பிறர் சந்தோஷம் என்று சொல்வதை நாமும் செய்து பார்க்கிறோம். யாரோ சொன்னார்கள், யாரோ செய்தார்கள் அதனால் செய்கிறோம். இப்படி செய்தால் சந்தோசம் வரும் என்று யாராவது சொன்னால் செய்கிறோம். மற்றவர்களுக்காக செய்கிறோம். நல்ல பெயர் எடுக்க செய்கிறோம். பிறரின் திருப்திக்காக, சமுதாயத்திற்காக, பிழைப்புக்காக செய்கிறோம். அதுவும் அவர்கள் செய்த வழியில் செய்ய மாட்டோம். நம் வழியில் செய்து, நாம் நினைக்கும் வழியில், நாம் நினைக்கும் விதத்தில் சந்தோஷம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
பிறரிடமும் அப்படியே நடப்போம். சிறு சிறு விஷயங்களில் கவனித்தால் கூட இது தெரியும். குழந்தை strawberry icecream கேட்கும். அதன் சந்தோஷம் புரியாமல், வேண்டாம் , chocolate icecream சாப்பிடு, நன்றாக இருக்கும் என்போம். எத்தனை சூப் பெயரை கேட்டாலும் கடைசியில் ஆர்டர் செய்வது என்னவோ தக்காளி சூப்பாகத்தான் இருக்கும். school , subject , education, வேலை என்று எதை எடுத்துக்கொண்டாலும் , குழந்தையின் சந்தோஷம் நமக்கு முக்கியமென்றாலும், அது நாம் விரும்பும் வகையில் வர வேண்டும் என்று நினைப்போம். அதுவாவது நம் சிந்தனை தானா என்று பார்த்தால் அதுவும் நாம் சிந்தித்து எடுத்த முடிவு கிடையாது சமூகம், நண்பர்கள் , குடும்பம் , ஊடகம், விளம்பரங்கள் ஆகியவற்றின் தாக்கமாகத் தான் இருக்கும்.
வாழ்வு முழுதும் சொந்தமாக சிந்திக்காமல் , மற்றவர்களுடைய தாக்கத்திலேயே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் . இதையெல்லாம் கர்மா என்ற அளவில் பார்க்காமல், விதி – rule of life – வாழ்வின் சட்டங்கள் – என்ற அளவில் பார்த்தால், நாம் எல்லாவற்றிற்கும் ஒரு formula வைத்துக்கொண்டு , ஒரு கருத்து, ஒரு அபிப்ராயம் வைத்துக்கொண்டு அதன் படியே நடப்பது தெரியும். நமக்கு, நம் பரிணாமத்திற்கு, முன்னேற்றத்திற்கு ஒத்து வராத rule -ஐ, formula -வை உடைப்பது முதல் தேவை. அது விழிப்புணர்வுக்கான அறிவு.
Life Response என்று ஒன்று இருப்பது உண்மை., நாம் செய்யும் செயல்களே, எண்ணங்களே, மனப்பான்மையே அதை நிர்ணயிக்கிறது என்பது புரிந்தால் நம் வாழ்வை நாம் மாற்ற முடியும் என்னும் நம்பிக்கை வரும். முன்பு எடுத்த முடிவுகளே நம் இன்றைய நிலைக்குக் காரணம். அப்படியானால் இன்று எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதும் உண்மை.
அப்படியானால் தவறானவற்றை செய்து ஆனந்தமாக இருப்பவர்கள் இருக்கிறார்களே என்னும் கேள்வி வரும். அதற்கு கர்மயோகி அவர்கள் தரும் விளக்கம். அவர்கள் வாழ்வு நமக்கு முழுவதும் தெரியாது. அவர் துன்பங்கள் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. செல்வாக்குள்ளவர் தவறு செய்தால் பயத்தின் காரணமாக அவரை யாரும் தட்டிக் கேட்பதில்லை. ஒரு காலத்தில் அவர் செல்வாக்கு போய் செல்லா காசு ஆகி விட்டால், அவரால் கொடுமைக்கு ஆளான ஒவ்வொருவரும் அவருக்கு தொந்தரவு கொடுப்பார்கள். காலமும் வாழ்வும் அதற்கு துணைபுரியும். அது அவர்கள் வாழ்வில் துன்பமாக எதிரொலிக்கும். ஆரோக்கியம், செல்வம், குடிப்பிறப்பு, அந்தஸ்து, முற்பிறவி புண்ணியம், அறிவு, ஆற்றல், இனிமையான பழக்க வழக்கங்கள், உற்றார் தொடர்பு, சாதி பலம், ஊரார் நட்பு என மனிதனுக்கு பல வலிமை உண்டு. அதனால் அவன் தவறு செய்யும் போது அதற்குண்டான பலன் உடனே கிடைப்பதில்லை. ஆனால் வாழ்வு பதிலளிக்க தவறுவதே இல்லை. அது நமக்கு தெரியவில்லை என்பதால் நடக்கவில்லை என்று பொருள் இல்லை.
அதற்கு உதாரணமாக கர்மயோகி அவர்கள் கூறுவது – அமெரிக்கா ஜப்பான் மேல் குண்டு போட்டதை வெற்றிகரமான செயலாக கருதப்பட்டது. ஆனால் அதன் பிறகு இன்று வரை ஜப்பானின் பொருட்களுக்கு அமெரிக்கா ஒரு பெரிய market -ஆக இருப்பதும், ஜப்பானின் சுபீட்சத்திற்கு மறைமுகமாக உதவுவதும் கவனிக்கப் படுவதில்லை. அதே போல பிரிட்டன் பல நாடுகளை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த போது, அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்தை அழிப்பதை ஒரு கருவியாக பயன்படுத்தியது. இன்று பிரிட்டன் மக்கள் தொகையில் 30% மற்ற மதம், கலாச்சாரத்தை சேர்ந்தவர்களே. அவர்கள் பிரிட்டனின் கலாச்சாரத்தை மாற்றுவது கவனிக்கப்படுவதில்லை.
நான் ஏறத்தாழ 12 ஆண்டுகள் Bar -களிலும், hotel -களிலும் வேலை பார்த்து இருக்கிறேன். என் வாழ்வில் நல்லவர் பண்பானவர் என்று சொல்லும் அளவிற்கு யாரையும் பார்த்ததில்லை. தவறான முரையில் வந்த பணத்தை மதுவுக்கும் மாதுவுக்கும் கணக்கில்லாமல் வீசி எறியும் இடம் அது. அப்போதெல்லாம் இது தான் வாழ்வுமுறை போல இருக்கிறது. அப்படி இருந்தால் தான் பெரும் பணம் பெறமுடியும் போல இருக்கிறது என்றே நினைத்திருந்தேன். ஆனால் அதன் பிறகு கடந்த 16 வருடத்தில் அவர்களின் வாழ்வை பார்க்கும் போது பெரும்பாலானோர் வாழ்வை, சொத்தை இழந்திருக்கிறார்கள். கட்சி காலத்தில் சிறையில் வாடி செத்தார்கள். அடுத்த தலைமுறை அதை அழித்து இருக்கிறது. சிலருக்கு நடந்தது பார்க்கும்போது இந்த கொடுமை வேறு யாருக்கும் வரக் கூடாது என்னும் அளவிற்கு இருந்தது.
நமக்கு வரும் துன்பங்களை பற்றிய கேள்விக்கெல்லாம் ஒரே பதிலைத் தான் கர்மயோகி அவர்கள் தருகிறார்கள். நல்லது- கெட்டது , பரிசு-தண்டனை, இன்பம்-துன்பம், எது என்றாலும் அது ஒரு சுபாவத்தின் மூலமாக மட்டுமே வர முடியும் என்பதே. விதியோ, ஊழோ, செயல்படுவதற்கான வழி அல்லது கருவி -channel or instrument வேறு கிடையாது. பிரச்சனை தரும் சுபாவத்தை தடை செய்ய நம் personality மாற வேண்டும். தடைகளும் துன்பங்களும் நம் பரிணாம வளர்ச்சிக்காகவே வருகிறது. அதன் பின்னால் உள்ள பிரம்ம நோக்கம், பிரபஞ்ச நோக்கம், வெளிப்படவே வருகிறது என்பது தெரிந்தால், அதன் பிரதிநிதி உள்ளேயே இருப்பது தெரியும். அது மனிதன் , பிரம்மம் , பிரபஞ்சம், மூன்றும் சேருமிடமான ஆன்மா. அதை causal plane -ஆக , செயல் தொடங்குமிடமாக வைத்துக்கொண்டால், அது பிரம்மம் விரும்பிய செயலாகிறது.
நம் முன்னேற்றமெல்லாம் சமூகத்தின் பண்புகள் தந்தது. நம் சந்தோஷமெல்லாம் அந்த சமுதாயத்தின் வளர்ச்சியால் வந்தது. வாழ்வில் வசதிகள், கேளிக்கை, பொழுதுபோக்கு, கல்வி, நடத்தை, இங்கிதம் போன்றவை சமூகத்தின் பண்புகளால் வந்த முன்னேற்றம்.அவை இல்லையென்றால் காட்டுமிராண்டியாக இருந்திருப்போம். அது consciouness of the society becoming our personality – அதாவது சமுதாயத்தின் பண்புகள் நம் personality ஆவது.. அப்படி இருக்கும் போது , ஆன்மாவின் பண்புகள் நம் personality -ஆக வந்தால் அது தரும் சந்தோஷம், முன்னேற்றம், சுபீட்சம் எப்படி இருக்கும்.
பிரம்மம் ஆன்மாவின் பண்புகள் மூலமே நம்மிடம் வருகிறது. ஆன்மாவின் பண்புகள் என்பது உயர்ந்த நிலையில் அன்னையின் symbol -லில் இருக்கும் 12 பண்புகள். அதுவே நம் விதியை, அது பலிக்கும் சுபாவத்தை மாற்றக் கூடிய கருவி. உதாரணமாக , பிரச்சனையில் இருக்கிறோம். பிரார்த்தனை செய்கிறோம். பிரச்சனை தீர்ந்தது என்கிறோம். ஆனால் அதன் கருவி எது, பண்பு எது என்று நாம் கவனிப்பதில்லை. நம் பதட்டம், பிரச்சனை, அனுபவம், அதை ஒட்டிய நம் அறிவு, சுபாவம், ஆகியவையெல்லாம் அன்னை முன் அமர்ந்தவுடன் சற்று நேரம் பின்னுக்கு போக, அமைதி என்னும் ஆன்மாவின் பண்பு, பிரச்சனைக்கான தீர்வை நம் அறிவுக்கும் வாழ்வுக்கும் தந்து விட்டது என்று பொருள்.
அப்படி உடலின் செயல் , அறிவின் நோக்கம், மனதின் உணர்வு, ஆர்வம், ஆசை, எதிர்பார்ப்பு என்று பல நிலைகளும் வாழ்வின் மறுமொழியை தரும் என்பதால் அதை கவனிப்பதே பகுத்தறிவு. விதியை மதியால் வெல்லலாம் என்பதை நாம் நம்மறிவில் தேடாமல், ஆன்மாவின் அறிவில் தேடுவதே பகுத்தறிவு. விதி பலிக்க, அதன் சட்டங்கள் பலிக்க, சுபாவம் ஒரு கருவி என்றால், இந்த பகுத்தறிவு அதை தடுக்கும் கருவி.
அதற்கு சுருக்கமான வழி – நம் நோக்கில், நம் அறிவின் மூலம், எதையும் பார்க்காமல், வேலையின் நோக்கில், கடமையின் நோக்கில், பிறரின் நோக்கில், பிரபஞ்சத்தின் நோக்கில், பிரம்மத்தின் நோக்கில், எதையும் பார்த்தால் , ஆனந்தம் நிரந்தரமாகும். இதை விட சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அன்னை விரும்பும் பண்புகளின் நோக்கில் பார்த்தால் ஆனந்தம் நிரந்தரமாகும். அப்படி ஒரு பார்வை கர்ணன், பீஷ்மர் ஆகியோருக்கு இருந்திருந்தால் மஹாபாரதமே மாறியிருக்கும். அனைவருமே ஆனந்தமாக வாழ்ந்திருப்பார்கள்.
விட முடிவது பெற முடிவதை நிர்ணயிக்கும் என்கிறார் கர்மயோகி அவர்கள். எந்த முன்னேற்றத்திற்க்காக எதை விடுகிறோம். வசதிகள், ஆசைகள், மனப்பான்மைகள், எண்ணங்கள், நோக்கங்கள், அபிப்ராயங்கள் என்று எதற்காக எதை விடுகிறோம் என்பதை பொறுத்தது நம் முன்னேற்றம்.
பண்புகளை பற்றுவது ஆன்மாவை பற்றுவது. நம் பண்புகளே நம் பலம் என்று புரியாமல், எதை எதையோ பலம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். சரியான சந்தோஷத்தை அனுபவிக்க, சரியான வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்ப சந்தோஷத்தை தேடுபவர், குறுக்கு வழியையே தேர்ந்தெடுப்பர். ஒவ்வொரு கணமும் நாம் எடுக்கும் பண்புகளின் அடிப்படையிலேயே நம் வாழ்வு நடைபெறுகிறது.
அதற்கான சிலஉதாரணங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.