நமக்கு சிந்திக்கக் கூடத் தெரியவில்லை , சிந்தனை மூலம் மனிதன் பல நிலைகளை எட்ட முடியும் என்பது அவர் கருத்து. அதற்கு நமக்குத் தேவையான முதல் புரிதல் – நம்முள்ளேயே நமக்குத் தேவையான ஞானம் அனைத்தும் இருக்கிறது என்பதுதான். ஒருமுகச்சிந்தனை மூலம் அதை பெற முடியும். அது வாழ்வில் ஞானம் புதைந்து உள்ளது என்னும் லைஃப டிவைன் கருத்தை உள்ளடக்கியது.
நாம் அறிவால் செயல்படுவதாக நினைத்தாலும் உண்மையில் நாம் செயல்படுவது உணர்வால். உணர்வின் பிடியில் இருக்கும் அறிவால் . அதிலிருந்து வெளியே வருவது என்பது நாம் சிந்திக்கத் தொடங்கி விட்டோம் என்பதைக் காட்டும்.
ஆனால் அது நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்ற கேள்வியாக எழுந்தால் அது நாம் இருக்க வேண்டிய முறைப்படி இருக்கவில்லை, அடைய வேண்டிய ஆனந்தத்தை அடையவில்லை என்பதைக் காட்டும். இன்று நாம் உள்ள நிலை ஏற்கனவே இது போன்ற சிந்தனையின் அடிப்படையில் எடுத்த முடிவுகள் தான். அப்படி என்றால் நாம் இன்று தெளிவாக சிந்தித்து எடுக்கும் முடிவு நாளைய நம் நிலையை முடிவு செய்யும் என்று புரிந்து விட்டால் வாழ்வில் முன்னேற்றத்தைத் தவிர வேறு எதுவும் இருக்காது.நம் சிந்தனை நம்மை புலன்களால் புரிந்து கொள்வதிலிருந்து அறிவால் புரிந்துக் கொள்வதற்கு உயர்த்த வேண்டும். அதன் கருவை புரிந்துக் கொள்வது நம் உள்ளே உறையும் இறைவனை புரிந்துக் கொள்வது.
சிந்தனை மூலம் சித்தத்தில் உயரலாம் , பரிணாமத்தில் முன்னேறலாம் கர்மயோகி சொல்லும் சில வழிகளை இங்கே தருகிறேன்.
- வாழ்வில் எது முக்கியமானது எதற்கு முன்னுரிமை தருவது என்பதை உங்களுக்கு நீங்களே நினைவூட்டுவது ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்திற்கான சிந்தனையின் ஆரம்பம்
- அந்த சிந்தனையின் அடிப்படையில் நம் இலட்சியங்களையும் இலக்குகளையும் சரிசெய்தல் அடுத்த கட்ட சிந்தனை.
- அந்த இலக்கை இலட்சியங்களை அடைய வரும் தடை மற்றும் துன்பத்திற்குப் பின்னால் உள்ள வாய்ப்பு என்ன என்று யோசிப்பது. அதை மீறும் வழி, எவ்வாறு சிறப்பாகச் செய்வது அல்லது சிறந்து விளங்குவது என்பது குறித்த ஆக்கபூர்வமான சிந்தனை.
- நம் அப்பிராயங்கள், பாரபட்சங்கள் அனுமானங்கள், கருத்துகள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் அதன் அடிப்படையில் ஏற்றுக்கொண்ட அறிவை சரிதானா என்று பார்ப்பது. அதை விட உயர்ந்தது ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிவது.
- ஏனெனில் ஒரு சிக்கலான சூழ்நிலைகளை மீண்டும் மீண்டும் நமக்கு தெரிந்த வழியிலேயே பகுப்பாய்வு செய்கிறோம். நமக்கு தெரியாத வேறு வழியும் இருக்கும் என்று நாம் சிந்திப்பது இல்லை. ஒரே முறையில் சிந்திப்பதும் அல்லது வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்வதும் நம் சிந்தனையை அழிக்கிறது. நம்மை மந்தமானவர்களாக ஆக்குகிறது.