20 – வது வழி மற்றும் முடிவுரை:
பரிணாமத்தில் முன்னேற நினைப்பவர்கள், அல்லது வாழ்வில் சாதிக்க நினைப்பவர்கள், என்று எந்த நோக்கம் இருந்தாலும், அதற்கான அறிவு, உணர்வு இருந்தாலும் அது செயலாக வெளிப்பட வேண்டியது உடலின் மூலமே. அதனால் தான் முன்னேற விரும்புவர்களுக்கு, சாதகர்களுக்கு, உடல் வெண்கலம் போல இருக்க வேண்டும் என்று அன்னை கூறுகிறார். ஆன்மீக ஸ்தாபனங்கள் ஏற்றுக் கொள்ளாத உடல் பயிற்சிகளை ஆசிரமத்திற்கு கொண்டு வந்ததோடு அதற்கு தியானம் போன்றவற்றை விட அதிக முக்கியத்துவத்தை அதற்கு கொடுத்தார். உடல் அதன் இயல்பில் இருக்க வேண்டும் என்பதே அதன் தத்துவம். புரிய வேண்டும் என்றால் ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். நாம் தினமும் காலணி அணிந்து கொள்கிறோம். அது பற்றி நாம் நினைப்பது கூட இல்லை. என்றாவது கால் உறுத்தினால், காலை கடித்தால் நம் கவனம் அங்கு செல்கிறது. அதாவது கால் தன் இயல்பில் இருந்து மாறி இருக்கிறது. அது போல அனைத்து வலிகளும், அனைத்து இயாலாமைகளும், குறைகளும் , நோய்களும், உடலின் இயல்பு மாறுவதற்கான அடையாளம். அதை அடைய விடாமல் தடுப்பது உடற்பயிற்சி. உடற்பயிற்சி மூலம் ஊனத்தைக் கூட மாற்ற முடியும் என்கிறார். அதனால் தவறாத உடற்பயிற்சி முக்கியம்.
என்னை எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ நாற்பது வயது வரை கண்டதையும் சாப்பிட்டு, குடித்து, ஒரு ஒழுக்கமில்லா வாழ்வை நடத்தியவன். ஆனால் அதன் பிறகு ஏறத்தாழ 20 வருடம் நடைப்பயிற்சியை விடாமல் செய்து வருகிறேன். அது தான் என் இன்றைய ஆரோக்கியத்திற்கு ( என் வயது 60) காரணம் என்று நினைக்கிறேன்.
அது போல உணவை ருசிக்காக சாப்பிடுவதை விட்டாலே வாழ்வின் ரசா புரியும் என்பார் கர்மயோகி. குறிப்பாக உணவால் தான் நாம் செயல்படுவதற்கான சக்தி வருகிறது என்பது முழு உண்மையல்ல. நம் ஆர்வம் தான் நம் செயலுக்கு தேவையான சக்தியைத் தருகிறது என்பதே உண்மை. சிறு பிள்ளைகள், பசிக்காமல் மணிக்கணக்கில் விளையாடுவது, நாமே பசி தெரியாமல் நாவல் படிப்பது , பசி தெரியாமல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது போன்ற நேரங்களை கவனித்தால் உணவு தான் சக்திக்கு காரணம் என்பது உண்மையல்ல என்பது புரியும். அடுத்த வேலைக்கு தேவையான சக்தியை உடலுக்குத் தரும் அளவிற்கு உணவு எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று கர்மயோகி கூறுவார். அது போன்று இரவு மட்டுமாவது இருக்க முயல வேண்டும். புலால் உணவை தவிர்ப்பதை பற்றி அன்னை நேரடியாக கூறவில்லை என்றாலும், அது நம் சித்தத்தை பாதிக்கும் விதத்தைப் பற்றி விளக்கி இருக்கிறார் ( இது பற்றி இதே வலைதளத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்). அதனால் அதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதை முடிவில் அனுபவிப்பது உடல் என்பதால் அது பற்றிய கவனம், நமக்கு மிகவும் அவசியம். அதற்கான முறைகள் , அதற்கான பயிற்சி இருபதாவது வழி .
முடிவுரை
கர்மம் சுபாவத்தின் மூலம் மட்டுமே பலிக்க முடியும். அதிலிருந்து வெளியே வருவதே ஆனந்தத்திற்கான வழி என்ற அடிப்படை தத்துவம் சற்றே பிடிபட்ட பிறகு, அது எனக்கு மிகவும் பிடித்து, பிறகு அந்த கண்ணோட்டத்தில் என்னை, மனிதர்களை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மனித சுபாவம் புத்தகத்தில் கர்மயோகி குறிப்பிட்டுள்ள சுமார் நானூறு POINT களின் பார்வையில் பார்க்கும் போது என் முன்னேற்றம் எப்படி ஏற்பட்டது அல்லது தோல்வி எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய தெளிவு, அதன் சட்டம். அது செயல்படும் விதம், அதற்கு வாழ்வு தரும் மறுமொழி புரிய தொடங்கியது. என் வாழ்வை மாற்றியதாக நான் நினைத்த இருபது வழிகளை தொகுத்து தந்தேன். இது தவிர குறிப்பாக PATIENCE, PERSISTENCE, PERSEVERANCE, GRATITUDE என்பது பற்றியும் BELIEF, FAITH, TRUST, CERTITUDE, என்பது போன்றவற்றையும் SYNTHESIS OF YOGA அடிப்படையில் நிறைய PERSONALITY DEVELOPMENT க்காக எழுதியிருக்கிறார். அவை கிட்டத்தட்ட ADVANCED CLASS போல. அதனால் அதை இங்கு கொண்டு வரவில்லை. அனைவருக்கும் தெரிந்த ஆனால் செய்யாத இருபது வழிகளை மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன். இதிலேயே கூட DECISION பற்றிய கர்மயோகியின் கருத்துக்கள் மிக வித்தியாசமானவை. நேரம் இருப்பவர்கள் SEARCH போட்டு படிக்கலாம். ஓரளவு இந்த வலைத்தளத்தில் ஆங்கில கட்டுரையாக பதிவிட்டு உள்ளேன். நேரமின்மையால் தமிழாக்கம் செய்ய முடியவில்லை.
இந்த இருபது வழிகளும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்தால் அதற்கான செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். அது நம் சுபாவத்திற்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அது முதலில் நமக்கு நினைவில் இருக்க வேண்டும். காரணம் ,பேசும் போது, கேட்கும் போது, படிக்கும் போது அனைத்தும் நன்றாக இருக்கும். எளிதாகத் தெரியும். ஆனால் செயலில் ஒரு சிறு அசைவும் வராது. அதற்கு முன்னேற வேண்டும், நான் மாற வேண்டும், பல மடங்கு வளம் பெற வேண்டும் என்னும் ஆர்வம் தீயாக இருக்க வேண்டும். அதற்கு முதல் படி ஒவ்வொரு POINT ஆக எடுத்துக் கொண்டு இதை செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், செய்ய முடியவில்லை என்றால் ஏன் முடியவில்லை எது தடுக்கிறது என்று எழுத வேண்டும். சிந்தனையில் செய்தால் , அதற்கான பதில் , சால்ஜாப்பு ஆயிரம் ,இருக்கும். ஆனால் அதை எழுத வேண்டும் என்றால் ஒரு தெளிவு இல்லாமல் முடியாது. குறிப்பாக கேள்விகளாக – அதற்கு YES OR NO பதிலாக இருந்தால் முழு தெளிவு பெற்றுவிட்டதாக பொருள். அது போல் ஞாபகத்தில் கொள்ள ACRONYM ஆக மாற்றிக் கொள்ளலாம். அன்னையின் SYMBOL ஐ அதன் பண்புகளை நினைவில் கொள்ள 3G 3P SHECAR என்று நான் அறிமுகப்படுத்தி அது பெரும் வரவேற்பை பெற்றது (GRATITUDE, GOODNESS, GENEROSITY, PROGRESS, PERSEVERANCE, PEACE, SINCERITY, HUMILITY, EQUALITY, COURAGE, ASPIRATION, RECEPTIVITY)
அது போல ஒவ்வொரு point க்கும் நமக்கு ஏற்றாற்போல செய்ய முடியும்.
தெளிவு வேண்டும் தெளிவு கட்டுப்பாடாக வேண்டும். கட்டுப்பாடு, பழக்கமாக வேண்டும், பழக்கம் சுபாவமாக மாற வேண்டும் என்பது கர்மயோகி சொல்லும் மாற்றத்திற்கான அடிப்படையான தத்துவம். அதை U.D.E.B என்று ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். UNDERSTAND, DO, EXPERIENCE, BE — என்பதன் சுருக்கம் ஒரு விஷயத்தின் சாரத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். பின் அதை செய்ய வேண்டும். அந்த அனுபவத்தை பெற வேண்டும். பின் அதுவாகவே மாற வேண்டும். அதை நம் மனநிலைக்கு ஏற்ற புரிதலில் தான் ஆரம்பிப்போம் என்பதால் நம் சுபாவத்தை ஒட்டி நாம் இருக்கும் நிலையில் ஆரம்பிப்போம். அது தரும் அனுபவம் நாம் யார் என்பதைப் புரிய வைக்கும். உதாரணமாக நான் விடாமுயற்சி உடையவன், நான் கடின உழைப்பாளி என்ற எண்ணம் உடையவராக இருந்தால் அதை இப்பொது ஆராய்ந்தால் நம்மைப் பற்றி நமக்கு புரியும். விடாமுயற்சி என்ற பெயரில் செய்ததையே செய்து கொண்டு இருப்பது புரியும். அப்போது இங்கு விடாமுயற்சி பற்றி கர்மயோகி சொன்னது நினைவுக்கு வரும். செய்வோம். நாம் கடின உழைப்பாளி அல்ல. பெரும்பாலும் வெட்டி வேலை, வதந்தி, கதை, சீரியல் என்று இருக்கிறோம் என்பது புரியம். எந்த வேலையிலும் ஒரு ஒழுங்கு, சுத்தம், செம்மை இல்லாதது புரியும். அப்போது அதற்கான POINT நினைவுக்கு வரும். அது புரிந்த பிறகு அதற்கு எதிரான நிலை அல்லது நம் முன்னேற்றத்திற்கான வாழ்வு நிலையாக மாற வேண்டும். அது அனுபவம். பின் அதுவே நம் சுபாவம் என்று மாற வேண்டும். கடின உழைப்பு, செம்மை, ஒழுங்கு இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்னும் நிலை வர வேண்டும்.
அப்படி செய்யும் போது அதற்கான சூழல், மனிதர்கள், திறமை , அறிவு தானே தேடி வருவதைக் காண முடியும். அதை செய்து பார்த்தால் தான் அனுபவிக்க முடியும். அப்போது தான் அது நம் முன்னேற்றத்திற்கான முயற்சியாக, நமக்கு ஆனந்தம் தரும் விஷயமாக இருக்கும். இல்லை என்றால் அது யாருக்காகவோ செய்யும் உணர்வையேத் தரும். முன்னேற வேண்டும் என்று முடிவு செய்த பிறகு, அதற்கான வழிகளாக சில தெரிந்த பிறகு, அதன் மேல் நம்பிக்கை வந்த பிறகு, அதை செய்யாமல் இருப்பது கயமை. நாம் முன்னேற விரும்பவில்லை என்பதையே காட்டும். யாரவது எனக்காக செய்து பலனை எனக்குத் தரமாட்டார்களா என்று மனம் நினைக்கும் கயமை அது.அப்படி செய்ய முடிவு செய்தால் நாம் இருக்கும் நிலையில் உடனே ஆரம்பிக்க வேண்டும். அதற்குத் தான் டோக்கன் ஆக்ட் “TOKEN ACT ” என்பது பற்றி நிறைய எழுதியிருக்கிறார் கர்மயோகி. உதாரணமாக இந்த இருபதில் அல்லது நாம் அறிந்த எந்த வெற்றிக்கான வழியையாவது எடுத்துச் செய்ய வேண்டும்.
உதாரணமாக ஒரு ஆரம்பமாக, அறிவுக்கு ஒன்று, உணர்வுக்கு ஒன்று, உடலுக்கு ஒன்று, ஆன்மாவிற்கு ஒன்று என்று எடுத்துச் செய்யலாம். அறிவுக்கு என்பது நான் சொன்ன ஒரு வழியான நமக்கு வருமானம் தரும் தொழில் பற்றி முழுவதும் தெரிந்துக் கொள்வது. அது சம்பந்தமாக பழக்கமாக செய்யும் வேலையின் பின்னால் உள்ள PROCESS, அது ஏன் அப்படி செய்யப்படுகிறது என்று புரிவது அடுத்த நிலைக்கு போக வேண்டிய வழியைக் காட்டும். உணர்வு என்பது இந்த வாரம் முழுதும் எரிச்சல் படமாட்டேன், நிதானமாக இருப்பேன். IMPULSIVE ஆக செயல்படாமல், சற்றே நிதானத்தோடு செயல்படுவேன் என்று எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு, இந்த வாரம் முழுதும் உடற்பயிற்சி செய்வேன், ஆரோக்கியமான உணவை உண்பேன். JUNK FOOD சாப்பிட மாட்டேன், ருசிக்காக சாப்பிட மாட்டேன் என்று ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். ஆன்மாவுக்கு என்பது ஆன்மா விரும்பும் பண்புகள். செய்யும் வேலையை செம்மையாக செய்வேன், இறைவனுக்காக செய்வேன், பிறர் நிலை பார்வை பார்ப்பேன், முழு அமைதியில் இருப்பேன், தைரியமாக இருப்பேன். சத்தியத்தை பின்பற்றுவேன், நன்றியறிதலோடு இருப்பேன் என்று ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.
வாரம் ஒன்று என்றால் கூட இருபது வாரத்தில் அனைத்து முறைகளும் புரிந்து விடும், பிடிபட்டு விடும். பின் அவற்றை நமக்கு ஏற்றவாறு மாற்றி பின்பற்றலாம். என் வாழ்வில் நான் பின்பற்றி முன்னேறியதை பற்றி பல சொற்பொழிவுகளில் சொல்லியிருக்கிறேன். அதனால் இதை எல்லாம் ஏதோ கட்டுரைக்காக எழுதியது அல்ல. நானும் என் நண்பர்கள் சிலரும் பின்பற்றி ஒரு குறிப்பிடத்தக்க நிலையை வாழ்வில் அடைந்து இருக்கிறோம்.
இந்த முறைகள் அனைத்திலும் கர்மயோகியின் நல்லெண்ணம், அன்னை அன்பர்கள் அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என்னும் அவரின் நல்லெண்ணம், உள்ளீடாக உள்ளது. அது நம் சிறு முயற்சிக்கும் பெரிய பலனைக் கொடுக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது, கொடுத்திருக்கிறது.
உண்மையில் இது ஒரு வகையான CONCENTRATION , MEDITATION . இது நம் PERSONALITY சுபாவம், அபிப்ராயம், விருப்பு வெறுப்புகள், முன் முடிவுகள், COMFORT ZONE அனைத்தையும் விட்டு அனைத்தையும் நம் முன்னேற்றம், நம் உயர் சித்தம் நம் பரிணாமம் என்ற நோக்கிலேயே பார்க்க வைப்பதால் நம் பார்வை, ஆர்வத்திற்கு ஏற்ற புரிதலை, உயர் சித்தங்களை, உயர் மனநிலைகளை திறமைகளை, ஞானத்தை தானே தந்து விடும். கர்மயோகி இந்த நிலையை MENTAL ACCOMPLISHMENT என்கிறார். நம் அறிவு தன்னை பூர்த்தி செய்துகொள்ளும் நிலை. அகந்தையின் பிடியில் இருந்து வெளியே வந்து ஒரு ஆன்மீக ஆற்றலை நம்முள் உருவாக்குவதற்கான முன் நிலை இது. இந்த ஆற்றல் நம் திறமையில், உணர்வில், உடலில் வெளிப்படும் போது நம்மால் நாம் விரும்பும் வாழ்வின் மறுமொழிகளை பெற முடியும்.
இத்தகைய கட்டுரைகள் பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன், வரவேற்கிறேன். rameshposts@gmail.com / WhatsApp / Telegram = +91 80144 22222