கர்மயோகி ஓரிரு கட்டுரைகளில் – அன்னை வருமானத்தை பற்றி பேசியதே இல்லை , நான் அதைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு இருப்பார். அதற்கொரு அடிப்படையாக The Two Negations – The Materialistic Denial அத்தியாயத்தைக் குறிப்பிட்டு The rationalism of materialism has done mankind a great service. பொருள்வாதியின் பகுத்தறிவு மானுடத்திற்கு மகத்தான சேவையை செய்து வருகிறது. அதாவது பொருட்களுக்கான , சொத்திற்கான அதை அனுபவிப்பதற்கான மனிதனின் ஆசை மனிதகுலத்திற்கு பெரும் சேவை செய்து இருக்கிறது என்பதால் அன்பர்கள் அந்த பார்வையில் வாழ்வை பார்க்கும்போது வாழ்வு வளம் மிகுந்ததாகிறது. அது பண்புகளால் நிரப்ப படும்போது அது அன்னை வாழ்வாகிறது. சுயநலமும் , அன்னையும் ஒன்று சேர முடியாது என்றாலும் அன்னைக்காக என்னும் அளவில் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் கூறுகிறார்.
அந்த பார்வையில் நான் பார்த்தவற்றை சிந்தித்தவற்றை நான்கு பாகங்களாக பகிர்ந்து கொள்கிறேன்.
Materialist – பொருள்வாதி – அதாவது கண்ணுக்குத் தெரிந்தது மட்டுமே உண்மை, உணர்வுக்குத் தெரிந்தது மட்டுமே உண்மை என்று நினைகின்றவர்.
Spiritualist – ஆன்மீகவாதி – கண்ணுக்குத் தெரிந்தது, உணர்வுக்குத் தெரிந்தது எல்லாம் மாயை. அதற்கு பின்னால் அதை படைத்த இறைவன் இருக்கிறான், அவன் மட்டுமே உண்மை என்று நினைக்கிறார்
இரண்டும் உண்மை என்றாலும் இரண்டும் பகுதியான உண்மையே – முழு உண்மையல்ல.
ஆனால் பொருள்வாதி தான் நினைத்தது தான் சரி. அதுவே பகுத்தறிவு என்று சொல்வதால் ஆன்மீகம் வாழ்க்கைக்கு சரி வராது என்கின்றார்.
ஆன்மீகக்கவாதியோ இதுவே வாழ்வின் பிரச்சனைகளுக்கு காரணம் என்று வாழவைத் துறக்க வேண்டும் என்கிறார்.
இப்போது நான் என்னத்தான் நகர வாழ்வில் இருந்தாலும், மாட்டுத் தொழுவத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து பெரிய பித்தளை வட்டாவில் காபி குடிக்கும் அனுபவம் போல வராது என்பது என் எண்ணம். ஆனால் நகர வாழ்வின் சுகங்களை விடுவதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதனால் அறிவுக்குப் பொருத்தமாக, இரண்டுக்குமே பொதுவான ஒரு நிலை எடுத்து வாழ்ந்து வருகிறேன். அது போல பொருள்வாதிக்கும் ஆன்மீக வாதிக்கும் ஒரு reconciliation – ஒரு இணக்கத்தீர்வு தேவை. வாழ்வும் தேவை, ஆன்மீகமும் தேவை. புரிவதற்காக சில உதாரணங்களை எடுத்துக் கொள்கிறேன்.
கோபம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.அது சகஜம் என்பதோடு மட்டுமல்லாமல் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்குமென்று ஒரு சமாதானத்தைக் கூட சொல்லி அதை நியாயப்படுத்துவார்கள். ஆனால் ஆன்மீகவாதிக்கோ கோபமே கூடாது. அதனால் அவன் வாழ்வை விட்டு விலகிச் செல்கிறான். ஆனால் அதனால் பலன் கிடைத்ததா என்று பார்த்தால் – இல்லை. விலகிச் சென்ற ரிஷிகள், கோபப்பட்டது, சாபமிட்டது, போரிட்டது, ஏன் இல்லற உறவை வைத்துக்கொண்ட கதைகளை நாம் நிறைய கேட்டிருக்கிறோம்.
ஆனால் கோபம் ஏன் தவறு என்பதைப் புரிந்து அந்த ஞானத்தைப் பெற்று வாழ்வில் அதை பயன்படுத்தினால், அதாவது யோகப் பண்புகளை, இந்த பொருளுக்கான வாழ்வில் பயன்படுத்தினால் அது பரிணாமத்தில் முன்னேறுவது ஆகிறது. அது நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் ஆனந்தம் தருகிறது. இது Materialism Spiritualism இரண்டுக்கும் ஒரு இணைக்கத்தீர்வு என்று கூறலாம்.
இன்னொரு உதாரணம் – பாசம், பற்று இந்த உலகத்தில் துன்பப்பட காரணம் என்பது ஆன்மீகவாதியின் கருத்து. பாசம், பற்று இல்லாமல் அது தரும் கடமை, அதிகாரம், வேட்கை, அதற்கான வெகுமதிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது பொருள்வாதியின் கருத்து .
பற்று, பாசம், ஒரு எதிர்பார்ப்புக்கு உட்பட்டது. உறவுகளுக்கு உட்பட்டது. ஆனால் அன்பு பிரதிபலன் எதிர்பாராதது. அனைவருக்கும் பொதுவானது. அதனால் குரு, ஞானிகளின் அன்பை வாழ்வில் கொண்டு வந்தால் அது Materialism – Spiritualism இரண்டுக்கும் ஒரு இணக்கத் தீர்வு என்று கூறலாம்.
ஒரு நேரடியான கேள்விக்குப் போகலாம்.
ஒரு பொருள்வாதியாக நாம் Mother இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா – பார்த்தோமா, நம்புகிறோமா உணர்கிறோமா – அன்னை அன்பர்களுக்கு நடுவில் சொல்ல முடிகிறதே தவிர மற்ற இடங்களில் சொல்ல ஒரு தயக்கம் இருக்கிறது. ஆன்மீகவாதியாக அதை ஏற்றுக்கொள்ளவும் தயக்கமாக இருக்கிறது . அப்படி ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை ஒரு வெறுமையாக, ஒரு வெற்றிடமாக இருப்பது போல் இருக்கிறது. இதை agnostic க்கு உதாரணமாகச் சொல்லலாம் . அதாவது இறைவனைப் பற்றி அறியாதவன், இறைவனைப் பற்றித் தெரியாதவன் , இறைவனைப் பற்றி புரியாதவன் என்னும் ஒரு நிலை. முழுவதும் நம்பிக்கை இழக்கவில்லை ஆனால் அந்த இரண்டையும் எப்படி ஒரு இணக்கதீர்வுக்கு கொண்டு வருவது என்று தெரியவில்லை. பொருள்வாதியின் பகுத்தறிவு கடவுள் மறுப்பு கொள்கையில் முடிந்து நாத்திகவாதி என்று பெயரெடுக்கிறான். அவனால் புரிந்துக் கொள்ள முடியாத இடங்களை chance , nature என்று சமாளிக்கிறான் . அதே போல ஆன்மீகவாதி இறைவன் மட்டுமே உண்மை என்கிறான். அவனுக்கு புரியாத இடங்களை, மாயை, லீலை என்று சமாளிக்கிறான். இரண்டு பேரும் ஒரு எல்லைக்கு வந்துத் தடுமாறுகிறார்கள்.