லைப் டிவைன் மூன்றாவது அத்தியாயத்தில் பகவான் கேட்கும் முக்கிய கேள்வி இது. பொருள்வாதி , ஆன்மீக வாதி இருவருமே வாழ்க்கையை விலக்குகிறார்கள் அது தவறு என்பது அவரின் முக்கிய கருத்து. ஆன்மீகவாதி வாழ்க்கை / குடும்பம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடை என்று நினைத்தால், பொருள்வாதி வாழ்வில் முன்னேற்றம் என்றால் என்ன என்னும் குழப்பத்தில் தவிக்கிறான். எவ்வளவு பொருள் வந்தாலும் ஆனந்தம் என்பது அவன் வாழ்வில் வராத போது எப்படியாவது இதை வாழ்ந்து தீர வேண்டும், சந்தோஷம் என்று தான் நினைப்பதை அனுபவித்து ஆனந்தம் தேட நினைக்கிறான். அது கிடைக்காதபோது மரபு வழியில் கேள்விப்பட்ட நாலு பேருக்கு நல்லது செய்வோம், தர்மம், புண்ணியம், நம்மாலானதை உலகுக்குச் செய்வோம் என்று மாறலாம், அல்லது வெந்ததை தின்போம் விதி வந்தால் இறப்போம் என்று வாழ்வுடன் ஒட்டாமல் வாழ்கிறேன் . ஆன்மீகவாதி எது செய்தாலும் ஆனந்தம் பெற முடியவில்லை என்ற முடிவுக்கு வருகிறான். பொருள்வாதி, ஆன்மீகவாதி இருவருமே ஒரு கட்டத்தில் ஒரு தனி மனிதனின் செயல்களுக்கு, அல்லது ஒட்டு மொத்த Human existence க்கு ஒரு பொருள் இல்லை என்று நினைக்கிறார்கள்.ஆன்மீகவாதி ஒரு விதத்தில் வாழ்வை மாயை என்று கூறினால், பொருள்வாதி வேறு ஒரு விதத்தில் வாழ்வை மாயை என்று நினைக்கிறான். பொருள்வாதி ஒரு கட்டத்தில் வாழ்வில் எதுவும் நிரந்தரமற்றது என்று புரியும் போது வாழ்வில் விட்டேத்தியாக இருக்கிறான். ஆன்மீகவாதி பிரம்மத்தை / மோட்சத்தை எப்படி பெறுவது என்ற குழப்பத்தில் இருக்கிறான்.
இப்போது நாம் இரண்டு விதமான மறுப்புக்கு வருகிறோம். பொருள்வாதியின் மறுப்பு – தான் கண்டது, உணர்ந்தது மட்டுமே நிஜம் என்று ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் அதிலும் பல கேள்விகளுக்கு பதில் இல்லாததால் வரும் மறுப்பு. ஆன்மீகவாதிக்கு வாழ்வில் இருக்கும் சத்தியம் புரியாதது அதனால் வாழ்வை துறக்கும் மறுப்பு. இரண்டு மறுப்புகளுக்கும் நடுவே நமக்குத் தேவை எதையும் விலக்காத ஒரு இணக்கத் தீர்வு. அதற்கு நாம் முதலில்- வாழ்வில் ஆன்மா இருப்பது உண்மை, ஆன்மாவில் வாழ்வு இருப்பது உண்மை என்பதை ஏற்க வேண்டும்.
அது எப்போது வரும் என்றால் நாம் cosmic consciousness க்கு அண்டத்தின் சித்தத்திற்கு உயரும் போது வரும். அந்த நிலையில் பிரபஞ்சமும் அதை உருவாக்கியதாக நாம் நினைக்கும் ஒரு இறை சித்தமும் ஒன்றே என்று புரியும். அல்லது குறைந்த பட்சம் ஒரு நிகழ்வின் இரு பக்கங்கள் என்பது புரியும். அது புரிய நம் சித்தம், consciousness வளர வேண்டும். இன்னும் புரியும் வகையில் சொல்வதானால், உடலில், உணர்வில், புலனில் மட்டுமே வாழும் மனிதன் விரிந்து தன்னை ப்ரபஞ்சத்தின் பகுதியாக உணர வேண்டும். இதுவெல்லாம் தத்துவம் எனக்கு புரியவில்லை என்றால் பகவான் சொல்லும் வழி – வாழ்விற்கும், ஜட வாழ்விற்கும் பொதுவான ஒரு இணக்கத்தீர்வுக்கு வருவது தான். அதாவது வாழ்வில், ஆன்மாவை செயல் பட விடுவது. அல்லது ஆன்மா வாழ்வை நடத்துவது என்பதே அந்த இணக்கத்தீர்வு.
நாம் அன்பர்கள், அதனால் வாழ்வில் எளிதாக ஆன்மாவை செயல் பட வைத்து விடலாம் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாளில், எத்தனை நிமிடங்கள் நம்மால் அப்படி தொடர்ந்து செயல்பட முடிகிறது. அப்படி நாம் செயல்பட முடியாததற்கு ஒரு காரணம் – நம்மிடம் transcendence consciousness – அதாவது எல்லாமே ஒன்று அல்லது எல்லாவற்றின் பகுதி நான் என்று உணரக்கூடிய பரம்பொருளின் சித்தம் இல்லாததே. காது கேளாத ஒருவருக்கு வாழ்வில் வார்த்தைகள் செய்கைகளாக வருகிறது. கண் தெரியாதவருக்கு அதே வார்த்தைகள் சப்தங்களாக வருகிறது. காது கேளாதவர்க்கு உலகம் என்பது செய்கைகளின் தொகுப்பு. கண் தெரியாதவனுக்கு உலகம் என்பது சப்தங்களின் தொகுப்பு. அதே போல நமக்கு ஐம்புலன்கள் இருந்தாலும் நம் வாழ்வின் தொகுப்பு, உடல் தேவைகள், உணர்வின் தேவைகள், அறிவின் தேவைகள் ஆகியவற்றில் பெரும் பகுதியாக ஏதோ ஒன்றை ஒட்டியே உள்ளது. நாம் ஐம்புலன்களை கொண்டிருந்தாலும், அதிலும் ஒரு முழுமையை நாம் காணவில்லை. சிலர் பார்ப்பது மட்டுமே சரி என்று நினைப்போம். சிலர் கேட்பவற்றை சரி என்று நினைப்போம். சிலர் உணருவதை மட்டுமே சரி என்று நினைப்போம். ஆனால் ஒட்டு மொத்த புலன்களுக்கான முழுமை இருப்பதில்லை.
ஒரு குடும்பம் என்று எடுத்துக்கொண்டால், நம் நினைவில் கணவனின் கடமை, மனைவியின் கடமை, பிள்ளைகளின் முன்னேற்றம், வீட்டை manage செய்வது, எதிர்காலம், சேமிப்பு என்று ஏராளமான விஷயங்கள் அதன் அடையாளங்களாக நினைவுக்கு வரும். ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பது நினைவுக்கு வருவதில்லை. காரணம் நாம் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறோம். நினைவுகளில் சேமிக்கப்படுவது புலன்கள் தரும் தகவல்கள். அதாவது நம் உலகம் நம் புலன்களால் வருகிறது. அதுவே உலகம் என்று நினைக்கிறோம். அது நம் prejudice, opinions , comforts , preference என்று மாறி நம்மை ஒரு வரையறைக்குள் வைக்கிறது. அதை தாண்டிய உலகைக் காண முடியாததால் உலகம் தரும் ஆனந்தத்தை நம்மால் முழுவதுமாக அனுபவிக்க முடியவில்லை.
அந்த வரையறையறிந்து அந்த limitation -னிலிருந்து நாம் வெளியே வந்தால், நம் வாழ்வின் உண்மைகள், மனமும், ஆன்மாவும் சொல்லும் எண்ணற்ற உண்மைகள், அது தரும் ஆனந்தத்தை புரிந்துக் கொள்ள முடியும். அந்த ஆராய்ச்சியை விரிவுப் படுத்தினால் வரும் அனுபவம் பிரபஞ்ச உண்மைகளை புரிய வைக்கும். புலன்களுக்கு அவை புரியாது. நாமே நம் உலகத்தை நிர்ணயிப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் உலகத்தின் உண்மைகள் நம்மை நிர்ணயிக்கறது. நம் ஆற்றலை நிர்ணயிக்கிறது.
உதாரணமாக கிட்டத்தட்ட இருபது வருடமாக படிப்பு என்று ஒன்று தேவையில்லை. படிக்காத மேதை இல்லையா என்று கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்த நான் 37 வயதில் படிப்பில்லாமல் வாழ்வில்லை என்னும் உலக உண்மை புரிந்த போது என் limitation, opinions prejudices -ஐ விட்டு வெளியே வந்தபோது 37 வயதிற்கு பிறகு மூன்று degree-யும் , இரண்டு diploma -வும் வாங்க வைத்தது. அது என் வாழ்வில் உண்மையை நான் அறிந்ததின் சக்தி. அதே போல சில காலம் வேலை செய்த பின் ஆங்கிலம் தெரியாமல் இருக்க முடியாது, இதற்கு மேல் முன்னேற முடியாது என்ற நிலை வந்த போது, வாழ்வின் அந்த உண்மைகள் புரிந்த போது, ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தேன். சராசரிக்கு அதிகமாக பலன் கிடைத்தது. இதற்கெல்லாம் உதவும் திறமையும், சாதனங்களும் ( powers and faculties) நம் உள்ளேயே உள்ளது. இதையெல்லாம் supra physical realities, supra physical senses .சூட்சம ஜட புலன்கள், சூட்சம ஜட மெய்மைகளுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். இதே போன்ற அனுபவங்கள் நம்ப முடியாத விஷயங்கள் பல இருக்கும். இவற்றை மறுக்க முடியுமா. ஆனால் நம் வாழ்விலேயே நடந்தாலும் நாம் நம்ப மறுக்கிறோம். நமக்கு அவை கட்டுப்படும் போது அல்லது புரியும் போது ஏற்கிறோம். நமக்கு கட்டுப்படாதது, புரியாதது நமக்கு ஒரு பொருட்டல்ல. இந்த எண்ணத்தை கைவிட்டால் உலகை கடந்த ஜீவியத்திற்குள் transcendent consciousness -க்குள் மனிதனால் நுழைய முடியும்.
நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் சிறு காரியங்களும், பெரிய காரியங்களும் இந்தச் சட்டங்களுக்கு உட்பட்டவை. நாம் அவற்றைக் கவனிப்பதில்லை. காரியம் தடைபட்ட நேரத்தில்தான் யோசனை செய்கிறோம். அதுவும் நமக்குத் தெரிந்த முறையில் அதைச் சரிசெய்ய நினைக்கிறோம் . முடியாவிட்டால், விட்டுவிடுகிறோம். நமக்குத் புரிந்த வாழ்க்கை முறைக்கும், வாழ்க்கையின் சூட்சும சட்டங்களை புரிந்து உபயோகப்படுத்தும் முறைக்கும் உள்ள வித்தியாசம் தபாலுக்கும் செல் போனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது. நம் கடந்தகால வாழ்வை ஊன்றிப்பார்த்தால் தடைபட்ட காரியங்களில் குறை இருக்கும். , பூர்த்தியான விஷயங்களில் – செயல், உணர்வு, அறிவு ஆகிய ஏதாவது ஒன்றில் நம்மை அறியாமலேயே ஒரு சூட்சும சட்டத்தை பின்பற்றி இருப்போம். இந்தப் புதிய அறிவை ஏற்று, இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், விளங்காதனவெல்லாம் விளங்கும். அத்துடன், இன்னும் குறையாக உள்ள காரியங்களைப் பூர்த்தி செய்யும் திறன் ஏற்படும். மேலும் எதிர்காலத்தில் நமக்கு வேண்டிய வாய்ப்புகளை உற்பத்தி செய்யும் திறனும் ஏற்படும்.
ஆனால் நம் பிரச்சனை என்னவென்றால் நாம் நம் மேல் மனதில் நம் புலன்களுக்கு புரிந்ததை மட்டுமே ஏற்றுக்கொள்கிறோம். அன்னை வழிபாடு என்பது பண்புகளை அடிப்படையாகக் கொண்டது என்று சொன்னால் புரியவில்லை என்பார்கள். புரியும் படி சொன்னால் நான் ஏற்றுக்கொள்வேன் என்பது பெரும்பாலானோர் பதில். வழிபாட்டிற்கு நம்பிக்கை அடிப்படை என்னும் போது, புரிந்தால் ஏற்றுக்கொள்வேன் என்று ஒருவர் சொன்னால், ஏற்றுக்கொண்டது அன்னையையா தன் புரிதலையா? அல்லது அன்னைக்கு பண்புகளே முக்கியம் என்பதை அவர் மனம் புரிந்துக் கொண்டபிறகு ஏற்றுக்கொள்வது அவர் மனதையா அன்னையையா? அது அன்னை மேல் நம்பிக்கையில்லை, புரிவதை மட்டுமே நம்புவது நம்பிக்கையில்லை. புரியாததை நம்புவதே நம்பிக்கை. இலட்சியம், கொள்கை ஆகியவை , என்ன லாபம் தரும், பெயரையா , புகழையா, செல்வத்தையா , மோட்ஷத்தையா, சேவை என்ன பலன் தரும்? எந்த சேவையை செய்தால் என்ன பலன் வரும்? புத்தக சேவை செய்தால் பிரச்சனை தீருமா? என்று பார்த்து ஏற்றுக்கொள்வது அன்னையை அல்ல நாம் லாபத்தையே ஏற்கிறோம். இத்தகைய மனப்பான்மையை விட்டு வெளியே வரும் போது உலகை கடந்த ஜீவியத்தில் transcendent consciousness -யில் நுழைய முடியும்.