அதாவது ஆன்மா தேடும் ஒரு ஆனந்தத்தை நாம் நம் எந்த ஆசையுடன் சேர்த்தாலும் அது முழுமையடைகிறது. துன்பம் இல்லாத அனைத்து பாகங்களுக்கும் ஆன முழுமையான ஆனந்தமாக மாறுகிறது. காரணம் ஆன்மா வரையறையை, பிரித்தறிந்து பார்க்காது என்பதால் அதற்கு பகுதியான திருப்தி, சந்தோஷம், என்பது கிடையாது. அது உடலில், உணர்வில், மனதில், வெளிப்படும் போது, அதிருப்தி என்பதே இல்லாமல் முழுமையாக அடுத்தகட்ட ஆனந்தத்தை பெறுவதற்கான வித்தோடு இருக்கும். Life Divine வார்த்தைகளில் சொல்வதானால், இறைவன் விரும்பிய ஆனந்தத்தை நம் ஜீவன் அனுபவிக்க விடுகிறது. அது வாழ்வில் ஆனந்தமாக நமக்கு வெளிப்படுகிறது. அந்த வித்து இல்லாத போது, நம் ஆசைகள் பகுதியாக craving, lust, passion என்று மாறி நாம் நினைக்கும் ஆனந்தம் நமக்கு வராமல் தடுக்கிறது. அது பேராசை, பொறாமை, கோபம், சுகக்குறைவு, ஏமாற்றம், சண்டை, பயம், பொய்,வேடங்கள் முகமூடிகள் என்று பல்வேறு விஷயங்களை நம் சுபாவத்தில் கொண்டு வந்து மேலும் மேலும் நம்மை ஆசையில், இச்சையில், நாட்டத்தில் மூழ்க வைக்கிறது.
அதுவே நம் அதிருப்தி, துன்பம், சோகம், தோல்வி ஆகியவற்றுக்கு காரணமாக மாறுகிறது. அதனால் தான் புத்தரும் , அனைத்து ஞானிகளும் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றனர். மதங்களும், மரபுகளும் இதுவே நம் விதி, கர்மபலன் ஆகியவற்றிற்கு அடிப்படை என்கிறது. அதனால் ஆசையை துற என்கிறது. காரணம் ஆசைக்கான வாழ்வை நாடி நாம் செய்யும் செயல்கள் கர்மத்திற்கான வினைகள், விதைகள். அது அதன் பலனை தவறாது தரும். நம் ஆசைகள் அனைத்தும் அகந்தையை அடிப்படையாகக் கொண்டது என்பதால், அகந்தை அடிப்படும் அனைத்தையுமே அது பலனாக தருகிறது. அது நமக்கு வாழ்வில் சோகம், துன்பம், அதிருப்தி என்று மாறுகிறது.
உடலின் வினை நோயாகவும், உணர்வின் வினை மனநோயாகவும், குண குறையாகவும், மனதின் வினை அறியாமையாகும் வளர்கிறது. அதற்குக் காரணம் நம் ஆசைகளை பகுதியாக நிறைவேற்ற முயல்வது தான். அதோடு நமக்கு கிடைத்த அல்லது கிடைக்காத பகுதியான சந்தோஷத்தை தேடி நாம் புது ஆசையை நாடுகிறோம். அதற்கு அடிப்படையாக நாம் நம் அனுபவத்தை, அதன் தாக்கத்தை எடுத்துக்கொண்டு அல்லது ஒப்பிட்டு, புதிய திருப்தியை அடைய முயல்கிறோம். இரண்டிலுமே சந்தோஷம் கிடைப்பதில்லை.
நன்றாக கவனித்துப் பார்த்தால், இந்த பகுதியான சந்தோஷத்தையும் நாம் அனுபவிப்பது எப்போது என்றால் அந்த ஆசையில், அதற்கான நோக்கத்தில், அதற்கான செயலில், நாம் ஈடுபட்டு கொண்டிருந்த தருணம் மட்டுமே (in that moment, in that instant of acquisition). அதை வேறு விதமாகச் சொல்வதென்றால் ஒரு ஆசையை அனுபவிக்க முடிவு செய்த பிறகு அந்த நொடியில் அதிகபட்ச சிறப்பாக எப்படி செய்ய முடியுமோ அல்லது அதிகம் பெற முடியுமோ, முடிவை பற்றி திருப்தி அடைவோமா மாட்டோமா என்றெல்லாம் நினைக்காமல் ஒவ்வொரு நொடியும் அந்த செயலை விரும்பிச் செய்யும் போது, அது தொடர்ச்சியாக ஆனந்தத்தை தந்து கொண்டே இருக்கிறது. அதாவது நம் ஆசையிலிருந்து கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நாம் எடுத்துவிட்டோம். நிகழ்காலம் மட்டுமே இருக்கிறது. ஒப்பீடுகள்,எதிர்பார்ப்புகள் இல்லாததால், அந்தத் தருணம் அதிக சந்தோஷம் தரும் தருணமாக இருக்கிறது. இது ஆன்மா விரும்பும் பண்பு. அதனால் இது அதிகபட்ச ஆனந்தத்தைத் தருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. உதாரணமாக கர்மயோகிக்கு நான் கடிதம் எழுதினால் பல நேரங்கள் அவர் என்ன பதில் சொல்வார் என்பது தெரியும். அல்லது வெறுமே Mother’s Blessings” என்று வரும். சில நேரங்களில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியாது . அதையெல்லாம் நினைக்காமல் அவருக்கு எழுதுவதே சந்தோஷம் என்று தான் எழுதுவேன். பதில் வருமா, வர வேண்டும் என்பதெல்லாம் என் நினைவில் இருக்காது. என் மனைவி கூட எப்படி உங்களால் அப்படி இருக்க முடிகிறது என்று கேட்டிருக்கிறார் அப்படி அந்த கணத்தில் வாழ்வது என் ஆசை முழுமையான ஆனந்தத்தைத் தருகிறது. அது மட்டுமல்ல அது பரவவும் செய்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் – ஓரிருமுறை கர்மயோகியே – உன் cheerfulness-ஐ என்னால் உணர முடிகிறது என்று எழுதி இருக்கிறார். அப்படி நிகழ்காலத்தை நாம் அனுபவித்து செய்யும் போது, ஏற்கனவே செய்த தவறு போன்றவற்றை தவிர்த்து செய்ய முடிவதால் கடந்தகாலம் போலவேத் தான் இந்த முடிவும் இருக்க வேண்டும், எதிர் காலத்தில் அதே அளவு சந்தோஷத்தைத் தான் அது தர வேண்டும் என்பதில்லை என்னும் ஞானம் வரும். அந்த ஞானம் ஆன்மாவின் பற்றற்ற தன்மை பெரும் ஆனந்தம். செயலைச் செய் பலனை எதிர்பாராதே என்னும் கர்மயோகத்தின் ஆனந்தம். நம் ஆசைகள் எல்லாமே எதிர்கால தேவை, பாதுகாப்பு, வாழ்வு, முக்கியத்துவம், பாராட்டு, புகழ், சுதந்திரம், அதிகாரம், போன்றவற்றை ஒட்டியே இருக்கும். அல்லது அறிவு, ஞானம், ஆன்மிக பேருண்மையை உணர்தல், போன்றவையாக இருக்கலாம். ஆனால் இந்தப் பொழுதில் செய்யும் செயலை செம்மையாக அனுபவித்து செய்வது என்பது அது எந்த ஆசையின் அடிப்படைக்கான செயலாக இருந்தாலும், இந்த கணத்தில் அதை செம்மையாக அதிகபட்ச கவனத்துடன் நாம் அறிந்த உயர்ந்த நிலையில், முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது அது அதிகபட்ச ஆனந்தத்தை தரும். இவை அனைத்தும் ஆன்மா விரும்பும் பண்புகள் என்பதால் நாம் நம் ஆசைகளை ஆன்மாவின் பிடிக்குள் கொண்டு வருகிறோம். அதனால் நாம் நம் அபிப்பிராயம், சுபாவம், விருப்பு-வெறுப்பு, எதிர்பார்ப்பு, போன்றவற்றில் இருந்து வெளியே வருகிறோம். அதாவது நம் ஆசைகளின் திசையை மாற்றுகிறோம். அதாவது அதை திருவுருமாற்றுகிறோம்.
ஹடயோகம், கர்மயோகம், பக்தி யோகம், ஞான யோகம், தந்திர யோகம், ராஜ யோகம், என்று எதை எடுத்துக் கொண்டாலும் அது நம் பகுதிகளின் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தி, செம்மைப் படுத்தி, அதை பழக்கப்படுத்தி, அதன் மூலம் பெரும் ஆனந்தத்தை கூறுகிறது. ஹடயோகம் உடலையும், கர்மயோகம் செயலையும், பக்தியோகம் மனதையும், செம்மைப்படுத்த சொல்லி அதன் மூலம் ஆனந்தம் முதல் மோட்சம் வரை அடைய செய்கிறது. அதை ஒரு வழிமுறை, பயிற்சி, மனப்பான்மை, மூலம் ஆசனம், தியானம், பிராணாயாமம், மந்திர ஜபம், போன்றவற்றின் மூலம் அடைய முயல்கிறது. அது பகுதியே என்பதால் முழு ஆனந்தத்தை தர முடிவதில்லை. அல்லது மற்ற பகுதிகள் அதிலிருந்து விலக வேண்டும். அதாவது குடும்பத்தை விட்டு, சமூகத்தை விட்டு, சௌகரியங்களை விட்டு, விலக வேண்டும். பூரணயோகம் எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பதால் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் எளிய வழியை குடும்பம், உறவு, நட்பு, சமூகம், வாழ்வு என்று அதற்குள்ளேயே இருந்து, ஆசையை அடக்காமல், விலக்காமல், திருவுருமாற்றி அதை அடையலாம் என்று கூறுகிறது. இதில் எந்த ஒரு கணத்திலும், உடல், உணர்வு, மனம், ஆன்மா ஆகியவற்றை ஒருமைப்படுத்தும் நிலை இருக்கிறது. அதனால் அது முழுமையின் கருவி ஆகிறது. முழுமை என்பது ஆன்மா என்பதால் பகுதியான அகந்தையின் பரிமாணங்களான எதிர்பார்ப்பு,ஏமாற்றம், சோகம் போன்றவை அங்கு இல்லை. நம் சுபாவத்தின் domination -ஆதிக்கம் அங்கு இல்லை. நம் ஜீவனின் அனைத்து பகுதிகளும் ஒரே விஷயத்தில் அடங்குவதால், நாம் ஆன்மாவின் பகுதி ஆகிறோம். அதனால் ஆசையை மாற்ற யோகங்கள், மதங்கள் சொல்லும் பகுதியான முறைகள் இங்கு தேவையில்லை. நம் ஆசைகளை ஆன்மாவின் ஆர்வமாக, அதன் நோக்கத்தை ஒட்டிய ஆர்வமாக மாற்றினாலே போதுமானது. அது நம் ஆசையை திருவுருமாற்றி ஆர்வமாக, இறை ஆர்வமாக, இறைவன் செயலில் பலிக்கும் ஆர்வமாக, மாறுகிறது. அதனால் அது இறைவனுக்கு சமர்ப்பணமான செயலாக மாறுகிறது. நமக்கு தேவை