வாழ்வு என்பதே நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும் , நாம் யாராக இருக்கவேண்டும் என்று இறைவன் நினைப்பதற்கும் நடக்கும் போராட்டம்தான் வாழ்க்கையாக நமக்கு தெரிகிறது என்கிறார் கர்மயோகி. அப்படி என்றால் இறைவன் நினைப்பதையே நாமும் நினைத்தால் இறைவன் ஆனந்தப்படும்போது நம் வாழ்வும் ஆனந்தமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. அப்படியென்றால் மனம்தான் அந்த ஆனந்தத்தை தடுக்கிறதா – அல்லது மனதை கருவியாக பயன்படுத்தி இறைவன் நம்மை – தன்னை நோக்கி திருப்புகிறானா. அல்லது இந்த உலகம் என்பது மாயையா , இறைவன் விரும்பிய ஒரு ஆனந்தத்தின் கற்பனைத் தோற்றமா , அல்லது ஒரு வினை செய்து அதற்கான பலனை அனுபவித்து அதன் மூலம் ஞானம் பெறும் ஒரு கர்ம சக்கரமா என்று எண்ணும் அளவிற்குத்தான் இருக்கிறதா? அல்லது நம் மனதை கொண்டு இறைவன் தன் ஆனந்தத்தை இயக்கும் விளையாட்டோ, தந்திரமோ என்று எண்ணும் அளவிற்குத்தான் இருக்கிறதா?
இந்த உலக வாழ்விற்கு, ஒரு மனிதன் மூலம் நடக்கும் விஷயங்களுக்கு ஒரு உள்ளார்ந்த பொருள் இருக்கிறது. காரணம், இது போன்ற கேள்விகள் சந்தேகங்கள், நமக்கு அடிக்கடி எழும். நாம் ஏன் பிறந்தோம். நம் வாழ்விற்கு பொருள் இருக்கிறதா, எதற்காக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம், எதை நோக்கிப் போய் கொண்டு இருக்கிறோம். இது எதுவும் புரியவில்லை என்றால், உலகில் உள்ள அனைவரும் இப்படிப்பட்ட ஒரு அர்த்தமற்ற வாழ்வை தான், புரியாத வாழ்வைத் தான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்களா என்ற கேள்வி அடிக்கடி வருகிறது. நமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் , பிரம்மத்திற்கும் இருக்கும் தொடர்பு புரிந்தால் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்பது புரிந்து விடும். மனம் என்பது நாம் பெற்றுள்ள உயர்ந்த அம்சம். ஆனால் அதுவே முடிவான அம்சம் அல்ல. அது புரிந்து கொள்வதை, அது பெறும் வாழ்க்கை அனுபவங்களை, சில சமயங்களில் ஆன்மீக அனுபவங்களை, ஞானமாக அறிவுக்கு அதனால் தர முடிவதில்லை , உணர்வும், உடலும் அதை விட கீழான நிலைகள் என்பதால் அவை தவறாக புரிந்துக் கொள்கின்றன. It cannot express in cognitive terms என்கிறார் கர்மயோகி.
அப்படி புரிய வேண்டும் என்றால் – உண்மையில் பரிணாமத்தில் முன்னேறுவதே , சித்தத்தில் முன்னேறுவதே ஆன்மாவின் பண்புகள் வழியில் நடப்பதே ஒரே வழி. To understand Divine law, Evolution of the Spirit is the key என்கிறார் கர்மயோகி . நாம் அதை உணர்ந்தால் நம்மால் ஆன்மாவைவெளிக் கொணர முடியும். அதன் பிடியில் வாழ்வைத் தந்து இறைவன் அனுபவிக்க விரும்பியதை, அவன் பெற விரும்பியதை, பெற நம்மில் நாம் இடம் தர முடியும். உண்மையில் இது தான் நம் வாழ்வின் குறிக்கோள். பிறப்பின் குறிக்கோள். அது புரிந்து பரிணாமத்தில் வளரும் ஆனந்தத்தை நாம் எடுத்துக் கொண்டோமானால் அதை உணர்வு, உணர்ச்சி, உடலில், emotion, sensation and body -இல் கொண்டு வர முடிந்தால் அது வாழ்வில் ஆனந்தமாக எதிரொலிக்கிறது. இதை நடைமுறையில் self-conscious concentration for Ananda என்கிறார் கர்மயோகி . அதாவது இறைவன் விரும்பிய ஆனந்தத்தை, அதற்காக அவன் படைத்த உருவங்களை, அது ஏற்படுத்தும் நிகழ்வுகளை, சூழ்நிலைகளை, முடிவுகளை, பரிணாமத்தின் நோக்கத்தில் மட்டுமே பார்க்கும் போது அந்த concentration நமக்கு வரும் போது நாம் இறைவன் அனுபவிக்க நினைத்த ஆனந்தத்திற்கு நம்மில் இடம் கொடுக்கிறோம். அது மனிதனில், பிரபஞ்சத்தில், அதன் பகுதியான வாழ்வில் நடப்பதால் , இறைவன் விரும்பும் ஆனந்தம் வாழ்வில் வெளிப்படும்போது அது வாழ்வில் முன்னேற்றமாக, சந்தோஷமாக , தோல்வியே, துன்பமே இல்லாத வாழ்க்கையாக அமைகிறது.
ஆனால் அதன் அடிப்படியில் வரும் வாழ்க்கை அனுபவங்களை, சில சமயங்களில் ஆன்மீக அனுபவங்களை கூட , ஞானமாக அறிவு புரிந்து கொள்வது இல்லை. அல்லது தவறாக புரிந்து கொள்கிறோம்.
உதாரணமாக, வாழ்வில் நான் பெறும் புத்தி கொள்முதல்களை பாடங்களை அடுத்த முறை நினைவாக அல்லது உஷாராக பயன்படுத்த முடிவதில்லை. பெரும்பாலும், முன்பு செய்த அதே தவறை திரும்பச் செய்வேன். இது பெரும்பாலும் அனைவருக்கும் புரியும் அனைவரும் அதே தவறை செய்து இருப்போம் என்பதால் அதற்கான உதாரணங்களை தரவில்லை.
ஆனால் ஆன்மீக அனுபவங்களையும் நான் பெற விரும்புவதில்லை என்பது ஆச்சரியம் அளிக்க கூடியது. . உதாரணமாக, கர்மயோகி அவர்கள், பேசிக்கொண்டு இருக்கும் போதே, சில நேரங்களில் தியானத்தில் மூழ்கி விடுவார். அப்போது, நாம் எதிரில் இருந்தால், நமக்கும் அது தியானமாகவோ, Silence ஆகவோ வரும். சில வினாடிகளே என்றாலும், அது – அதுவரை அனுபவத்தறியாத உணர்வு என்பதால், அதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. காரணம், உடல் லேசாகும், அல்லது படபடப்பு வரும். , அல்லது புவியீர்ப்பு இல்லாதது போல் இருப்பதால், முன்னால் விழுந்து விடுவது போன்ற உணர்வு வரும். அதனால், இந்த அனுபவம் வேண்டாம் என்றே தோன்றும். அதே போல, சில நேரங்களில் , சமர்ப்பணம் செய்து non -initiative என்னும் discipline -ஐ எடுக்கும் போது , குறிப்பாக, ஏதோ ஒரு காரியத்திற்காக, காரில் செல்லும் போதோ அல்லது வாகனம் ஓட்டும் போதோ சிந்தனை நின்று விடும். நாம் எங்கே இருக்கிறோம். எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரியாத அளவிற்கு இருக்கும். அந்நேரம் அது ஒரு ஆன்மீக அனுபவமாக தோன்றாது. வயதாகிவிட்டதே, மறதியாக இருக்குமா, dementia, வாக இருக்குமா என்றே தோன்றும். அதே போல சமர்ப்பணம் செய்து ஒரு காரியம் நடப்பதை விட, நான் சிந்தித்து செய்வதே எனக்கு பிடிக்கிறது .காரணம், சிந்தனையற்ற நிலை, சிந்தனை தேவை இல்லாத நிலை ஒரு ஆன்மீக அனுபவம் என்றாலும், அது எனக்கு பழக்கம் இல்லாததால், அதை நான் விரும்புவதில்லை. பழக்கத்தை தாண்டிய எதற்கும் என் மனமோ, உடலோ, உணர்வோ, இடம் தருவதில்லை என்பதே உண்மை.
அதையெல்லாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதை விட உயர்ந்த விஷயம் ஒன்று வேண்டும். அதன் பார்வை நமக்கு வேண்டும். அதை உயந்த மனதின் பார்வை, அதி மனதின் பார்வை, உயர்ந்த சித்தத்தின் பார்வை என்று எடுத்துக் கொள்ளலாம். அல்லது அன்னை விரும்பும் பண்புகள், அன்னை விரும்பும் வாழ்க்கை முறை என்று எடுத்து கொள்ளலாம். ஆனால் அது புரியாதபோது – வாழ்வே ஒரு சூன்யம், நாமெல்லாம் பூஜ்யம் , நம் கையில் எதுவும் இல்லை என்று எடுத்து கொள்கிறோம். ஆனால் கர்மயோகி அவர்கள் பார்வை வேறு. அவர் consciousness approach to management -இல் இதை concept of zero என்று சொல்லி that which exceeds our idea or experience, or a feeling of impossibility is not unmanifest. It is infinite existence என்கிறார். அதாவது பூஜ்யம் , சூன்யம் , புரியாதது, புரிந்து கொள்ள முடியாதது என்பது வாழ்வில் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதை , அத்தகைய அனுபவத்தை, இயலாமையை, முடியாது என்னும் நிலைகளை, இதற்கு மேல் தாங்க முடியாது என்னும் உணர்வுகளை – நாம் இதற்கு மேல் முன்னேற முடியாத இடங்கள், படைப்பாற்றல் இல்லாத இடங்கள் unmanifest என்று நினைக்கிறோம். ஆனால் அவை உண்மையில் infinite existence. அதன் பின்னால் தான் முன்னேற்றத்திற்கான உலகம் இருக்கிறது என்கிறார்.
முரண்பாடே உடன்பாடு என்று கூறுவது அதிலிருந்து வந்தவையே. இதை புரிந்து கொள்ள வியாபாரத்தில், வாழ்வில் பொறுத்தி பார்க்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நேரம் கிடைக்கும்போது – அந்த கோணத்தில் – அதாவது முடியாது என்னும் நிலைகளை, இதற்கு மேல் தாங்க முடியாது என்னும் உணர்வுகளை, நாம் இதற்கு மேல் முன்னேற முடியாத இடங்கள், படைப்பாற்றல் இல்லாத இடங்கள், என்ன செய்வது என்று திகைக்கும் இடங்கள் ஆகியவற்றில் நீங்கள் உங்களை, உங்கள் செயல்களை , உங்கள் அனுபவங்களை சிந்தித்துப் பார்த்தால், அதன் பின் உள்ள கோட்பாடு புரியும். இதற்கு சில business உதாரணங்களை கர்மயோகி அவர்கள் தந்திருந்தாலும் பெரும்பாலோருக்கு தெரியாத உதாரணம் “கொட்டாவி விடுதல்” பற்றி கர்மயோகி அவர்கள் கூறியிருப்பது. “கொட்டாவி விடுதல்”, தூக்கத்திற்கான அழைப்பு என்று நினைக்கிறோம். அப்படியே மனம், உணர்வு, உடல் புரிந்துக் கொண்டதால், ஆனந்தமாக படுக்கச் செல்கிறோம். ஆனால் உண்மையில் ஒரு கணம் நிதானித்து அது முடிவான இடமல்ல என்று கொட்டாவியை கவனித்தால், வெளியே விடும் காற்றுக்கு இணையாக அதன் பிறகு காற்று உள்ளே இழுக்கப்படுவது தெரியும். அதற்கு காரணம் உடல் energy க்கான oxygen -ஐ தானே தேடுகிறது. அடுத்த வேலையை செய்ய, அல்லது செய்து கொண்டு இருக்கும் வேலையைத் தொடர அது தயாராக இருக்கிறது என்பது பொருள். ஆனால் நாம் மனம் நம்புவதை செய்வதால் தூங்கப் செல்கிறோம். உண்மையில் உடல் மொழியை நன்றாக கவனித்தால், நமக்கு நல்ல தூக்கம் தேவைப்படும் போது கொட்டாவி எல்லாம் விடுவதில்லை. நேரடியாகவே தூங்க சென்று விடுவோம். இப்படி ஒரு சின்ன விஷயத்தில் கூட நாம் முடிவு என்று நினைப்பதற்கு பின்னால் ஒரு பெரிய energy இருக்கிறது என்கிறார். Every finite has the capacity to invoke infinite பரிணாமத்தின் அடிப்படை கோட்பாடு. அதுவே வாழ்வின் முன்னேற்றத்திற்கு பின்னாலும் இருக்கிறது. இது ஒரு சுவாரசியமான உதாரணம் என்பதற்காக சொன்னேன். செய்து பார்க்க வேண்டாம். காரணம், அப்படி கொட்டாவி விடும் போதெல்லாம் இது energy என்று நினைக்க ஆரம்பித்து விடுவேன். அது ஒரு auto suggestion போல எனக்கு தூக்கம் வரவில்லை எனபதுபோல ஆகி சில மாதங்கள் , தூக்கம் வராமல் அவதிப்பட்டேன்.
அப்படி ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஒரு infinity இருக்கிறது என்னும் போது நாம் – சக்தி, ஆற்றல், சுதந்திரம், இறைவன், ஆனந்தம், நிரந்தரம் ஆகியவற்றை மட்டும் தானே வாழ்வில் காண வேண்டும். அனுபவிக்க வேண்டும். ஆனால் நாம் பார்ப்பதெல்லாம் பகுதியான, குறைவான, எல்லாவற்றையும் பற்றி நிரந்தர தன்மை இல்லாத- சந்தேகம், துன்பம், பயம் நிறைந்த, இறப்பை பற்றிய பயம் உள்பட எல்லாவற்றையும் வரையறையுடன் கூடியதாகவே பார்க்க முடிகிறது. finite ஆகவே பார்க்க முடிகிறது. Infinite consciousness என்பதே நமக்கு இல்லை. Falsehood , அறியாமை, இருள், unconsciousness , தவறுகள், இயலாமை, தமஸ் போன்றவையே நம் அறிவில், உணர்வில் உடலில் இருக்கிறது. அதுவே நமக்குத் தெரிகிறது. ஆன்மா என்று ஒன்று இருப்பது அதை வெளிப்பட தயாராக இருப்பது. அது இறைவனின் பிரதிநிதி என்று நமக்குத் தெரியவில்லை.
அப்படி ஒன்று இருக்கிறது என்று தெரிந்து அதன் பார்வையில், அல்லது நமக்கு புரியும் படி சொல்வதானால், அன்னையின் பார்வையில் பார்த்து, இறைவனுக்கான ஆர்வம் மனிதனுள் தூண்டப்பட்டால் மனித மனமானது அடுத்த கட்ட உயர்ந்த நிலைகளை எட்ட முயற்சி செய்கிறது. அப்போது இறைவன் தனி மனிதனில், தன் இருப்பை வெளிப்படுத்துகிறான். மனது அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்கிறது. மனித மனதிலிருந்து அதி மனதிற்கு உயர்வது, அதன் மூலம் இறை வாழ்வுக்கு உயர்வது மனித வாழ்வின் லட்சியமாக மாறுகிறது. அது இறைவன் விரும்பும் மற்றம் என்பதால் வாழ்வில் ஆனந்தத்தை தவிர , முன்னேற்றத்தை தவிர வேறெதுவும் நடப்பதில்லை.
தொடர்ச்சியை அடுத்த அடுத்த வாரங்களில் பேசலாம்.