறி சித்தம் – Intuitive Consciousness – ஐ நடைமுறையில் ஆராய்ந்துப் பார்க்கும் போது ஒவ்வொரு செயலிலும் நம்மில் இரண்டு மனம் இயங்குவது தெரியும். மேல் மனம் என்றும் அதற்கு சற்றே கீழே இயலறி மனமும் இருப்பது தெரியும். மேல் மனம் பொய்யை , தவறான வழிகளை, அன்னைக்குப் பிடிக்காத வழிகளை செய்யும் போது, கீழ் மனம் -நீ தவறு செய்கிறாய் என்பதை சுட்டிக் காட்டும், ஆரம்பித்தில் மிக மெலிதாக இருக்கும் அந்த உணர்ச்சி – Feeble Voice – நம் ஆர்வத்திற்கு , சின்சரிட்டி , பக்திக்கு ஏற்ப பிறகு ஆணையிடும் குரலாக மாறும் என்கிறார். வேறு இடங்களில் இதை “Sensor “என்றும் சொல்கிறார். இந்த இயலறிச் சித்தம் வலுப்பெறும் போது ஆன்மாவைத் தொடும், அது வெளி வர உதவும்.
அது Vital , உணர்வில் Intention – அன்னை விரும்பும் நோக்கமாக, Emotional உணர்ச்சியில் அது பக்தியாக, சேவையாக, தன்னை தருவதாக இருக்கும்.
மனதில் Mental -லில் அதை செயல்படுத்தும் அறிவு தெளிவாக வரும். உடலில் முயற்சியாக Efforts -ஆக மாறும். அதற்கான தெம்பும், தீரமும் வளரும். நடைமுறையில் அது சேரும் போது, அதாவது அனுபவத்தில் அடிப்படையான “இயலறி சித்தம்” – திடமான ஞானமாக, முதலில் அறிவில் Insight -உட்பார்வையாக மாறும்.
பின் உணர்வில் Intuition – உள்ளுணர்வாக மாறும், பின் உணர்ச்சியில் – Instinct , இயலறித் திறனாக, அதாவது இறைவனின் குரலாக மாறும்.
உட்பார்வை, உள்ளுணர்வு போன்றவை நமக்கு ஓரளவு புரியும். Instinct என்பதை புரிந்துக் கொள்ள ஒரு உதாரணம். தாய்மை என்று நாம் நினைக்கும் உணர்வுகளோடு, குழந்தை வளர்ப்பு பற்றி ஒன்றுமே தெரியாத இருபது வயது இளம் பெண் , தான் பெற்ற குழந்தையின் செய்கைகள், உடல் மொழிகள், குரலை, சிணுங்கலை, எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், புரிந்துக் கொள்ளும் ஒரு நிலை இருக்கும். அதை புரிந்து கொள்ள முயன்றால் அதை வைத்து, Instinct -ஐ, அன்னையின் குரலை புரிந்துக் கொள்ள முடியும்.
அன்னைக்காக அன்னையின் தேவைகளை புரிந்துக் கொள்ள, அல்லது குறைந்த பட்சம், வாழ்வின் சூட்சும சட்டங்கள் புரிய இந்த இயலறி சித்த முறை – Instinct – நமக்கு புரிய வேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஆரம்பமாக அதன் அடையாளமாக நாம் பார்க்கக் கூடியது என்னவென்றால் இது வரை எடுத்ததெற்கெல்லாம் React செய்த நாம், Emotional -ஆன நாம், சற்றே நிதானம் பெற்றிருந்தால், வெளியே நடப்பவை நம்மை, நம் அறிவை, உணர்வை, நோக்கத்தை, பாதிக்காமல், மாற்றாமல் இருந்தால், நம் செயல்களை நாம் justify செய்ய முயலாமல் இருந்தால் , இந்த இயலறி சித்தம் நல்ல முறையில் நம்முள் Organize – ஆகிக் கொண்டு இருக்கிறது என்று பொருள்.
ஒரு நாளில், பல முறை பொய்மையின் பரிமாணங்கள் மேல் நம்பிக்கை வந்து, அதை செயல்படுத்த தோன்றினாலும், ஒரு சில முறையாவது அது சரியல்ல என்று சத்தியத்தின் பரிமாணங்களை எடுத்து செய்வது, நம் உயர் சித்தம் உருவம் பெற்றுக் கொண்டு இருப்பதற்கான அடையாளம். விளக்கு ஏற்றும் போது திரி நெருப்பை சரியாக பற்றும் வரை, பாதுகாப்பாக கையை கேடயமாக வைக்கிறோம். அதன் பிறகு அது தன்னை பார்த்துக் கொள்கிறது. அது போல ஒளி மேலெழுந்து மேல் மனதிற்கு வரும் வரை அதை கவனிக்க வேண்டியது நம் பொறுப்பு. அது அதன் பின் அது தன் நோக்கத்தை தானே நிறைவேற்றிக் கொள்ளும்.
இது கர்மயோகி பலமுறை எழுதிய நீ உள்ள இடத்தில, தளத்தில் இருந்து ஆரம்பி என்பதன் மற்றோரு விளக்கம் இது. இதற்கு நடைமுறை உதாரணமாக Token Act ஆக கர்மயோகி அவர்கள் கூறுவது – When nothing moves, start from the physical ” எதுவும் நடக்காத போது, எல்லாம் தடையாக இருக்கும் போது, எதுவும் நகராத போது, உடலிலிருந்து ஆரம்பி என்கிறார். நமக்கு தெரிந்த அத்தனை நல்லதையும் செயலாக உடலை கட்டாயப் படுத்தி செய்ய வைப்பது என்பது அதன் பொருள். உதாரணமாக Power of Organisation பற்றி சில கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். ஒரு கட்டுரையில் பெரும் கடன் பட்டவர் ஒருவர் – கடனை – வர வேண்டியவை, தர வேண்டியவை என்று விவரமாக தொகுத்து, தான் செய்ய வேண்டியதை பட்டியலிட்டு, அதை செய்ய ஆரம்பித்த பிறகு கடன் தீர்ந்த விதத்தை பற்றி எழுதியிருப்பேன். உடலில் இருந்து தொடங்குவது என்பதற்கான உதாரணம். Power of Organisation in the Physical Level.
அது போல நம் பலம் என்று நாம் நினைத்ததை , இன்று நாம் கை விட்டு இருப்போம். உதாரணமாக நான் ஈடுபட்டு இருக்கும் துறையில் கர்மயோகி அவர்கள் சொன்னதால், தினம் ஒரு விஷயம் படித்தேன். நல்ல முன்னேற்றம் வந்தது. கடந்த சில வருடங்களாக அதை செய்யவில்லை. இன்று Business சூழல் சற்று கடினமாக இருப்பதால், மீண்டும் அது போல ஒரு வாரமாக படிக்க ஆரம்பித்தேன். நேற்று ஒரு புது வகையான Coating Material செய்து தர முடியுமா என்று ஒரு பெரிய கம்பெனி கேட்டது . இது போல ஒவ்வொரு முறையும், சுத்தம் செய்தாலும், மன மாற்றம் கொண்டு வந்தாலும் இது போன்று சித்தத்தை ஒழுங்கு படுத்தினாலும், பலன் வருவதை பார்த்தும், அதனை உணர்வு ஏற்றக்கொள்ளாததால் அதை தொடர்ந்து செய்வதில்லை. பிரச்னை வரும் போதே செய்ய முடிகிறது. அதனால் உணர்வு, உடலை கட்டாயப்படுத்தி செய்ய வைப்பதை “When nothing moves , start from the physical ” என்கிறார். இந்த அனுபவங்கள், இயலறி சித்தம், ஆக்க பூர்வமான திறமையாக மாறி, நம்மை அதே சித்தத்தில், மனப்பான்மையில் இருக்க வைக்கும். வாழ்வு தரும் மறு மொழிகளை புரிந்துக் கொள்ள முடியும். Intuition , Insight , Instinct – என்று மனம் வளரும் முறை இது.
இந்த இடத்தில் WhatsApp இல் அல்லது Call -இல் அன்பர்கள் எழுப்பும் கேள்விகள் பற்றியும் கூற வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகள் திரும்ப திரும்ப ஒரே மாதிரி இருக்கும். தன்னால் செய்ய முடியாது என்பதை வேறு வேறு வார்த்தைகளில் சொல்வார்கள். ஆரம்பியுங்கள் புரியும் என்பேன். ஆனால் அதற்கு சமாதானமாக நான் நன்றாகப் புரிந்துக் கொண்டு, பிறகு செய்ய இருக்கிறேன் என்று சொல்வார்கள். சிலர் அதை பெருமையாக, நான் உயர் பள்ளிகளில் படித்ததால், ஆங்கிலத்தில் படித்ததால், ஆங்கில புதினங்களைப் படித்ததால், Logical Mind -க்கு வந்து விட்டோம். அதனால் மாற முடியவில்லை, முழுவதும் புரியும்படி சொல்லுங்கள் என்று “மிக அடக்கமாக” ச் சொல்வார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் இதை அறிவால் புரிந்துக் கொள்ள முடியாது. உயர் சித்தாலேயே , அதை நாம் வெளிப்படுத்தும் விதத்திலேயே புரிந்துக் கொள்ள முடியும் . அந்த முன்னேற்றம் உடலில் இருந்து ஆரம்பித்து விவேகம், பாகுபாடாக, இயலறி சித்தமாக மாறும் போது தான் அது புரியும் .
இதற்கும் உதாரணம் கூறுகிறேன். 2004-இல் 3000 மாத வருமானத்தில் இருந்து மாதம் 10,000 வந்து, பிறகு 1,00,000 வந்து பின் 2007-இல் ஒன்றரை லட்சம் ஆனது. அந்த Salary Certificate – TDS Form – ஐ கர்மயோகி இடம் காட்டி Blessing Packet வாங்கச் சென்றேன். நான் கொடுத்த காணிக்கையை எடுத்துச் சென்றவர் , உடனே திரும்பி வந்து – நீ விரும்பினால் கர்மயோகி உன்னைப் பார்ப்பார் என்றார். கர்மயோகி அவர்கள் குடும்ப உறுப்பினர்களைக் கூட பார்க்காத நேரம் அது. நான் தான் ரொம்ப நல்லவன் ஆயிற்றே , பிறர் நிலை பார்வை பார்ப்பவன், உலகத்திலேயே அடக்கமானவன் ஆயிற்றே – அதை கர்மயோகியிடமே காட்டினேன். யாரையும் பார்க்காத அவர் உறுதி, விரதம், யாரையும் பார்ப்பதில்லை என்ற சபதம் என்னால் உடைய வேண்டாம் அதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று மிக அடக்கமாக கூறி, சாதித்த பெருமையுடன் திரும்பினேன்.
அறிவால் சிந்தித்ததின் விளைவு இது. உயர் சித்தத்தில் யோசித்திருந்தால், இது யோகத்திற்கான அழைப்பு என்பது புரிந்து இருக்கும். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் கழித்து 2017 இல் கர்மயோகி அவர்களை நேரடியாக சந்தித்த போது , இதைச் சொல்லி , அன்று நீ வந்திருந்தால் நான் நினைத்த சில Project -களை MSS-யில் செய்து இருக்கலாம் என்றார். இதை அப்போதே சொல்லியிருக்கலாமே அப்பா என்றேன். அதற்கு உன் உணர்வு அதை உணர வேண்டும். அதை நீயே தெரிந்துக் கொள்ள வேண்டும், உன் Instinct அதை Endorse செய்ய வேண்டும் . அப்போது தான் அது அன்னைக்கான சேவையாக பலிக்கும். இல்லையென்றால் அது ஒரு வேலையாகத்தான் – என் கட்டளைக்கு ஏற்ப நீ செய்யும் வேலையாகத் தான் – இருக்கும் என்றார்.
இது போன்று பிரம்ம நோக்கம், நம் வாழ்வின் நோக்கம், அன்னையின் அழைப்பு முதலியவை புரிய வேண்டுமென்றால், சிறு விஷயங்களில் நம் மனதைப் பற்றிய பாகுபாடு நமக்கு வர வேண்டும். நம் இயல்பு, நம் இயற்கை – பழக்கம் தான் என்றால் அதை விடுவதற்கு Start from the physical என்பது முதல் படி.
இந்த இடத்தில அவர் சொன்ன ஒரு வரி என்னில் அப்படியே பதிந்து விட்டது. “To understand Higher Consciousness, you have to be touched by the pain of Ignorance” என்பதே அந்த வரி. நீ உயர் சித்தத்தை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், உன் அறியாமை தரும் துன்பங்கள், இறை நோக்கம் நிறைவேற உன்னில் உள்ள தடைகளை, அதன் வலிகளை உணர வேண்டும் என்பது அதன் பொருள்.
சமுதாயம் மனிதனை முன்னேற்ற அரசாங்கம், ஆராய்ச்சி, கல்வி போன்ற வசதிகளுக்கான ஸ்தாபனங்களை படைத்தது. அதனுடன் தொடர்பு கொள்ளும் போது தான் அதன் பயனைப் நாம் முழுமையாக பெற முடியும். அதே போல இறைவன் நம்மைப் படைத்தான் என்று எடுத்துக் கொண்டால், நமக்கு சேவை செய்ய சில ஸ்தாபனங்களைப் படைத்தான். நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்பது சில அடிப்படையான வசதிகள். அதை நம் சேவைக்கு நாம் உபயோகப் படுத்திக் கொள்கிறோமே தவிர அதை உபயோகப்படுத்த உதவும் ஸ்தாபனம் நம் வாழ்வு என்பதையும் அதையும் அவனே படைத்தான் என்பதையும் நாம் கவனிப்பதில்லை. கவனித்தாலும், புரிந்தாலும் தொடர்ந்து அது நம் நினைவில் இருப்பதில்லை.
நாம் வாழ்வை கவனிக்கவில்லை என்றாலும், அது ஒவ்வொரு நிமிடமும் நம்மை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது. எண்ணங்களை, உணர்வுகளை, பதிவு செய்துக் கொண்டு இருக்கிறது. நல்ல விஷயங்களை, நல்ல மனப்பான்மைகளை எந்த ஜென்மத்தில் செய்து இருந்தாலும், நேரம் வரும் போது இந்த ஜென்மத்தில் அதன் பலன்களைக் கொடுக்கிறது. ஆபத்தை விலக்குவதிலிருந்து அதிர்ஷ்டத்தை வர வைக்கும் வரை கணம் தவறாமல் அது தன் வேலையை செய்கிறது. சில சமயம் நம் வாழ்வில் நடக்கும் விஷயங்களை , யார் செய்த புண்ணியமோ என்று கூறுகிறோம். அதன் பொருள், நம்மில் யாரோ ஒருவர் செய்த புண்ணியத்தையும், நல்லதையும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறது என்பது பொருள்.
இவற்றையெல்லாம் சிந்தித்து புரிந்துக் கொண்டால் இன்று நம் வாழ்வுக்கான பதிவை நாமே செய்யலாம் என்பது புரியும். அதுவே வளத்திற்கும் , ஆனந்தத்திற்கும், இனிமையான வாழ்வுக்கும் ஒரே வழி என்று தெரியும். இன்னும் நன்றாக சிந்தித்தால் அது ஒன்றே மனிதனுக்கு விதிக்கப்பட்ட விதி என்பது புரியும். அது நற்பண்புகள், உயர் பண்புகள், இறைவன் விரும்பும் பண்புகள் என்று புரியும். அதுவே பிரம்மத்தின் நோக்கம், அதுவே பரிணாம முன்னேற்றத்தின் பொருள் என்று புரியும். அதுவே மனிதன் உயர்ந்து செல்லும் நிலைக்கு ஏற்ப இறைவன் இறங்கி வரும் நிலை.
சில வாரங்களில் – வேறு ஒரு தலைப்பில் – மீண்டும் சந்திக்கலாம்.