முதல் கருத்து இறைவனின் சித்தமே நம் வாழ்வில் வெளிப்படுகிறது. நான் பல முறை பல கூடல்களில் சொன்னது போல நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும், நாம் யாராக இருக்க வேண்டும் என்று இறைவன் நினைப்பதற்கும் நடக்கும் போராட்டம் தான் வாழ்க்கை. அந்த சட்டத்தை பற்றி விழிப்புணர்வு நமக்கு எப்போதும் இருக்க வேண்டியது அதை நம் உடலும், உணர்வும், மனமும் முழுதும் ஏற்றுக் கொண்டு ஆன்மாவை நோக்கி திரும்புவது, நாம் பெற வேண்டிய முதல் பொதுப்புத்தி.
நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், ஏதோ ஒரு படைப்பாற்றல் கொண்ட சக்தியின் நீட்சியாக EXTENSION ஆகத் தான் நாம் இருக்கிறோம். அது தன் விருப்பத்திற்கு ஆனந்தப்பட, அது பரிணாமத்தின் மூலம் வெளிப்பட நம்மை உபயோகப்படுத்துகிறது என்பதை தான். அதற்காக அது பல வடிவங்கள், சூழல்கள், செயல்கள், பலன்கள் ஆகியவற்றை உருவாக்குகிறது. அதை நடத்துவது அதன் பிரதிநிதியான ஆன்மா. ஆனால் நாமே, நம் மனமே அதை நடத்துவதாக நம்புவதால் நம் எதிர்பார்ப்பு நடக்கவில்லை என்றால் அது நமக்கு துன்பமாகத் தெரிகிறது. அப்படி இல்லாமல், ஒவ்வொரு தோல்விக்கும் பின் உள்ளது ஒரு இறைவனின் விருப்பம், அதன் காரணம், அதன் சட்டம் புரிந்தால் அதன் வலி நமக்குத் தெரியாது. அதன் பின் உள்ள ஆனந்தம் நமக்குத் தெரியும். அது வாழ்வில் முன்னேற்றமாக வெளிப்படும்.
முரண்பாடே உடன்பாடு, தோல்வியே வெற்றிக்கு அடிப்படை என்பது போன்ற ஏராளமானவற்றை கேள்விப்பட்டு இருப்போம். எடுத்த காரியத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக விடுதல், வாழ்வின் முரண்பாடுகளை துன்பங்களை எந்த வித சிந்தனையும் இல்லாமல் விதி என்றோ, என் ராசி என்றோ ஏற்று நடந்த இடங்கள், தோற்றத்தை வைத்து, பேச்சை வைத்து, நம்பி நாம் ஏமாந்த இடங்கள், நாம் அறிவு, விவேகம் என்று நினைத்து செய்தது அனைத்தும் தவறாக முடிந்த இடங்கள், நம் நல்லெண்ணத்திற்கு துரோகத்தை பலனாக பெற்ற இடங்கள் ஆகியவற்றை கவனித்தால், அதன் பின்னால் உள்ளது நம் விருப்பம் அல்லது நம் மனம் அல்ல. அதை தாண்டி ஏதோ ஒன்று நடத்துவது தெரியும். அதற்கு ஒரு காரணம் இருப்பது தெரியும்.
நாம் வாழ்வில் வீழ்ந்து எழுந்த இடங்களை கவனித்தால், இதற்கு எல்லாம் பின்னால் ஒரு நோக்கம், பிரபஞ்ச நோக்கம், இறை நோக்கம் இருப்பது புலப்படும். ஒரு உயர் ஞானத்தைப் பெற்று இருப்போம், ஒரு விவேகத்தை பெற்று இருப்போம். அல்லது மனப்பான்மையில் ஒரு மாற்றம் வந்து இருக்கும். உயர் சித்த பண்புகள் ஒன்றை ஏற்றுக் கொண்டு இருப்போம். குறைந்தது முன்பு இருந்ததை விட நம் திறமை, திறன் போன்றவை ஒரு வேலையில் சற்றே அதிகமாக பெற்று இருப்போம். இதன் பொருள், பிரபஞ்ச நோக்கமான மனவளர்ச்சி, பரிணாம வளர்ச்சி நம் வாழ்வில் செயல்படுகிறது என்பது தான்.
நமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் , பிரம்மத்திற்கும் இருக்கும் தொடர்பு புரிந்தால் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்பது புரிந்து விடும். மனம் என்பது நாம் பெற்றுள்ள உயர்ந்த அம்சம். ஆனால் அதுவே முடிவான அம்சம் அல்ல. அது புரிந்து கொள்வதை, அது பெறும் வாழ்க்கை அனுபவங்களை, சில சமயங்களில் ஆன்மீக அனுபவங்களை, ஞானமாக அறிவுக்கு அதனால் தர முடிவதில்லை , உணர்வும், உடலும் அதை விட கீழான நிலைகள் என்பதால் அவை தவறாக புரிந்துக் கொள்கின்றன. IT CANNOT EXPRESS IN COGNITIVE TERMS என்கிறார் கர்மயோகி.
அப்படி புரிய வேண்டும் என்றால் – உண்மையில் பரிணாமத்தில் முன்னேறுவதே , சித்தத்தில் முன்னேறுவதே ஆன்மாவின் பண்புகள் வழியில் நடப்பதே ஒரே வழி. TO UNDERSTAND DIVINE LAW, EVOLUTION OF THE SPIRIT IS THE KEY என்கிறார். நாம் அதை உணர்ந்தால் நம்மால் ஆன்மாவை வெளிக் கொணர முடியும். அதன் பிடியில் வாழ்வைத் தந்து இறைவன் அனுபவிக்க விரும்பியதை, அவன் பெற விரும்பியதை, பெற நம்மில் நாம் இடம் தர முடியும். உண்மையில் இது தான் நம் வாழ்வின் குறிக்கோள். பிறப்பின் குறிக்கோள். அது புரிந்து பரிணாமத்தில் வளரும் ஆனந்தத்தை நாம் எடுத்துக் கொண்டோமானால் அதை உணர்வு, உணர்ச்சி, உடலில், EMOTION, SENSATION AND BODY -இல் கொண்டு வர முடிந்தால் அது வாழ்வில் ஆனந்தமாக எதிரொலிக்கிறது. இதை நடைமுறையில் SELF-CONSCIOUS CONCENTRATION FOR ANANDA என்கிறார் கர்மயோகி . அதாவது இறைவன் விரும்பிய ஆனந்தத்தை, அதற்காக அவன் படைத்த உருவங்களை, அது ஏற்படுத்தும் நிகழ்வுகளை, சூழ்நிலைகளை, முடிவுகளை, பரிணாமத்தின் நோக்கத்தில் மட்டுமே பார்க்கும் போது அந்த CONCENTRATION நமக்கு வரும் போது நாம் இறைவன் அனுபவிக்க நினைத்த ஆனந்தத்திற்கு நம்மில் இடம் கொடுக்கிறோம். அது மனிதனில், பிரபஞ்சத்தில், அதன் பகுதியான வாழ்வில் நடப்பதால் , இறைவன் விரும்பும் ஆனந்தம் வாழ்வில் வெளிப்படும்போது அது வாழ்வில் முன்னேற்றமாக, சந்தோஷமாக , தோல்வியே, துன்பமே இல்லாத வாழ்க்கையாக அமைகிறது.
அடுத்து தேவையான இரண்டாவது பொதுப்புத்தி . மேலே சொன்னவற்றை கவனத்தோடும், விவேகத்தோடும், பாகுபாடோடும் பார்க்கும் விழிப்புணர்வு. நான் செய்தேன், நான் சாதித்தேனென்று நாம் நினைத்த இடங்களை இன்று இந்த கண்ணோட்டத்துடன் பாரத்தால், இது புரியும். இறைவன் ஒவ்வொன்றிலும் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் தெளிவான திட்டத்துடன் உறுதியுடன் இருப்பது தெரியும். ஒரு வலி, ஒரு துன்பம் மூலம் நம்மை அவனை நோக்கித் திருப்புவது புரிந்தால், முதலிலேயே அவன் விரும்பும் மனப்பான்மை, பண்புகளுக்கு மாறிவிட்டால், அது நேரடி ஆனந்தமாக இருக்கும். இல்லையென்றால் வாழ்வில் அடிபட்டே அதை புரிந்து சரி செய்வோம். நேரமும், உழைப்பும் வீணாவதே பலனாக இருக்கும்.
இதற்கு உதாரணமாக நாம் பிறருக்கு உதவி செய்த இடங்களை எடுத்துக் கொண்டால் , பரோபகாரம், பரிதாபம், பாவம் என்று நாம் செய்த இடங்கள் தவறாது பிரச்சினையை கொண்டு வந்தே இருக்கிறது. அதுவே இறை விருப்பமான பரிணாமத்தில் முன்னேற்றத்தை ஒட்டி – ஒருவரது சித்தம் உயர, திறமை உயர, நாம் செய்யும் எதுவும் நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும், முன்னேற்றத்தை மட்டுமே கொடுக்கும். கர்மயோகி அதை மட்டும் செய்தார். மகான் ஆனார். ஒரு செயலில் இறைவனது விருப்பம் எது என்பதில் கவனத்துடன் இருந்து அதற்கான விவேகம், பாகுபாடுடன் செயல்படுவது பொதுப்புத்தி.
விவேகம், பாகுபாடு என்னும் போது நாம் பொதுவாக ஏற்றுக் கொண்டு இருக்கும் பொதுபுத்திக்கான விளக்கத்தை COMMON SENSE என்பதை RATIONALITY அல்லது MATURITY என்னும் அளவில் உள்ள அனுபத்தை எடுத்துக் கொள்வோம். ஆனால் அவை அனைத்தும் நாம் பெற்ற அனுபவங்கள், அதை அடிப்படையாகக் கொண்ட அபிப்ராயம், கருத்து, முன் முடிவுகள், உணர்வுகள், உணர்ச்சிகள், பலன்கள் மூலம் வந்த சந்தோஷங்கள் என்று அந்த அனுபவங்களை ஒட்டியே இருக்கும். அது ஓரளவு உண்மை, பலன் அளிக்கக் கூடியது தான் என்றாலும் அந்த கால கட்டம், சூழல், மனிதர்கள், நம் மனநிலை, திறமை, அறிவு வேறு இப்போது இருப்பது வேறு என்னும் வித்தியாசம் அந்த இடத்தில வருவதில்லை. அல்லது நல்லது நடந்து இருந்தால் மீண்டும் செய்வோம், கெட்டது என்றால் மீண்டும் செய்ய மாட்டோம். அது முன்னேற்றத்தை தரும் என்றாலும் செய்ய மாட்டோம். இது அறியாமை அல்ல. பெற்ற அறிவை முழுதும் பயன்படுத்தாத ஒரு நிலை. உதாரணத்திற்கு விடாமுயற்சி, கடின உழைப்பு என்ற பெயரில் நாம் செய்வதை எடுத்துக் கொள்வோம்.
பெரும்பாலும் செய்ததையே செய்வோம். அல்லது அது சம்பந்தமாக படித்தது, கேட்டது என்று செய்வோம். அல்லது இது பற்றி எதுவும் தெரியாத, அனுபவித்து அறியாத, அல்லது செய்யாத ஒருவரின் அறிவுரையைக் கேட்டு நடப்போம். ஆனால் விவேகம் என்னவென்றால், அதன் சாரத்தை அறிவது. அது பலன் தராததற்கு காரணம் என்ன, அதன் பின்னால் உள்ள சட்டம் என்ன, அதை இயக்கும் சக்தி, மூலம் எது என்று அறிவது. அதை கண்டு பிடித்து நமக்கு ஏற்ற அளவில், நம் சுபாவம், இயற்கை ஆகியவற்றை ஒட்டி அடுத்த உயர்ந்த மனநிலையில், உயர்ந்த சித்தத்தில் செய்வது பாகுபாடு. நமக்கான விவேகமும், பாகுபாடும், நம் முன்னேற்றத்திற்கு பயன்பட்டால், அது விடாமுயற்சி அல்ல. பரிணாமத்திற்கான அர்ப்பணிப்பு. அது ஆன்மாவின் பண்பு. இறைவன் விரும்புவது. அதனால் இறை சக்தி அங்கு நமக்குத் துணை வரும். இப்போது விடாமுயற்சி மூலம் இழந்ததையும் சேர்த்து பெற முடியும்.
அடுத்தது (மூன்றாவது) அடிப்படைகளை தவிர்க்கக் கூடாது. வாழ்வனைத்தும் யோகம் என்பதன் அடைப்படை இது. மரபில் குடும்பம், சமுதாயம் யோகத்திற்கு தடை என்று நினைத்து விலகி சென்றவர்கள் உண்மையில் சந்தர்ப்பம் வந்தால் எதிலும் மாறவில்லை என்பதை பல புராண இதிகாச கதைகளை கவனித்தால் புரியும். உதாரணமாக ஒரு சராசரி மனிதனானால் வாழ்வின் சட்டங்களை மதித்து திருமண வாழ்வில் இருந்து தான் ஸந்யாஸத்திற்கு செல்ல வேண்டும். நேரடி ப்ரம்மசர்யம் பயின்றவர் மனநிலை பற்றி கர்மயோகி பல இடங்களில் எழுதி இருக்கிறார். அடிப்படை என்பதை ஒவ்வொன்றின் செயலுக்கான அடிப்படை என்று புரிந்துக் கொண்டு முழுதும் உபயோகப்படுத்த வேண்டும். அது பூர்த்தியான பிறகே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். அதன் பொருளை முழுதுமாக புரிந்து நடக்க வேண்டும். அப்போது தான் அது பலன் தரும். இல்லையென்றால் முக்கியமான காலகட்டத்தில் நாம் பின்னோக்கி சென்று அதை பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை தவறாக புரிந்துக் கொண்டு படிப்பு தேவையில்லை . DEGREE தேவையில்லை என்று 35 வயது வரை இருந்த நான் அதன் பிறகு அது இல்லையென்றால் முன்னேற்றம் இல்லை என்பதை புரிந்துக் கொண்டு அந்த வயதில், சிறு வயதினருடன் படித்தது என்பது எனக்கு நரக வேதனை.
அது போன்றது தான், நாம் எடுத்தவுடன் உயர் பண்புகளை எடுத்துக் கொள்வதும். உதாரணமாக NON -REACTION , NON-INITIATIVE என்பது மிக உயர்ந்த நிலையில் எடுக்க வேண்டியது. அதாவது அதிகாரம், பதவி, அந்தஸ்து, சக்தி, திறமை, ஆற்றல் என்று அனைத்தும் இருக்கும் போது அதை செய்யாமல் இருப்பது. அது இறைவன் விரும்பும் அகந்தையில் இருந்து வெளியே வரும் பண்பு. அப்படியில்லாமல் அதை அர்த்தமில்லாமல் எடுத்துக் கொண்டால், மனிதர்கள் முதல் வாழ்வு வரை நம் மீது ஏறி நடனமிட்டு விளையாடும். அதற்கு பெயர் அடக்கமல்ல, அடிபணிதல், அதற்கு வாழ்வு பலன் அளிக்காது.
அதே போல தான் சமர்ப்பணம் செய்து விட்டேன் என்று சொல்வதும். முதல் கட்டத்தில், நாம் அறிந்த அனைத்தையும் செய்வது, அடுத்தது அன்னையிடம் சொல்லி விட்டு நாம் அறிந்த அன்னை முறைகள் அனைத்தையும் கொண்டு வந்து செய்வது. அதை விட்டு சமர்ப்பணம் என்று சொல்லிவிட்டு எதுவும் செய்யாமல் இருந்தால், பின் அது கிணற்றில் போட்ட கல் போல இருக்கும். பின் முதலில் இருந்து ஆரம்பித்து நாமே அனைத்தையும் செய்ய வேண்டி வரும்.
(இந்த கட்டுரையின் முந்தைய பாகங்களில் இதற்கான விளக்கத்தை படிப்பை உதாரணமாகக் கொண்டு தந்து இருக்கிறேன்.) வருமானம் உயரும் போது, அந்தஸ்து உயரும் போது, பதவி உயரும் போது அந்தந்த நிலைக்கான அடிப்படைகள் பலமாக இருக்க வேண்டும். நாம் எடுக்கும் உயர்ந்த நிலைக்கேற்ற பண்பு, மனநிலை, திறமை இல்லையென்றால் நாம் வெகுநாட்கள் அந்த நிலையில் நிலைக்க முடியாது.
உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் தற்போது உள்ள பதவியில் இருந்து ஒருவருக்கு பதவி உயர்வு வருவதாக வைத்துக் கொள்வோம். அதன் பொருள், அவரது கடமை, பொறுப்பு, அவருக்கான சட்டங்கள், அனைத்தும் அடுத்த உயர்ந்த நிலைக்கு மாறுகிறது. அதன் அடிப்படை புரியாமல், அதை பூர்த்தி செய்யாமல், முன்பு இருந்த நிலையிலேயே இருந்தால், அவருக்கு பிரச்சினைகளே அந்த வேலையில் அதிகமாகும். அதற்கு அடுத்த உயர்ந்த நிலைக்கான செயல்களை எடுத்துக் கொண்டாலும், ஸ்தாபனத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்தும். அதனால் நம் நிலைக்கான அடிப்படைகளை, எல்லைகளை மீறாமல் அதை விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும் என்பதே அடிப்படை. அது திறமை, திறன், உணர்வு, உணர்ச்சி, அறிவு, ஞானம், மனநிலை, உயர்சித்தம் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
அடுத்த நான்காவது, பொதுபுத்தியாக நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது வாழ்வு – மனப்பான்மை, நோக்கம், கொள்கை ஆகியவற்றுக்குத்தான் பலன் அளிக்கும் என்பதை நாம் ஆழமாக புரிந்துக் கொள்ள வேண்டும். இதற்கு சாதாரணமாக புரிந்துக் கொள்ளும் உதாரணம், நாம் ஒரு மாடை வெட்டுவதற்கும், ஒரு கசாப்புக்கடைக்காரன் வெட்டுவதற்கும் உள்ள வித்தியாசம். நமக்கு பாவம், புண்ணியம் உண்டு அவனுக்கு கிடையாது. இதை நம் வாழ்வில் வெற்றி பெற்ற இடங்களை வைத்து பார்த்தால், எளிதாக புரிந்துக் கொள்ளலாம் . அல்லது நாம் ஏற்கனவே செய்து வெற்றி பெற்ற இடங்கள், இன்று தோல்வி அடைந்து இருந்தாலோ, அல்லது நம்மளவு அதே திறமை, சூழல் என்று அனைத்திலும் உள்ள ஒருவர் நம்மை விட அதிக முன்னேற்றம் அடைந்து இருந்தால், அதை கவனித்தால் அவருக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம் மனப்பான்மையிலோ, நோக்கத்திலோ, கொள்கையிலோ தான் இருக்கும். அவர் எடுத்து இருக்கும் உயர்ந்த நிலைகளை நாம் எடுத்து இருக்க மாட்டோம்.
உதரணமாக மாத சம்பளத்திற்கு வேலை செய்பவரை எடுத்து கொள்வோம். ஒருவர் தன் கடமையை முழுதும் கடின உழைப்பு மூலம் செய்கிறார். மற்றொருவர் நடத்தை , தட்டி கொடுத்து வேலை வாங்குவது , TEAM PLAYER என்று சொல்லும் அளவிற்கு சின்சரிட்டி, சுமுகம் போன்ற பண்புகளை கொண்டுவந்து உழைக்கிறார். இன்னொருவர் கம்பெனி உயரவேண்டும் , இந்த பொருள் எல்லோருக்கும் போய் சேர வேண்டும், நன்கு பலனாக வேண்டும் என்ற ஆர்வத்துடன் செய்கிறார் தனக்கு தெரிந்த உயர்ந்த நிலையில் அனைத்தையும் செய்கிறார். சில ஆண்டுகள் கழித்து பார்த்தால் முதலாமவர் முதலாளி ஆகி இருப்பார் , இரண்டாமவர் மிக பெரிய தலைமை பொறுப்புக்கு வந்து இருப்பார். மூன்றாமவர் பல தொழிலுக்கு அதிபர் ஆகி இருப்பார், தொழில் துறை வளர, நாடு வளர , கருவியாக ஆகிருப்பார் . மனப்பான்மைதான் வாழ்வில் அனைத்தையும் நிர்ணயிக்கிறது – வாழ்வின் மறுமொழிக்கு முக்கிய காரணம் அதுவே என்பதே கர்மயோகியின் பெரும்பாலான கட்டுரைகள் கூறுபவை.
நம் வாழ்வை நடத்துவது நம் குணம். அதற்கான விளக்கத்தை, அந்த குணத்தை, வளர்த்தது நம் அனுபவத்தை ஒட்டிய ஞானம். அது வெளிப்பட வழி வகுப்பது அல்லது அதற்கு வரையறை தருவது நம் மனப்பான்மை. அதன் மூலம் வெளிப்படுவது நம் செயல், அது நடத்தை.
நம் செயல், நடத்தையை ஒட்டித் தான் நமக்கு பலன் வரும் என்பது எவருக்கும் தெரிந்த அடிப்படை. ஆனால் நம் நோக்கம் உயர்ந்ததாக இருந்தால், மனப்பான்மை உயர்ந்ததாக இருந்தால், நம் செயல்கள் அனைத்தும் உயர்ந்த நடத்தையை, செம்மையை வெளிப்படுத்தும் என்பதும் அதற்கேற்ற பலனே வரும் என்பதும் நமக்குத் தெரியும். எந்த வேலையைச் செய்தாலும் அதற்கான உயர்ந்த பட்ச செம்மையை, மனப்பான்மையை, அறிவை தருவேன் என்னும் நோக்கம் நம் வாழ்வின் மறுமொழியை நாமே உருவாக்குவதாகும்.
இதை மேலும் புரிந்துக் கொள்ளத்தான் TOKEN ACT என்னும் முறையை கர்மயோகி தருகிறார். வழக்கமாக செய்யும் ஒன்றை அன்னை விரும்பும் மனப்பான்மை, அன்னையின் பரிணாம நோக்கம், அன்னை விரும்பும் பண்புகள் அடிப்படையில் செய்யும் போது வரும் பலன்களை கவனித்தால், வழக்கமாக நாம் செய்வதற்கும் அன்னை முறைப்படி செய்வதற்கும் உள்ள வித்தியாசம், அதில் வரும் அபரிமிதமான பலன் புரியும். இந்த அடிப்படை புரிவது வெறும் பொதுப்புத்தி மட்டுமல்ல. இதுவே வாழ்வின் முன்னேற்றத்திற்கு, முழுமையான ஞானத்திற்கு பரிணாமத்திற்கு, நீயே இறைவனாவதற்கு இதுவே FORMULA என்கிறார்.
கர்மயோகியின் எழுத்துக்களை நான் புரிந்து கொண்ட விதம் உங்களுக்கு பிடித்து இருந்தால், அது உண்மை றன்று நீங்கள் நினைத்தால் -பிறருக்கு , பிற அன்னை அன்பர்களுக்கு பகிரவும். இதற்கான வாட்ஸாப்ப், டெலெக்ராம் லிங்க் மேலே இடது புறம் உள்ளது.