வாழ்வு நம் அனைத்து செயல்களையும் நம் முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்துகிறது பரிணாமத்தில் முன்னேறவே பயன்படுத்துகிறது அதுவே THY WILL என்னும் போது வாழ்வு நம் மனப்பான்மையில் ஒரு முழுமையை பார்க்க விரும்புகிறது என்றே நடைமுறைக்கு எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு செயலிலும் அதற்கு எதிரான ஒரு முன்னேற்றத்திற்கான படைப்புத்திறன் உள்ள (Manifesting Values) ஒன்றை எடுத்துக் கொள்ளும் போது அந்த பண்புகள் மூலம் இறைவன் விரும்பும் ஆனந்தம் அவனுக்கு கிடைப்பதால் வாழ்வில் அது நமக்கான ஆனந்தமாக நமக்கு கிடைக்கிறது.
உதாரணமாக நாம் நம் ஆனந்தத்திற்கு என்று நினைத்து ஒரு இச்சையை ஒரு ருசியை பூர்த்தி செய்து கொள்ளும் போது , junk food ஆக இருக்கட்டும் அல்லது ருசிக்கான பிரியாணியாக இருக்கலாம், உடல் சுகம், மது, மாது, நிலம் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம் சுயநலத்திற்காக பிறரை Exploit செய்யும் குணமாக இருக்கலாம் , எதுவானாலும் அதற்கு எதிரான ஒரு கட்டுப்பாட்டை ஒரு உயர்ந்த மனப்பான்மைக்கான கட்டுப்பாட்டை அதன் பொருள் புரிந்து எடுத்துக் கொள்வது மனம் மாறுவது பரிணாமத்தில் முன்னேறுவது. அதற்கான அருள் நம் வாழ்வில் நிச்சயம் வெளிப்படும்.
அப்படி இல்லாமல் வெறும் கட்டுப்பாடாக (control) இருந்தால் அது உணர்வில் வரும் மாற்றம். அது பெரும்பலன் தராது. ஒரு கட்டுப்பாட்டின் சாரம் புரிவதுதான் மனப்பான்மையில் உயர்வு. சித்தத்தில் உயர்வு. அந்த வித்தியாசம் புரிந்தால் வாழ்வில் பிரம்மம் பண்புகளாக வெளிப்படுவது புரியும். மேலும் சில உதாரணங்களை கூறுகிறேன் அதனுள் நம்மை பொருத்திப் பார்க்கும்போது இது மேலும் புரியலாம்.
– ஒரு விஷயத்தை செலவழிக்கும் போது – அதை உருவாக்குவது எப்படி என்று சிந்திப்பது பணம், அறிவு, நேரம், எனர்ஜி – என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு அப்படி செய்ய முடியும்.
– பரிணாமத்தில் அதற்கு தடையான மனப்பான்மைக்கு எதிரான விஷயங்களை நாம் செய்யும்போது, பல காரணங்களுக்காக குடும்பம், வருமானம் ,சமுதாயம், உறவுகள், நட்புகள் என்று நாம் செய்யும்போது குறைந்தது ஒரு இடத்திலாவது நாம் அந்த உயர்ந்த நிலையை செய்வது அதற்கான மனப்பான்மையை எடுத்துக் கொள்வது.
– ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும் போது அதன் சாரத்தை அல்லது அதற்கான நோக்கத்தை ஒட்டித்தான் அந்த முடிவை எடுக்கிறோமா என்று பார்ப்பது உதாரணமாக பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்கும் பெற்றோர்கள் ஹாஸ்டல் கேண்டீன் பில்டிங் மார்பில் தரை போன்றவற்றை பார்த்து சேர்த்ததை நான் அறிவேன். கற்றுக் கொடுக்கும் முறை சற்று குறையாக இருந்தாலும் பரவாயில்லை என்னும் மனப்பான்மை உண்டு. நம் செயலுக்கான சாரம் நமக்கு தெரிய வேண்டும்.
-ஒரு சந்தேகம் வரும்போது ஒரு உறுத்தல், ஒரு தயக்கம், ஒரு பயம் வரும்போது அதற்கு எதிரான நம்பிக்கையை தரும் மனப்பான்மையை ஏற்றுக் கொள்வது.
-செலவழிக்கும்போதே முதலீடு பற்றி வருமானம் பற்றி சிந்திப்பது.
-படிக்கும் போது வேகமாக கடந்து செல்லாமல் அல்லது ஈடுபாடு இல்லாமல் படிப்பதும் பிறருக்காக பலனுக்காக படிப்பதும் அல்லது மதிப்பெண்ணுக்காக தேர்வுக்காக படிப்பதும் பழக்கமாக இருந்தாலும் அது தேவை என்றாலும் அவ்வப்போது அது தரும் ஞானத்திற்காக சாரமான அறிவைப் பெற படிப்பது.
-பழக்கமாக வழக்கமாக நாம் செய்யும் வேலைகளில் சித்தம் இல்லாமல் செய்வதில் இருந்து அதையே சித்தபூர்வமாக கான்சியஸ் ஆக செய்ய முடியுமா என்று பார்ப்பது.
-பழக்கத்தை அல்லது வழக்கத்தை ஒரு சிஸ்டத்திற்குள் – கொண்டு வர முடியுமா அதன் மூலம் காலத்தை சுருக்க முடியுமா ப்ரொடக்டிவிட்டியை அதிகப்படுத்த முடியுமா என்று பார்ப்பது,
-நாம் ஒருவரை கடமை அதிகாரம் அவர்களுக்கான நல்லது போன்றவற்றுக்காக கடுமையாக அவரை hurt செய்யும்படி நடக்க வேண்டி வந்தால் அதை கழிக்கும் வழியையும் பற்றி மனதுக்குள் சிந்திப்பது,
-ஒரு விஷயத்தில் நம் இயலாமை, அதற்கான சமாதானம், சால்ஜாப்பு, குறை கூறி தப்பித்தல், செய்யாமல் விலகுதல், அல்லது விலக்குதல் போன்றவற்றை செய்ய வேண்டி வந்தால் அதன் எதிரான நிலைக்கான முயற்சி பற்றி புரிந்து அதை போட தயாராக இருப்பது,
-பயம் வரும் இடங்களில் அதற்கு எதிரான தைரியம் தரும் விஷயங்களை செய்ய தயாராக இருப்பது,
-சோம்பேறித்தனமான இடங்களை காரியங்களை தள்ளிப் போடும் இடங்களை கண்டறிந்து அதற்கு எதிரான determination ஆக மாற்றுவது
-கவனம் சிதறுவதை அதற்கான காரணங்களை அறிந்து கான்சென்ட்ரேஷன் ஆக மாற்றுவது
என்று நம்மால் ஒரு நாளில் நாம் செய்யும் அத்தனை செயலுக்கான அதில் உள்ள சுபாவத்தை ஒட்டி மனப்பான்மைக்கு எதிரான இறைவன் விரும்பும் பண்புகளை எடுத்துக் கொள்ள முடியும் அதுவே இறைவனை அருளாக நம் வாழ்வில் வெளிப்பட வைக்கும் .
இது போன்றவை, நம்மை பரிணாமத்தில் முன்னேற வைக்கும். இங்கு செய்யவில்லை என்றாலும், செய்யும் சந்தர்ப்பம் இல்லை என்றாலும் பரவாயில்லை – அதன், அதாவது ஒரு செயலுக்கான, ஒரு மனப்பான்மைக்கான, முழுமை முக்கியம் என்பதே இங்கு சாரம். அதுவே நம்மை அன்னையை நோக்கி நம்மை பயணிக்க வைக்கும். முழுமையை நோக்கிய பயணத்தை தொடக்கி வைக்கும். அப்போது ப்ரம்மம் நம்மை தன் கருவியாக எடுத்து கொண்டு வெளிப்பட ஆரம்பிக்கும். அது நடைமுறையில் அதீத ஆனந்தமாக வெளிப்படும். காரணம் அது இறைவன் தரும் ஆனந்தம்.
உதாரணமாக கர்மயோகி அவர்கள் வாழ்வில் நடந்த பல உதாரணங்களை படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். கர்மயோகி அவர்களின் தோட்டங்கள் வளர்ந்த விதம், அவருக்கு கிடைத்த வங்கி உதவி, ஊரில் உள்ள அனைவருக்கும் கிடைத்தது, திரும்ப கட்ட மாட்டார்கள் என்று இருந்த நிலை மாறி, அனைவரும் கட்டியது , அதன் பின் இந்தியா முழுதும் பரவியது, சுப்ரமணியன், சுவாமிநாதன் போன்றவர்கள் மூலம் வந்த விவசாய புரட்சிகள் என்று ஏராளமாக படித்திருக்கிறோம். அவையெல்லாம் பேரருளுக்கான ப்ரம்மம் வெளிப்பட்டதற்கான உதாரணங்கள். கர்மயோகி அவர்களின் வாழ்வில் நடந்த பல விஷயங்கள் பிரம்மம் மனிதனை தன் நோக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும் உதாரணங்கள்.
இதை சுருக்கமாக, முன்பு சொன்னது போல் –
- மனிதனின் முயற்சிக்கு வாழ்க்கையை உதவ செய்வது அருள்.
- மனிதனின் முயற்சிக்கு சூழலை, வாய்ப்பை ஏற்படுத்துவது அன்னை அருள்.
- மனிதனின் முயற்சியில் தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வது பேரருள் என்று கூறலாம்.
இது போன்ற அருள், அன்னை அருள் என்று சொல்லுமளவிற்கு ஏராளமான விஷயங்கள் எல்லா அன்பர்களின் வாழ்விலும் நடந்து இருக்கும். இவையெல்லாவற்றையும் அன்னை செய்தார்கள் என்று ஒரு வரியில் முடித்துக் கொள்கிறோம். அல்லது நடக்கவில்லை என்றால் எல்லாம் நன்மைக்கே என்று ஆறுதல் படுத்திக் கொள்கிறோம். ஆனால் நாம் ஒன்றை யோசிப்பதில்லை. மற்றவர்களுக்கு நடப்பது, நமக்கு ஏன் நடக்கவில்லை, நமக்கு நடப்பது மற்றவர்களுக்கு ஏன் நடக்கவில்லை. நமக்கே கூட சில சமயம் நடக்கிறது, சில சமயம் நடப்பதில்லை. இதையெல்லாம் ஏன் என்று யோசிப்பதில்லை.
கர்மயோகி அவர்கள் சொல்வது – யோசி . உனக்குத் தேவையான அருளை நீயே உற்பத்தி செய்ய முடியும். அன்னையை உன்னை நோக்கி வரவைக்க முடியும். அன்னை அருளை பெற முடியும் என்கிறார். இது சுயநலம் தான். சுயநலமும், அன்னையும் ஒன்று சேர முடியாது என்றாலும், அன்னைக்காக, அன்னையை நெருங்குவதற்கான வழி என்பதால், அன்னையை புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற அளவில் இதை ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.
ஒருவகையில் இதை அன்னைக்கான , அவர் விரும்பும் பரிணாம வளர்ச்சிக்கான இடையறாத நினைவு எனலாம். இங்கு முக்கிய நோக்கம் என்னவென்றால் அன்னையை நம் வாழ்வில் செயல்பட அனுமதிப்பது மட்டுமே. அப்படி அனுமதிக்கும் போத வரும் அருளை அது வந்த வழி எது, எந்த ஏற்புத்தன்மை அதை அனுமதித்தது (Channel for Receptivity) என்பதை ஆராய்ந்து பார்த்து கண்டுபிடிப்பது அதை அதிகப்படுத்துவது , அருளை உற்பத்தி செய்யும்.நாம் பெற்ற வெற்றிகளில் அன்னை நேரடியாக வந்து எதையும் செய்யவில்லை. ஒரு மனிதர் மூலமாக நம் திறமை, அறிவு, பண்பு, நடத்தை என்ற எதன் மூலமாகவோ தான் பலித்திருப்பார் . அவர் வந்த வழி தெரிந்தால் அது Channel for Receptivity. அந்த வழி ஏற்புத்தி தன்மை மிக்கதாக இருக்கிறது என்று பொருள்.
அன்பர் ஒருவருக்கு பெரிதாக எந்த திறமையும் கிடையாது. ஆனால் அவருக்கு இடையறாத முன்னேற்றம் இருந்தது. ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். எப்போதும் யாரவது ஒருவர் உதவிக் கொண்டே இருப்பார் . கர்மயோகி அவர்கள் அதற்கு காரணம் அவரது இனிமை என்றார். எப்போதும் யாரையும், கிண்டல் செய்யாமல், கஷ்டப்படுத்தாமல், polite -ஆக பழகுவார். அவர் கவனமாக , polite ஆக சாந்தமாக இருப்பார். அந்த சுபாவம், சுமுகம் . அது அன்னையின் பாதையாக அமைந்தது. காரணம் சுமுகம் அன்னை விரும்பும் பண்பு. ஒரு விதத்தில் இதுவே இடையறாத அன்னை நினைவு. Conscious ஆக அவர் அவருடைய பண்புகளின் மதிப்பை, அன்னை அவரை நெருங்கி வரும் பாதை அது தான் என்று புரிந்து அதை அவர் பிறர் நிலை பார்வை, அன்னை நோக்கில் பார்த்தல், பிரபஞ்ச நோக்கில் பார்த்தல், பிரம்ம நோக்கில் பார்த்தல் என்று விரிவு படுத்தினால், இப்போதைய அருள், அன்னை அருளாக, பேரருளாக மாறும். அதுவே நம் பண்புகளில் ப்ரம்மம் வெளிப்படும் விதம்.
அடுத்த வாரம் தொடருவோம்.