நாம் எப்போதும் திரும்ப திரும்ப செய்யும் தவறு என்னவென்றால் – தெய்வத்தை விட பூசாரி முக்கியம் , தெய்வதை விட கோயில் முக்கியம் என்று இருப்பது. எந்த ஒரு ஸ்தாபனத்தின் போக்கு , அதன் முக்கிய பொறுப்பாளர்களின் போக்கு – அதன் ஸ்தாபகருக்கு பின்னால் அவர்க்கு எதிராகவே இருக்கும் என்று கர்மயோகி எழுதினாலும் , அதை கண்கூடாக பார்த்தாலும் – அன்னைக்கும் நமக்கும் நடுவில் வேறு யாரும் தேவை இல்லை – மனிதர்கள் மனிதர்களே , சுயசுயநலத்திற்காக எதையும் செய்யும் கீழ்தரமானவர்களே என்பதெல்லாம் புரிந்தாலும் எதையாவது ஒன்றை சார்ந்து இருப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அதனால்தான் ஆட்கள் மாறினார்களே தவிர நம் நிலை மாறவில்லை. நம் சிந்தனை மாறவில்லை.
யாரையும் குறிப்பிடவில்லை. என்றாலும் என்னுள் எழும் கேள்வியை தவிர்க்க முடியவில்லை. நான் கர்மயோகியுடன் ( இறுதி இரண்டு வருடத்தில்) இருந்தது 69 நாட்கள் மட்டுமே. இந்த 69 நாட்களில் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொடுத்தார். மெண்டல் டெவெலப்மென்ட் எண்ணும் நிலை அன்பர்கள் பெற வேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்தது. நாம் நினைக்கும் பல விஷயங்களுக்கான உண்மையான பொருளை , அவற்றை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும் சொல்லி கொடுத்தார்.
அப்படி என்றால் 10 வருடம் – 20 வருடம் உடன் இருந்தவர்களுக்கு எவ்வளவு சொல்லி கொடுத்து இருப்பார்? அதையெல்லாம் ஏன் வெளிப்படுத்தவில்லை? புரியவில்லையா? தெரியவில்லையா ? தெரியக் கூடாது என்று நினைத்தார்களா?
அதிலும் Life Divine க்ளாஸ் கர்மயோகி எங்களுக்கு எடுக்கிறார் என்று சொல்லியே தங்களை உயர் இடத்தில வைத்து மற்றவர்களை எடுபிடியாகவே, தங்களுக்கு சேவை செய்யவே வைத்து இருந்தது ஏன்?
உயர் சித்தம் பெறும் தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களை சொல்லாமல் – அது ஆகாது , இது ஆகாது என்று கூறி எப்போதும் ஒரு பயத்திலேயே வைத்து இருந்தது ஏன்?
மலர் வை, சமர்ப்பணம் செய் , புத்தக சேவை செய், மையத்தில் சேவை செய் , என் குடும்பத்திற்கு சமைத்துப்போடு, என் வீட்டை வந்து சுத்தம் செய் – தான் சாப்பிட்ட டைனிங் டேபிள்-ஐ சுத்தம் செய்ய கூட சேவை அன்பரே வேண்டும், பக்கத்து ஊர் மையத்தில் இருந்து வரவேண்டும் அப்போதுதான் PROSPERITY வரும் என்று சொன்னது ஏன்?
உண்மையில் அவை அவ்வளவு சிறந்தது என்றால் ஏன் அவர்கள் அந்த சேவைகளை செய்யவில்லை ? எந்த முக்கிய பொறுப்பாளரின் குடும்பம், அடுத்த தலைமுறை சேவை செய்து நான் பார்த்தது இல்லை. இருந்த சேவை அன்பர்களும் எனக்கு பிறகு இது நமக்கு தேவையில்லை என்னும் மன நிலையிலே இருந்தார்கள்.
பண்புகளை பின்பற்றி முன்னுக்கு வந்தவர்களை – தங்களுக்கு ஒத்து வரவில்லை ,என்பதால் அவர்களை எல்லாம் மையத்தையே நெருங்க விடாமல் வைத்து இருந்தது ஏன்?
மற்ற அன்பர்களை செய்ய கூடாது என்று சொன்னவற்றை எல்லாம் தன் குடும்பத்திற்கு செய்தார்கள். தன் குடும்பத்தார் செய்ய அனுமதித்தார்கள். அதற்கு சுமுகம் , சுதந்திரம் என்று காரணம் கூறினார்கள். மரபுகள் , சமுதாய பயத்தினால் – சுமுக குறைவு ஏற்பட்ட , விவாகரத்து வரை சென்ற குடும்பங்கள் எத்தனை?
காணிக்கையை கேட்டு பெற கூடாது என்று கர்மயோகிக் சொல்லியும் – கேட்டு பெறுவது மட்டுமல்ல – தனக்கு தனிப்பட்ட முறையில் தேவை என்று – புடவைகள் , நகைகள் , tourism என்று அனுபவித்தது ஏன்.
இவை எல்லாம் பார்த்தும் நான் ஏன் இவ்வளவு முட்டாளாக இருந்து இருக்கிறேன் ?
இன்னும் ஏராளமான கேள்விகள் உண்டு.
அன்னை சொல்லும் , கர்மயோகி சொல்லும் உயர் சித்தத்தை அடைய நாமே முயல வேண்டும். சிந்திக்க வேண்டும். நம் மனதை , உணர்வை, செயல்களை நாமே ஆராய்ந்து அது வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை அதற்கும் நம் முன்னேற்றத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து அறிய வேண்டும். அதற்கு மனிதர்கள், கூடல்களில் பகிரப்படுபவை உதவியாக, ஒப்பிட்டுப்பார்க்க – நாம் எங்கே தவறு செய்கிறோம் , எதை மாற்றவேண்டும் , எதை பெற வேண்டும் என்பதை ஒப்பிட்டு பார்க்க உதவியாக இருக்க வேண்டும்.
வாழ்வில் வளம் , மனப்பான்மை இரண்டும் உயர உதவுபவை தவிர வேறுதுவும் தேவை இல்லை என்னும் தீர்மானம் நமக்கு வர வேண்டும். திடமான நோக்கம் நமக்கு வராததற்குக் காரணம் அந்த விஷயத்தில் நமக்குத் தீவிரம் இல்லை என்பதால்.
நம்மால் முடியும் என்னும் உணர்ச்சி பூர்வமான நம்பிக்கை – தீர்மானத்தை உறுதிப்பாடாக மாற்றும். பகவான், அன்னை, கர்மயோகி இருக்கிறார்கள். வேறு யார் தயவும் தேவை இல்லை என்னும் நம்பிக்கை வேண்டும். இவை இரண்டும் அதை செயல் படுத்த வேண்டிய பண்பை முடிவு செய்தால் அது திறமை, திறன் , நடத்தை, மனப்பான்மை , அன்னை முறைகள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அந்த பண்பை உச்சத்தில் கடைபிடித்தால் அது இலக்கை அடைதலாக மாறும்.
இந்த உயர் சித்தத்திற்கான பிரம்மம் பெற விரும்பும் ஆனந்தம். நம் இலக்கை நாம் அடைந்து விட்டால் கிடைக்கப் போகும் சந்தோஷம் எப்போதும் நம் நினைவில் இருக்க வேண்டும். அதைவிட வேறுதுவும் பெரிதில்லை என்று இருக்க வேண்டும். அதற்கான பண்புகளை கடைபிடிக்கும்போது கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளை கவனித்து அதை அதிகப் படுத்த வேண்டும். நம்மால் முடிகிறது என்று அதை கொண்டாட வேண்டும். செய்ய முடியாத இடங்களை ஏன் செய்ய முடியவில்லை என்று பார்த்து திறமையை அதிகப்படுத்த வேண்டும். ஏற்கனவே நம் determination ஆல் நாம் பெற்ற வெற்றியை நினைவுக்கு கொண்டு வந்து நம் ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும். அப்போது நமக்கு நாமே குரு ஆவோம்.