புது வருடம் – புது யுகம் – புது வாழ்வு என்பது கர்மயோகியின் வரிகள்.
“Life is aspiration on the move”. நம் ஆர்வத்தின் பயணம் தான் நம் வாழ்க்கை என்றும் கூறுகிறார். நம் ஆர்வத்தின் அடிப்படையில் தான் நம் குடும்பம் நம் வாழ்வை நடத்துகிறது. நம் சமுதாயம் நம் வாழ்வை நடத்துகிறது. நம் ஆர்வத்திற்கு ஏற்பவே நம் சூழல், நண்பர்கள், உறவுகள் அமைகிறது என்பதை கவனித்துப் பார்த்தால் புரிந்துக் கொள்ள முடியும். அதுவே பெரும்பாலும் நம் வாழ்வை நடத்துவது தெரியும்.
நம் எல்லோருக்கும் முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் இல்லாமல் இல்லை. அனைவருக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கி தான் இந்த வருடம் சென்றோமா அல்லது அடுத்த வருடம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்தால், நாம் மாற வேண்டிய இடங்கள், பெற வேண்டிய திறமை, திறன் மனப்பான்மை, ஆகியவற்றை புரிய வைக்கும். நமக்குத் தேவையான நிலைமாற்றம், திருவுருமாற்றம் ஆகியவற்றை புரிய வைக்கும்.( transition , transformation).
உதாரணமாக மாத சம்பளத்தில் இருந்து சொந்த தொழிலுக்கு உயர்வது, இன்றைய வருமானத்தில் இருந்து இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்வது, சாதாரண சமூகம் சார்ந்த வாழ்வில் இருந்து, கொள்கை, பண்புகள் நிறைந்த வாழ்வுக்கு மாறுவது என்று முதலில் நம் இலக்கை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும். அதை அடையும் வழி (அன்னை வழி, சமுதாய வழி) என்ன என்பதை பற்றிய தெளிவு வேண்டும். அதை படிப்படியாக செய்வது எப்படி என்னும் திட்டம் மனதுக்குள் வேண்டும். அதன் பிறகு அதை செயல்படுத்த வேண்டும். இந்த முடிவுக்கு வர நாம் நம்மைப் பற்றிய தெளிவுக்கு முதலில் வர வேண்டும்.
நம் இலக்கை நம் ஏதோ ஒரு திறமை மேல் வைத்து தான் முடிவு செய்து இருப்போம். அப்படி என்றால், நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்வி – அதற்கான full potential -ஐ நாம் இப்போது செய்து கொண்டு இருக்கும் வேலையில் வெளிப்படுத்துகிறோமா? அது result -ஐ தந்துக் கொண்டு இருக்கிறதா என்று பார்ப்பது முதல் வேலை. இல்லையென்றால் அது நம் முடிவு, நம் தெளிவு அல்ல. Aspiration ஆர்வம் அல்ல. வெறும் ஆசையே. அடிப்படையில்லாத யாராலோ, அல்லது சூழலாலோ, சுமுதாயத்தாலோ நம் மேல் திணிக்கப்பட்ட ஒரு விஷயம். நம் தெளிவு, ஆர்வம் அல்ல.அடுத்து நாம் கவனிக்க வேண்டியது – இப்போது நாம் இருக்கும் comfort zone -இல் இருந்து வெளியே வர தயாராக இருக்கிறோமா, சிலருக்காக, சில அல்லது பல compromise களை செய்ய தயாராக இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். இலக்கே முக்கியம் வேறெதுவும் முக்கியம் இல்லை என்னும் நிலைக்கு சில காலமாவது இருக்க முடியுமா (consolidation phase ) என்ற தெளிவு வேண்டும் .
இந்த இரண்டும் தான் பரிணாமத்தில் உயர்வதற்கான – அது தொழில் ஆகட்டும், பண்புகள் ஆகட்டும், ஆன்மீக முறைகள் ஆகட்டும் – இந்த இரண்டும் தான் நிலைமாற்றம், திருவுருமாற்றத்திற்கான அடிப்படை. இதற்கு எ திரான எந்த நிலையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாது.முன்னேறுகிறோம் என்னும் போதே அதன் பொருள் பின்னால் எதையோ விடுகிறோம் என்பது. அது எது என்பதில் இருக்கும் தெளிவே முன்னேற்றம் – மாற்றம் இல்லாமல், முன்னேற்றம் இல்லை. ஓடாத நீர் பாசிபிடிக்கும். வளராத விதை இறக்கும். அது போல நாம் satisfaction , conentment என்ற பெயரில் பல இடங்களில் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்கிறோம். அது சிறிது சிறிதாக நம் முன்னேற்றத்தை சாகடிப்பதை நாம் உணர்வதில்லை. எல்லோரும் ஓடும்போது நாமும் ஓடுவதாக நினைப்போம் . ஆனால் சில காலம் கழித்து பார்த்தால் நாம் அதே இடத்தில இருப்பது தெரிய வரும். பின் சில காலம் கழித்து பார்த்தால் நாம் பின் தங்கி விட்டது தெரியும். இதை உணரும் நிலை வரும் போது நாம் ஜீவனற்றவனாக மாறிவிடுகிறோம்.
இந்த பிறவியின் நோக்கம் ஆனந்தத்திற்காக, பரிணாம வளர்ச்சி என்னும் ஆனந்தத்திற்காக என்னும் போது வாழ்வின் மேல் நாம் கடுமையாக இருந்து அந்த முன்னேற்றத்தை கொண்டு வரவில்லை என்றால், அதாவது ஆன்மாவின் ஆர்வம் வாழ்வில் மேல் செயல்பட்டு அந்த முன்னேற்றத்தை கொண்டு வரவில்லை என்றால் வாழ்வு நம் மேல் கடுமையாக செயல்பட்டு அதை கொண்டு வருவதை கவனித்து பார்த்தால் புரியும்.அதாவது வாழ்வு நம்மை கட்டுப்படுத்த போகிறதா அல்லது வாழ்வை நாம் கட்டுப்படுத்த போகிறோமா என்னும் முடிவில் தான் நம் அடுத்த கட்ட, அடுத்த வருட முன்னேற்றம் இருக்கிறது. அதை தருவது நிலைமாற்றம், திருவுருமாற்றம்.
உதாரணமாக 10 கிலோ கல்லை தோளில் சுமக்கும் சித்தாள் முகத்தில் அதன் சுமை தெரியும். ஆனால் அவளே அதை விட அதிக தூரம் 10 கிலோ உள்ள தன் குழந்தையை சுமக்கும் போது அவள் முகத்தில் அந்த சுமை தெரியாது. காரணம் அவள் மனதில் ஏற்படும் நிலைமாற்றம். குழந்தைக்கான ஆர்வம். அது போல நம் செயலுக்கும் நமக்கும் ஒரு emotional bonding வைத்துக் கொள்ளும் போது, எந்த அமைப்பும், யாருடைய விலகல்களும், யாருடைய நடத்தையும் ஒரு பொருட்டாகத் தெரியாது.