சேவை மையங்களில் சேவை செய்வது , புத்தக சேவை , காணிக்கை தருவது மட்டுமே அன்னைக்கு சேவை செய்வது என்று மூளை சலவை செய்யப்பட்டு அது தனி மனித சேவையாக , அவர்களின் கைத்தட்டலுக்கு, அவர்களின் தொடர்புக்குக்கு என்று மாறிவிட்டதை நாம் உணருவதில்லை. உண்மையான சேவை எது என்பது பற்றி கர்மயோகி கூறுவதை பற்றி நினைக்கவே மறந்து விட்டோம். உண்மையான நன்றி அறிதல் என்பது அன்னைக்கு சேவையாக வெளிப்படவேண்டும் என்றால் – அவரின் ஆற்றல் உலகில் பரவ அவர் விரும்பும் பண்புகளை எந்த அளவு நாம் பின்பற்றுகிறோம் , நம் சூழலில் அதற்கு எந்த அளவிற்கு இடம் தருகிறோம் , அதன் மூலம் அன்னைக்கான வேலை பளுவை எந்த அளவிற்கு குறைக்கிறோம், அதன் மூலம் நம் மூலம் அன்னை எப்படி பரவுகிறார்கள் என்பதில் தான் நம் சேவை முழுமை அடைகிறது. அதைத்தான் அன்னைக்கு நாம் செய்யும் உண்மையான சேவை என்கிறார். அன்னை விரும்பும் பண்புகளை எந்த அளவிற்கு நம் பின்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு நாம் அன்னைக்கு சேவை செய்கிறோம். மையத்தில் சேவை செய்வதால்அல்ல. அன்னைக்கு நன்றி அறிதலை காணிக்கை ஆக்குகிறோம்- பணம் தருவதால் அல்ல . அன்னையை பரவ செய்கிறோம் – புத்தக சேவையால் அல்ல.
இதை லைஃப் டிவைன் – இல் – வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது. வாழ்வில் இறைவனைப் பூர்த்தி செய்வது மனிதனின் தீரச் செயல் என்னும் வரிகளை எடுத்து விளக்குகிறார் கர்மயோகி. அதற்கு நம் அறியாமை அன்னை விரும்பும் அறிவாக பரிணாமத்திற்கான அறிவாக மாறவேண்டும். அகந்தைக்கான சுபாவம் அன்னை விரும்பும் சுபாவமாக மாற வேண்டும். வாழ்வில் பண்பை வெளிப்படுத்த, தன்னில், பிரம்மத்திற்கும், பிரபஞ்சத்திற்கும் இடமளிக்க, தனி மனிதனின் சுபாவம் மாற வேண்டும் என்கிறார். அந்த சுபாவத்திற்கான மனமாற்றம் – அன்னைக்கான மாற்றமாக இருந்தால் வாழ்வு மறுமொழி தர தவறுவதே இல்லை. காரணம் வாழ்வு என்பதே பரிணாமத்தின் வெளிப்பாடு. மனித முன்னேற்றத்திற்கான வெளிப்பாடு.
ஆனால் சுபாவத்தை ஒரே நாளில் குறுகிய காலத்தில் மாற்ற முடியாது என்பதால் அது ஒரு யோக முயற்சி என்பதால், அப்படி தனி மனிதன் தானிருக்கும் நிலையிலிருந்து ஒரு இழை உயர் சித்தத்தை எடுத்துக் கொண்டாலும், உயர் பண்புகளை எடுத்துக் கொண்டாலும், ஒரு இழை அடுத்த உயர்ந்த நிலைக்கு நகர்ந்தாலும், வாழ்வு மறுமொழி அளிக்கத் தவறுவதே இல்லை.
அது நமக்கு அளிக்கும் மறுமொழி அல்ல . பிரம்மம் பிரபஞ்சத்தில், தனி மனிதனில் வெளிப்படும் முறை அது. அது வெளிப்படும் அளவிற்கு நமக்கு இறைத்தன்மை வருவதால் அது ஆனந்தமாக, சுபிட்சமாக நம் வாழ்வில் வெளிப்படுகிறது. அதை இறை தன்மையோடு வருவதாக நாம் நினைப்பதால் அதை அருள் என்கிறோம்.
நாம் மாறும் நிலைக்கு ஏற்ப, முறைமாற்றம் – change , நிலைமாற்றம் – shift , திருவுருமாற்றம் – transformation க்கு ஏற்ப, நாம் பெறும் அதிர்ஷ்டத்தை அருள், அன்னை அருள், பேரருள் என்று புரிந்துக் கொள்கிறோம். நாமிருக்கும் நிலையை அது நமக்குக் காட்டும். இத்தகைய அருளை பெறுவது என்பது ஒரு process. உயர் சித்தம், உயர் பண்புகளை ஏற்று வாழ்வை மாற்ற முடியும். தோல்வியில்லாத முன்னேற்றம், ஆனந்தம் பெற முடியும் என்கிறார். எல்லாவற்றிக்கும் ஒரு எண்ணம், நோக்கம், மனப்பான்மை, பரிமாணம் இருக்கிறது. Consciousness Dimension அதுவே அந்த நிலைக்கான அருள், அன்னை அருள், பேரருளை முடிவு செய்யும்.
- தனி மனிதன் தன் பண்புகளை வெளிப்படுத்துவது அருள்.
- அவனைப் பயன்படுத்தி வாழ்வு தன்னை பூர்த்தி செய்து கொள்வது அன்னை அருள்.
- இவை இரண்டையும் பயன்படுத்தி சமுதாயம் தன்னை பூர்த்தி செய்து கொள்வது பேரருள்.
சுருக்கமாக சொல்வதானால், பரமாத்மா தம்மை வெளிப்படுத்தும் கருவியாக ஜீவாத்மா மாற வேண்டும் என்பதே மனிதனுக்கு விதிக்க பட்ட விதி. அதுவே “THY WILL ” அதற்கு இடையறாத முன்னேற்றத்தை வாழ்வின் குறிக்கோளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கிடைத்த முன்னேற்றம் போதும் என்ற எண்ணம் வரவேக் கூடாது. அந்த நிலையை நிரந்தரமாக்கி அதற்கு அடுத்த நிலைக்கு செல்ல நினைக்கும் மனப்பான்மைக்கு ஏற்றார் போலவே அருள், அன்னை அருள், பேரருள் என்று பலிக்கும்.
சைத்திய கல்வி என்று அன்னை சொன்னவற்றில் இதை ஆறாவது சட்டத்தின் விளக்கமாக கர்மயோகி அவர்கள் தருகிறார். பூரண யோகத்தின் அடிப்படையே இதில் இருப்பதால் ஆன்மா வெளிவர இது முக்கியமான சட்டம் என்கிறார்.
- உடலின் வளர்ச்சிக்கு அளவுண்டு அது இருபது வயதில் நின்று விடுகிறது.
- உணர்வின் வளர்ச்சி என்பது ஆசைகள், விருப்பங்கள், சுகங்களை ஒட்டியே இருக்கும் என்பதால் அதில் வளர்வதற்கு ஒன்றுமில்லை.
- ஆனால் மனம், மனப்பான்மையில், நோக்கத்தில், பண்பில் வளர அளவில்லை.
மன வளர்ச்சி, பண்பின் வளர்ச்சி, ஆன்மாவின் வளர்ச்சி என்று அது தொடர்ந்து வளர அளவில்லை, நாமே இறைவனாகும் வரை அதை செய்ய முடியும். ஒரு கட்டத்தை எட்டியவர்கள் அடுத்த கட்ட அன்னை முறையை வாழ்வு முறையாக்க வேண்டும். ஆனால் அது முடிவதில்லை.
அம்பானிக்கு உள்ள வாய்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்குரிய திறமை, பண்பு, விவேகம் ஆகியவற்றை பெற விரும்புவதில்லை. காரணம் அடுத்த கட்ட அன்னை முறைகளை எடுத்துக் கொள்ள பயம். அதனால் இன்றுள்ள நிலை பறிபோய் விடுமோ என்னும் பயம். அல்லது விடப் பிரியப்படாத நிலை. இதுவே போதும் என்ற மனநிலை. அதுவே என்னை கூட 6 – 8 கோடி turn over க்குள்ளேயே நிறுத்தி வைக்கிறது. இதை, நிலையை அனுபவிக்கும் ஆசை என்கிறார் கர்மயோகி அவர்கள். அனுபவிக்கிறேன் என்ற பெயரில், நாமே அதை அழிக்கிறோம். அதன் கட்டுக்குள் வருகிறோம் என்பதை உணராததால் நமக்கு வரும் அருளை நாம் தடை செய்கிறோம்.
உதாரணமாக, ஒரு வீடு வேண்டும், திருமணம் வேண்டும் , பிள்ளைகளின் எதிர்காலம் என்ற ஆர்வம் ஊதியத்திற்கு வேலை செய்பவனுக்கு பெரிய விஷயமே. ஆனால் அந்த கட்டுப்பாடு அடுத்த கட்ட நிலையான, தொழில் முனைவோர் என்பதற்கு செல்லாமல் தடுக்கிறது என்பது புரிவதில்லை. அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு மனம் போகாதது நமக்குத் தெரிவதில்லை. நாமே அருள் வரும் வழியை த் தடை செய்யும் பொது, அருள் அதை மீறி தருவதில்லை.
இது போன்று சூழலை கவனிப்பது, நம் மனதை , நோக்கத்தை, அபிப்ராயத்தை, முன் முடிவுகளை, கவனிப்பது அருளை பெற வழி. அன்னையை வழிபட ஆரம்பித்ததிலிருந்து நம் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்கள் இதுவரை எவர் வாழ்விலும் , எந்த மரபிலும் ஏற்படாத மாறுதல்கள் என்பதை உணர்ந்து ஏன் அன்னையிடம் மட்டும் இது நடக்கிறது என்று யோசிப்பது, மற்றவர்களுக்கு பலிப்பது நமக்கு ஏன் பலிக்கவில்லை, நமக்கு பலித்தது மற்றவர்களுக்கு ஏன் பலிக்கவில்லை, நமக்கே கூட முன்பு பலித்தது இப்போது ஏன் பலிக்கவில்லை என்று சிந்திப்பது – அதை அன்னை விரும்பும் பண்புகள் நோக்கில் பார்ப்பது, அவர் சொல்லியவற்றின் பொருளை அறிய முயல்வது, அதை பின் பற்றுவது, அதன் மூலம் பலிக்காதவற்றை பலிக்க வைப்பது என்பது நம் ஆர்வத்திற்கு ஏற்றாற்போல் அன்னை அருளையோ, பேரருளையோ கொண்டு வரும்.
நல்ல வேலைக் கேட்போம், நல்ல ஆரோக்கியம் கேட்போம். நல்ல கல்லூரி கேட்போம். நல்ல வரன் கேட்போம். எல்லாம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எப்படி நடந்தது என்று கேட்டால், அன்னை தந்தார்கள் என்போம். நம் பக்தி அதை சாதித்ததாக நினைக்கிறோம்.
ஆனால் அன்னையைத் தெரியாதவர்கள், பிரார்த்தனை செய்யாதவர்களுக்குக் கூட அவையெல்லாம் கிடைக்கிறதே. அது எப்படி?
இது பற்றி மேலும் அடுத்த வாரம் பேசலாம்.