நிச்சய வெற்றிக்கு 20 வழிகள் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கின்றேன். கர்மயோகி சுமார் 100 புத்தகங்களில் ஏராளமான வழிகளை கூறியிருக்கிறார். அதில் இருந்து அடிப்படையான, அதிகம் ஆன்மீகம் கலக்காத, நமக்கு மிக அருகில் யாரோ ஒருவர் வெற்றிகரமாக செய்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் வழிகளில் சிலவற்றை இங்கு தொகுத்து அளிக்கிறேன்.
மனித சுபாவம் போன்ற புத்தகங்களில் சொல்லப்பட்ட 300 அல்லது 400 கருத்துக்கள் இப்படிப்பட்டவைத் தான். அதில் இருந்து எடுத்து செய்து நானும் என் நண்பர்கள் சிலரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம்.
இதற்கு முதலில் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி நாம் நமக்குப் பிடித்த ஆனந்தம் தரும் வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா, வாழ்க்கையில், வளத்தில், வருமானத்தில், அந்தஸ்தில், ஆரோக்கியத்தில், நாம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறோமா என்ற கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்கான பதில் திருப்திகரமாக, தெளிவாக இல்லை என்றால், பிறகு எதற்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்னும் கேள்வி வரவேண்டும். ஒரு குறிக்கோளும், நோக்கமும், ambition, aspiration, goals இல்லாமல், ஒரு மிருகம் போல பிறந்தோம், வளர்ந்தோம், திருமணம் செய்து கொண்டோம், குழந்தைகளை பெற்றுக் கொண்டோம். இதன் பிறகு இந்த இரண்டையும் காப்பாற்ற வாழ்க்கையில் எதையோ செய்து கொண்டு இருக்கிறோம். ஏறத்தாழ வருவதை செய்வோம், வெந்ததை தின்போம், விதி வந்தால் சாவோம் என்னும் நிலையை, ஏதோ ஒரு முன்னேற்றமான நிலையாக நினைத்து ஓடிக்கொண்டு இருப்பவரானால் – அடுத்த கேள்வி, நாம் இப்படியே இருக்க போகிறோமா, அல்லது தன்னிலை உணர்ந்து, முன்னேற்றத்திற்கான பாதையை தேர்ந்து எடுக்கப் போகிறோமா இல்லையா என்ற கேள்வி வரவேண்டும். இல்லை – நான் ஓரளவு முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று தைரியமாக சொல்ல முடிந்த சிலர் இருந்தால் அந்த ஓரளவு என்பது பெருமளவு என்று மாற வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அத்தகையோருக்கு எழ வேண்டிய கேள்வி என்னவென்றால் – என் வேலையை எல்லாம் நான் சரியாகத் தான் செய்து கொண்டு இருக்கிறேனா – என் FULL POTENTIAL க்கு ஏற்ற மாதிரி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேனா – அல்லது என் திறமைக்கு ஏற்ற, எனக்கு சாத்தியமான அனைத்தையும் வெளிப்படுத்தும் வாழ்க்கையை தான், அதற்கான சந்தர்ப்பங்களை தரும் வாழ்க்கையாகத் தான் இருக்கிறதா என்பது சற்று முன்னேறியவர்களுக்கான கேள்வி. காரணம், நாம் நம்மால் அடைய முடியாத வளர்ச்சி என்று நினைப்பவை அனைத்தையும் நம் அருகில், நமக்கு தெரிந்த வட்டத்தில், செய்தியில் யாரோ ஒருவர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று காதுகளில் விழுவது பிரம்மிப்பாக இருக்கிறது. கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஒரு கோடியை மொத்தமாக கண்ணில் பார்ப்பதே கடினமாக இருக்கிறது என்னும் போது, நம்மால் ஏன் அதில் ஒரு சிறு பங்கை கூட செய்ய முடியவில்லை என்ற கேள்வி வருகிறது. அதில் கூட, நம் வாழ்க்கையிலேயே கூட, ஒரு குறிப்பிட்ட காலகட்டம் மிகவும் அதிர்ஷ்டமானதாகவும், ஆனந்தமயமானதாகவும் இருந்து இருக்கும். அது ஏன் தொடரவில்லை, ஏற்கனவே நடந்த நல்ல விஷயங்கள் மீண்டும் ஏன் நடக்கவில்லை. அல்லது ஏன் குறைவாக நடக்கிறது, பிறருக்கு நடப்பது நமக்கு ஏன் நடக்கவில்லை, என்ற ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. அதோடு நமக்கு ஒரு நல்லது நடந்து இருந்து – பிறருக்கு ஏன் நடக்கவில்லை என்ற கேள்வி எழுந்தாலும் ஒரு புது பார்வையை அது தரும். நம் பலத்தை நமக்கு காட்டும். இவை எல்லாவற்றுக்குமான ஆராய்ச்சி, முன்னேற்றத்திற்கான சிந்தனையாக, முன்னேற்றத்திற்கான ஞானத்தை பெற உதவும் ஆராய்ச்சியாக இருக்கும். நான் அடிக்கடி சொல்வது போல நம்மிடம் யாராவது, எதற்காகவாவது அறிவுரை கேட்டால், நியாயம், அநியாயம், மனசாட்சி, சட்டம் என்ன சொல்கிறது, ஆன்மீகம் என்ன சொல்கிறது, அன்னை என்ன சொல்கிறார் என்பது முதல், இப்படி செய், அப்படி செய், இப்படி நட என்று விலாவரியாக எந்த SUBJECT ஆனாலும் விளக்கிச் சொல்கிறோம். ஆனால் அதில் 1% கூட நமக்கு வரும்போது பின்பற்ற மாட்டோம். இது நமக்கு முன்னேற்றத்தை பற்றிய, தேவையான ஞானம் இருக்கிறது ஆனால் நமக்கு என்று வரும்போது செய்வதில்லை என்பது போன்ற புரிதலை இத்தகைய சிந்தனைகள், ஆராய்ச்சிகள் கொடுக்கும். அதனால் நான் இந்த கட்டுரையில் சொல்லப் போகும் கருத்துக்கள், பெரும்பாலும் தெரிந்ததாக தான் இருக்கும் . செய்த மாதிரி கூட இருக்கும். ஆனால் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் செய்து இருக்க மாட்டோம். செய்ததாக நம்பிக் கொண்டு இருப்போம். அல்லது செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய முறைப்படி, செய்ய வேண்டிய தெளிவோடு, அதற்கான விவேகம், பாகுபாடோடு செய்து இருக்க மாட்டோம். நான் கடின உழைப்பாளி, நான் நேர்மையானவன், நான் உயர் சித்தம் கொண்டவன், கீழ்த்தரமான எண்ணங்கள் எனக்கு கிடையாது, நான் அன்னை அன்பர், யாருக்கும் துரோகம் செய்யாதவன், நான் common sense பொது புத்தி உள்ளவன், நான் அன்பானவன், நான் பொறுமை மிகுந்தவன், நான் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவன், எல்லோருக்கும் அடங்கி நடப்பவன், சரியானதை மட்டுமே செய்பவன் போன்ற எண்ணங்கள் நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கும். அதை எல்லாம் எடுத்து ஆராய்ந்து பார்த்தால் தெரியும், அப்படி எல்லாம் நாம் 1% கூட இல்லை, இருப்பதாக நினைக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு முகமூடியை போட்டுக் கொண்டதால் நம்மை நாமே அப்படி நம்புகிறோம் என்று தெரியும்.
வாழ்வில் நடப்பது எல்லாமே நம் செயல், மனப்பான்மைக்கான வாழ்வின் மறுமொழி தான், LIFE RESPONSE தான், CAUSE AND EFFECT தான் என்பது புரிந்தால், நமக்கு நம்மைப் பற்றிய தெளிவு வரும். வளர்ச்சி என்பது நாம் எந்த அளவிற்கு விரும்புகிறோமோ அந்த அளவிற்கு தான் இருக்கும். நாம் எந்த அளவிற்கு நமக்கு பிடித்ததை விட்டு, வசதிகளை விட்டு, சுக சூழல்களை விட்டு, COMFORT ZONES ஐ விட்டு வெளியே வருகிறோமோ, அந்த அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். மாற்றங்களை எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்கிறோம், அல்லது எந்த அளவிற்கு எதிர்க்கிறோம் என்பதை பொறுத்து தான் நம் முன்னேற்றமும் அமைகிறது.
போதும் என்னும் மனம், திருப்தி, விதி, அம்சம் என்று பல காரணங்களை சொல்லி நமக்கு நாமே வரையறை வைத்துக்கொண்டு, அதே இடத்தில் நன்றாக வாழ்வதாக நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் சில காலம் கழித்து எல்லோரும் ஓடும் போது நாம் அதே இடத்தில் இருந்தாலும் பின்தங்கி விட்டது புரியும். ஓடாத நீர் சாக்கடையாக மாறுவது போல நம் வாழ்வும் சாக்கடையாக மாறுவது அதாவது உயர் சித்தம், திறமை, செயல்களில் இருந்து தாழ்ந்த சித்தத்திற்கு, குறுக்கு வழிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது தெரியும். ஓடாதது முன்னேறாதது அழியும் என்னும் வாழ்வின் சட்டம் புரியும். நம்முடைய முயற்சி தான் பலனுக்கு அடிப்படை என்னும் சட்டமும் புரியும். EMPLOYMENT இல் இருந்து ENTREPRENEUR க்கு, கன்னியில் இருந்து தாய்மைக்கு, சாதாரண சமுதாயத்தை ஒட்டிய வாழ்வில் இருந்து உயர் பண்புகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைக்கு, வறுமையில் இருந்து வளம், பற்றாக்குறையிலிருந்து அபரிமிதம், சிறு வசதிகளில் இருந்து பெரிய வசதிகள் என்று எதை எடுத்துப் பார்த்தாலும், வாழ்க்கையில் அதற்கான மாற்றத்தை ஏற்க தயாரா, அதற்கான முயற்சியை தர தயாரா, அதற்கான திறனை பெற தயாரா, அதற்கான கஷ்டத்தை அனுபவிக்க தயாரா என்னும் கேள்விகளுக்கு ஆம் என்னும் பதிலை தந்தவர்களே ஆனந்தமாக இருக்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்த்தால் புரியும். வளராதது மடிந்து போகும் என்பது விதையில் இருந்து ஆன்மா வரை அனைத்துக்கும் பொருந்தும்.
நமக்கான முந்தைய நிலையை அவ்வப்போது கழட்டிவிட்டு அடுத்த நிலையை போட்டுக் கொள்வதே, ஏற்றுக் கொள்வதே முன்னேற்றம். நாம் நம்மிடம் கடுமையாக இருந்தால் வாழ்க்கை நம்மிடம் இதமாக இருக்கும். இதற்கு ஆரோக்கியம் பெரிய உதாரணம். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று நமக்கு நாமே கட்டுப்பாடாக, கடுமையாக இருக்கும் போது ஆரோக்கியம் நம்மிடம் நன்றாக இருக்கிறது. அதுவே நாம் உடலிடம் பதமாக இருந்தால் ஆரோக்கியம் நம்மிடம் கடுமையாக இருக்கிறது. படிக்கும் காலத்தில் ஒருவர் கட்டுப்பாடோடு படித்தால் வாழ்க்கை பெரும்பாலும் நன்றாக இருக்கிறது. அப்படி இல்லாமல் தற்காலிக சந்தோஷத்திற்காக ஊர் சுற்றி படிக்காமல் விட்ட என்னை போன்றவர்களுக்கு 40 ஆண்டுகளாக வாழ்வு கடுமையாக இருக்கிறது. இதில் இருந்து புரிவது என்னவென்றால் எதை விதைக்கிறோமோ அதனுடைய பலனே கிடைக்கிறது. அப்படி பார்த்தால் இன்று நமக்கு நடப்பது, கிடைப்பது அனைத்தும் இதற்கு முன் நாம் செய்ததன் பலன், வாழ்வின் மறுமொழி. அதன் பொருள் என்னவென்றால் இன்று நாம் செய்வதை சரியாக செய்தால் நாளை நமக்கு வரும் பலனை நாமே நிர்ணயிக்க முடியும் என்பது தான். அதற்கான திறமை, திறன், மனப்பான்மை, எவை என்பது பற்றி ஏராளமான கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கர்மயோகி. அதிலிருந்து எளிதான அன்னை, ஆன்மா போன்றவற்றை கலக்காமல், அனைவரும் – அன்னையை அறியாதவரும் – செய்து பார்க்கக்கூடிய, நாங்கள் சிலர் செய்து பார்த்து வெற்றி பெற்ற வழிகளை இந்த கட்டுரை / தொடரில் எழுதுகிறேன். ஒரு கட்டுரையில் ஒரு POINT COVER செய்ய நினைப்பதால், இரண்டு A4 பக்கங்கள் தாண்டும் நிலையில், அதை PDF ஆக DISCUSSION தலைப்பில் பதிவிட உள்ளேன். காரணம் எப்போதும் போல தமிழ் கட்டுரைகள் தலைப்பில் பதிவேற்றினால் இரண்டு கட்டுரைகளாக 1,2 என்று ஏற்ற வேண்டியிருக்கும். அது நாட்களை வளர்த்தும் என்பதால் இந்த முறையில் செய்ய இருக்கிறேன். வழக்கம் போல “LIFE DIVINE” பற்றிய என் கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகளும் அவ்வப்போது வெளிவரும்.
உங்கள் கருத்துக்களை rameshposts@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்பினால் என்னை திருத்திக் கொள்ள மேலும் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருக்கும்