இவை எல்லாம் நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் நாம் சித்தப்பூர்வமாக இருக்க வேண்டும். நம் பார்வை உயர்சித்ததை நோக்கியதாக இருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் அனைத்து நிகழ்வுகளையும், முரண்பாடுகளையும் நாமறிந்த உயர்ந்த அறிவில், ஞானத்தில் பார்க்க வேண்டும்.
நாம் செய்யும் அனைத்தையும் அப்படி பார்த்தே செய்வதாக நினைப்போம். உயர்ந்த பட்ச அறிவு கொண்டு அந்த முடிவுகளை எடுப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையில் நாம் உணர்வுபூர்வமாக அனைத்தையும் செய்து விட்டு அறிவால் செய்வதாக நினைப்போம்.
உதாரணமாக தன்னம்பிக்கை என்ற ஒன்றை எடுத்துக் கொள்வோம். தன்னம்பிக்கை என்பது நம்மை பொறுத்தவரை ஞானத்தின் சாரம். நம் அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த வெற்றிக்கான சாரம். இதில் தோல்வி வராது என்னும் நிலையே தன்னம்பிக்கை வரும்நிலை. அப்படி என்றால் நான் தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட இடங்கள் அனைத்திலும் எனக்கு வெற்றியும், முன்னேற்றமும் மட்டுமே கிடைக்க வேண்டும். ஆனால் அப்படி இருப்பதில்லை. பெரும்பாலும் பிரச்சினைகளும், முரண்பாடுகளும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது. காரணத்தை ஆராய்ந்தால், நான் தன்னம்பிக்கை என்று நினைத்தவை உண்மையில் என் உணர்வின் எதிர்பார்ப்பு. அதன் பின் அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாற்றப்பட்ட என் அறிவு, அல்லது அதற்கு தேவையானதை மட்டுமே என் அறிவிலிருந்து, ஞானத்திலிருந்து எடுத்துக் கொண்டது தெரிகிறது. செய்த தவறுகளையே திரும்ப திரும்ப செய்தது தெரிகிறது. நாம் பரிணாமத்தில் வளர்வதில், mental development என்னும் இடத்தில இது முக்கியமாக கவனிக்க வேண்டிய கட்டம் என்கிறார். நாம் அறிவு பூர்வமாக செயல் படுவதாக நினைக்கும் இடங்கள் எல்லாம் அறியாமையும், முன்முடிவும் , ஒப்பீனியன்களும்
அடிப்படையாக அமைந்து உணர்வு மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளே. நாம் நம் அறிவின் உச்சத்தில் இருந்து செயல் படுவதே இல்லை. இதை எப்போது பார்க்கலாம் என்றால் நாம் பிறருக்கு கூறும் அறிவுரைகளில் பாதி கூட நாம் நமக்கு பின்பற்றுவதில்லை என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பிறர் பிரச்சினைக்கு நமக்கு தோன்றும் தீர்வுகள் நம் பிரச்சினைக்கு நமக்கு தோன்றுவதில்லை. தீர்வுக்கு பிறரிடம் போனாலும் , அதற்கும் நான்கு பேரிடம் கேட்டு நமக்கு விருப்பமானதை யார் சொல்கிறார்களோ அதையே ஏற்று கொள்வோம். துன்பம் முரண்பாடு வந்த இடங்கள் அத்தனையிலும் இது போன்ற சந்தர்ப்பங்கள் இருக்கும். ஆன்மாவிற்கான கல்வியில் – அன்னை – நடக்கும் அனைத்தும் வேறு ஒன்றை சொல்ல வருகிறது , அதை பார்ப்பது ஆனந்தத்திற்கான வழி என்கிறார். அப்படி பார்ப்பது முக்காலத்தையும் உணரவைக்கும் என்கிறார் கர்மயோகி. அதாவது முற்காலத்தில் நடந்ததை , நிகழ் காலத்தில் பொருத்தி பார்த்து , எதிர்காலத்தில் நடக்க இருப்பதை துல்லியமாக சொல்ல முடியும். வெற்றிகரமான வாழ்வின் மறுமொழி, கடந்த கால சமர்ப்பணம் போன்றவற்றுக்கு இது அடிப்படையான தேவை என்கிறார்.
ஒரு முறை கர்மயோகியிடம் – நீங்கள் யார் , சிறப்பான யோக பலனை அடைந்து விட்டீர்களா , முனி, ரிஷி, யோகி என்னும் நிலைகளில் இருக்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்து கொண்டே – அவை எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியதாக நிலைகள் , நான் அடைந்து இருப்பது mental -இல் ஜீனியஸ் என்னும் நிலை , அதை முயன்றால் யாரும் அடைய முடியும் . அன்னை அன்பர்கள் அனைவரும் அந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவும் எழுதுகிறேன் என்றார். அதனால் நாம் எப்போது பேசுவதெல்லாம் அறிவின் ஒரு நிலையே. சித்தத்தின் ஒரு நிலையே. நன்றாக சிந்தித்து பார்த்தால் – நமக்கு முரண்பாடு ஏற்பட்ட இடங்களில் எல்லாம் நமக்குத் தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத, நமக்குத் தெரிந்த அன்னை வழிகளை ஏற்றுக் கொள்ளாத, குறைந்தபட்சம் பொதுபுத்தி படி கூட நடக்காத இடங்களாகத் தான் இருக்கும். என் எதிர்பார்ப்புக்கான என் உணர்வின் விளக்கத்தை தன்னம்பிக்கை என்று நினைத்து விட்டது தெரியும். அதிலிருந்து வெளியே வந்து அந்த வேலைக்கான உயர்சித்த பண்புகளை பயன்படுத்தினால் சுமுகமும் , பலனும், முன்னேற்றமும் வரும்.
நாம் எதிலும் process -ஐ பார்ப்பதே இல்லை. முன் பெற்ற வெற்றிகளை ஏன் பெற்றோம், எப்படி பெற்றோம், எந்த திறமை, திறன், மனப்பான்மை அதை பெற்று தந்தது என்று ஆராய்வதில்லை. அது தெரிந்தால் இன்று வரும் முரண்பாடு, துன்பம் நமக்குப் புரியும். வாழ்க்கை அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்தாலும் அதை நாம் கவனிப்பதில்லை. அந்த நிலை வரவேண்டும் என்றால் எப்போதும் சித்தப்பூர்வமாக கான்சியஸாக இருக்கும் நிலை தேவை. அதற்காக ஒரு இடையறாத முயற்சி தேவை.
சென்ற வாரம் / முன் சொன்ன நான்கு நிலைகளில் போதிய முயற்சி இல்லாதவனுக்கு முதல் நிலையே இல்லை. போதிய முயற்சி தொடர்ந்து இல்லாதவனுக்கு, நோக்கத்திற்கான சட்டம், அது செயல்படும் விதம் புரியாதவனுக்கு இரண்டாம் நிலை இல்லை. முயற்சியும், அடுத்த கட்டத்திற்கான தகுதி, திறமை, பண்புகளை வளர்பவனுக்கு மூன்றாம் நிலை வருகிறது. முயற்சி, தகுதி, பண்புகள் ஆகியவை அவனின் சுபாவமாகவே மாறும் போது நான்காம் நிலைக்கு உயருகிறான் .
நாம் இருக்கும் தளத்தில் -இல் நான் இப்படி தான், இது இப்படி தான், இது எனக்கு வராது, இது எனக்கு முடியாது, இது தான் வேண்டும், இப்படி தான் வேண்டும் என்பது போன்ற prejudice -லிருந்து, opinions வரை இருக்க வைக்கும் அனைத்தும், நம் தோல்விக்கானக்கான அடித்தளம். துன்பம் , முரண்பாடுக்கான அடித்தளம். அது தொடர்ந்துக் கொண்டே இருக்கும் போது, அதிலிருந்து, வெளியே வரும் முறைகளை அடுத்த உயர்ந்த நிலையில் ஆராய்ந்தால், உதாரணமாக, ஆன்மாவின் பார்வையில், பண்புகளால் ஆராய்ந்தால், ஒரு புதிய உலகம் பிறக்கும் . ஒரு தளத்தில் உள்ள ஒரு உணர்வு, அனுபவம், அறிவு அதை ஒட்டிய எதிர்பார்ப்பு ஆகியவற்றின் மேல் உள்ள நம் நம்பிக்கை சரியே என்னும் பிடிவாதம் தான், அதையே பொது புத்தி என்று நினைப்பது தான், நம்மை அதே தளத்தில், அதே பிரச்சனைகளுடன் இருக்க வைக்கிறது. அடுத்த கட்டத்தில் உள்ள புதியதை காண மறுக்கிறது.
உதாரணமாக கர்மயோகி சொன்ன ஒரு சேவையை செய்ய வேண்டும் என்ற விருப்பம் நெடு நாளாக உண்டு. அதற்கான விளக்கம் பலவற்றை, அது பற்றி தெரிந்த ஒரு அன்பரிடம் கர்மயோகி மறைந்ததில் இருந்து கேட்டு கொண்டு இருந்தேன். இரண்டு மூன்று வருடங்களாக . அது மிக சிறு உதவிதான். நானாக இருந்தால் உடனடியாக செய்து இருப்பேன். ஏனோ அதுபற்றி அவர் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு தற்செயலாக அவரை கர்மயோகிக்கு எதிரானவர்களுடன் பார்த்த போதுதான் எனக்கு உண்மை புரிந்தது. அவர் ஆரம்பம் முதலே அருளுக்கு கர்மயோகியும் – லாபத்திற்கு பிறரும் என்று தெளிவாக இருந்தது புரிந்தது. என்னுடைய prejudice அண்ட் opinions அந்த பார்வையை முற்றிலும் மறைத்தது புரிந்தது. அது புரிந்த பிறகு , அந்த ஞானத்தை பெற்ற பிறகு – அந்த சேவைக்கான சந்தர்ப்பம் என்னை தேடி தானே வந்தது.
அது போல நமக்கு ஒரு பிரச்சனை வருகிறது, ஒரு தடை வருகிறது, முரண்பாடு வருகிறது என்றால் அதை வெளியே பார்த்தால் நம் திறமை குறைவு, அறிவு குறைவு, உணர்வு குறைவு தெரியும். உள்ளே பார்த்தால் நம் சந்தேகம், நம் இயலாமை, நம் அறியாமை, நம் அப்பிராயங்கள் , நம் எதிர்பார்ப்புகள், நாம் கோட்டை விட்ட இடங்கள் என்று நம்மை limitations -இல் நிறுத்திய பல தெரியும். இந்த இரண்டையும் எதிரான நிலையில் வைத்து பார்த்தால் , அதை ஆராய்ந்தால், நாம் பெற வேண்டிய அறிவு, திறன், நேர்த்தி, ஒழுங்கு, முறை , மனப்பான்மை , பண்பு தெரிய வரும். அது பரிணாமத்திற்கான முன்னேற்றத்திற்கான ஐடியா . அதை எடுத்துக் கொண்டு நாம் மாறும் போது ஒரு முடிந்து போன செயலைக் கூட, அதன் பலனைக்கூட மாற்ற முடியும். அதுவே பரிணாமத்திற்கான , மெண்டல் டெவெலப்மென்ட் நிலை.
நாமுள்ள நிலையில், அல்லது நாம் உள்ள துறையில், நமக்கு தொடர்புள்ள துறைகளில் இந்நிலைகளை சிந்தனை செய்து ஆராய்ந்தால், இந்த நிலைகளுக்கான வேறுபாடு, அவற்றின் நிபந்தனை, சட்டம் அவை செயல்படும் விதம் ஆகியவை புரியும். நம் தோல்வி, முன்னேற்றமின்மை, முரண்பாடுகளுக்கான காரணத்தை பற்றிய ஒரு தெளிவு வரும். அந்த தெளிவை செயல்படுத்தினால், குறிப்பாக அன்னையை ஏற்றுக் கொள்வதில், அவர் விரும்பும் பண்புகளை ஏற்றுக் கொள்வதில். அடுத்தடுத்த நிலைகளை எப்படி அடையலாம் என விளங்கும். அப்போது ஒவ்வொரு அன்பரும் தன் துறையில், தன் வாழ்வில் உச்சத்தை அடைய முடியும்.
இவை அனைத்தையும் சுருக்கமாக சொல்வது என்றால் வாழ்வில் தொடர் முன்னேற்றம் பெற-
- முதலில் அன்னையின் பண்புகள் நிறைந்த – புறச் செயல்கள் செய்ய வேண்டும்,
- அடுத்தது அன்னையின் பண்புகள் நிறைந்த அக உணர்வுகள் வளர வேண்டும்
என்று சுருக்கமாக கூறி விடுகிறார் கர்மயோகி.
அப்படி நாம் இருந்தால் , அந்த நிலையே முரண்பாடு, பிரச்சினைகள் முதலியவை ஏன் வருகிறது என்பதற்கு தெளிவான விளக்கங்களை கொடுத்துவிடும். இருந்தாலும், இதை மேலும் எளிமைப்படுத்த முடியுமா, அதை பற்றி வேறு ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்று தேடும் போது accomplishment – சாதனை பற்றிய கட்டுரைகளில் மற்றும் 100 கோடி புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களில் முக்கியம் என்றும் சாரம் – essence என்றும் நான் கருதியவற்றை அடுத்த வாரம் தருகிறேன்.