கர்மயோகியும் அன்னையும் – எதையும் எனக்கு பிடிக்காது என்று எது பற்றியாவது சொன்னதாக நான் படித்த வரையில் இல்லையென்றே நினைக்கிறேன்.
ஆனால் இருவரும் எங்களால பொறுக்க முடியாது சொன்னவை இரண்டு.
- ஒன்று – கயமை – தான் செய்யாததை, செய்ய முடியாததை பிறரைச் செய்யச் சொல்வது.
- இரண்டாவது-கேலி-பிறர் குறையை , இயலமையை குறிப்பிட்டு பேசுவது.
இங்கு கேலி பற்றி எடுத்துக்கொள்ளலாம்.
கேலி கிண்டலை இரண்டு தலைப்புகளாகப் பிரிக்கலாம்:
1. அபிப்ராயத்தை , முன்முடிவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
உதாரணமாக சிகப்புத் தோல் நல்லது (கிண்டல் வெளிப்பாடு – கருப்பன் – கருப்பாக இருப்பவன் கெட்டவன், ), உயரம் நன்மை (கிண்டல் வெளிப்பாடு – குட்டை – குள்ளன், கள்ளனை நம்பலாம் குள்ளனை நம்பாதே ), நகரத்தார் – நல்ல நடத்தை (கிண்டல் வெளிப்பாடு – கிராமத்தான், ஊர்நாட்டான்), முதலியன போக பொதுவாக நாம் சூட்டும் புனைப்பெயர்கள், ஜாடையால் காட்டுபவைகள் , பின்னால் சிரிப்பது போன்றவை இதில் அடங்கும். .
2. சராசரி நுண்ணறிவை (average intelligence) அடிப்படையாகக் கொண்டவை.
சராசரி நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட கிண்டல் – கேலியின் ஆபத்தான பதிப்பு. இது நம்முள் இருக்கும் ஒரு கோபம் அல்லது இயலாமையின் வெளிப்பாடு. மட்டம் தட்டுவதில் ஆரம்பித்து அவரை தண்டிப்பதில் பெறும் அல்ப சந்தோஷத்திற்காக செய்வது. அது உண்மையில் நம் பொறாமை, நம் இயலாமையை, நம் தகுதிக்குறைவை – பிறரின் ஏதாவது ஒரு உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாத தாழ்வு மனப்பான்மையை கொண்ட ஒரு நிலை. தன்னால் வேறு எந்த வகையிலும் ஒருவரை கட்டுப்படுத்த முடியாத போது அதிகபட்ச கூர்மையான ஆயுதத்தை எடுக்கும் மட்டமான intelligence அது.
கர்மயோகி தந்த ஒரு உதாரணம்- ஒருவர் அபரிமிதமான வளர்ச்சியை தொடர்ந்து பெற்ற போது – அதை தடுக்க அதிகம் முயற்சி செய்த ஒருவர் அந்த முயற்சி பலிக்கவில்லை என்னும்போது – கடைசியாக என்ன முன்னேறி என்ன – பேர் சொல்ல , அனுபவிக்க உனக்கு ஒரு குழந்தை இல்லையே என்று கூறி மிகவும் மட்டமாக கேலி செய்தார். அதனை பின் அவர் வளர்ச்சி தடைபட்டது. என்னை சொற்பொழிவு ஆற்ற கர்மயோகி சொன்னதால் அழைத்த அன்பர் ஒருவர் இவனுக்கெல்லாம் வந்த வாழ்வை பார் என்றார் . அதுவே அந்த மையத்தில் என் கடைசி சொற்பொழிவாக அமைந்தது. நம் முன்னேற்றத்தையும் , பிறரின் முன்னேற்றத்தையும் ஒரு சேர தடுக்கும் வலிமை கேலிக்கு உண்டு. அது போன்ற புத்தி நம்மிடம் பல இடங்களில் உள்ளது.
இதை நம்மில் தவிர்க்க நாம் செய்ய வேண்டியது :
1. நம்மிடம் ஒரு கிண்டல்/ கேலி இருந்தால் – அது வந்த காரணத்தை , மூலத்தை அதன் பின்னால் உள்ள ஆதங்கத்தை சிந்தித்து கண்டுபிடிப்பது.
2. இந்த கிண்டல் / கேலி மூலம், எந்த வகையான மேலாதிக்கம், அதிகாரம், சக்தி , office / வியாபார / ஸ்தாபன (position) நிலை அல்லது சமூக நிலை ஆகியற்றை பெற நினைக்கிறோம் அல்லது அப்படி ஒரு இல்லாத பிம்பத்தை ஏன் உருவாக்க முயற்சிக்கிறோம் என்று சிந்திப்பது..
3.அப்படி சிந்திக்கும் நமக்கு தெரிய வரும் பாதுகாப்பின்மை, இயலாமை, அதற்குப் பின்னால் உள்ள திறமையின்மை, ஒரு பிரச்சனையை கையாள தெரியாமை, நம் பொறுப்பின்மை அல்லது நாம் செய்த தவறை, குற்றங்களை மறைக்கும் மனநிலை, கெட்ட எண்ணம் – ஆகிவற்றை கவனித்து அவற்றை மாற்ற வேண்டும்.