சிந்தனை – 2
சென்ற சிந்தனை ஒன்றின் தொடர்ச்சி
- எந்த ஒன்றையும் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது நாம் சிந்தனையைத் தடுக்கிறோம். அதே நிலையிலேயே இருக்கிறோம். அதே பகுதியையே உபயோகப்படுத்துகிறோம். உணர்வால் வந்த பிரச்சனைகளை உணர்வாலேயே தீர்க்க நினைக்கிறோம். அதை விட உயர்ந்த அறிவு அல்லது ஆன்மாவின் வழிகளில் தீர்க்க சிந்தனை தேவை. பரிணாமத்தில் முன்னேற – அதி மன நிலைகளைப் புரிந்துக் கொள்ள அத்தகைய சிந்தனை நிச்சயம் தேவை.
- போரடிக்கிறது, பொழுது போகவில்லை என்னும் இடங்கள் அல்லது hobby , leisure , socialising என்று சொல்லவப்படுபவைகள் உண்மையிலேயே அதைத் தருகிறதா அல்லது pre -occupation ஆக மட்டுமே இருக்கிறதா, உண்மையில் அவை ஆனந்தத்தைத் தருகிறதா என்று பார்த்து – அதிலிருந்து ஆனந்தம் பெறுவது மட்டுமல்ல அது வாழ்வு, மனப்பான்மை உயர உதவுகிறதா என்று பார்க்க வேண்டும். நாள் முழுக்க உயர் மனப்பான்மையில் இருந்துவிட்டு மாலையில் வதந்தி, புரளி பேசுவது, அர்த்தமற்ற அரசியல், சினிமா விஷயங்களைப் பேசுவதில் பொருளில்லை.
- உங்களைச் சுற்றி உள்ள மனிதர்கள், அலுவலகம், சமூகம், குடும்பத்துடனான உங்கள் உறவை பற்றிச் சிந்தித்து, அங்கு இருக்கும் முரண்பாடுகள், சிக்கல்கள், எரிச்சலூட்டும் விஷயங்கள் ஏன் வந்தது என்பதை பார்ப்பது, அவற்றையெல்லாம் இணக்கமாகப் பார்ப்பது அடுத்த கட்டம் செல்ல தேவையான சிந்தனை.
- எதையும் ஒரு சிறந்தவர் செய்யும் காலகட்டத்திற்குள் செய்ய முனைவது எப்படி என்று சிந்திப்பது. மற்றவர் ஒரு வாரத்தில் செய்வதை நாம் ஒரு மாதத்தில் செய்தால், மற்றவர் மூன்று வருடத்தில் முடிக்கும் PhD-ஐ நாம் ஐந்து வருடத்தில் முடித்தால் – நம்மிடம் திறன், திறமை, அறிவு, குறைவாக இருக்கிறது என்று பொருள். அதை பற்றி சிந்திப்பது நல்லது.
- நாம் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேலை, ஸ்தாபனம், field , subject பற்றி, அது தினம் தினம் பெற்றுக் கொண்டிருக்கும் முன்னேற்றம் பற்றி, தெரிந்துக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அதை புரிந்துக் கொள்ள, கற்றுக்கொள்ள, நடைமுறைப்படுத்த, அதன் மூலம் வாழ்வில் அடுத்த கட்டம் செல்ல சிந்திக்க வேண்டும்.
- நாம் கயமைத்தனமாக, சுயநலமாக, புத்திசாலித்தனமாக சொல்லும் பொய்களை, காரியம் சாதிக்கும் இடங்களை, நம் திறமைக் குறைவை மறைக்கும் இடங்களை, வேலையைத் தள்ளிப் போடும் இடங்களை, நம் தவறுக்கு பிறரை இரையாக்கும் இடங்களை, தினமும் கண்டுபிடிக்க, அந்நாளைப் பற்றிய சிந்தனை உதவும். அவை வாழ்வில் முன்னேற தடையாக இருக்கும் இடங்கள், வாழ்வு தரும் எதிர்மறையான மொழிகள் – அச்சிந்தனை மூலம் புரியும்.
- உங்கள் சிந்தனை அனைத்தும் உங்கள் நோக்கம், இலக்கு, லட்சியத்தை நோக்கி மட்டுமே இருக்கிறதா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
- உங்களைப் பற்றிய உயர்ந்த மனப்பான்மை உங்களுக்கு இருந்தால் – உதாரணமாக கடின உழைப்பாளி, நல்லெண்ணம் மிக்கவர், பிறருக்கு உதவுபவர், ஒரு காரியத்தை சரியாகச் செய்பவர், குடும்ப உறுப்பினரை புரிந்து நடப்பவர், பாசமானவர் போன்ற எண்ணங்கள இருந்தால் அந்த எண்ணங்களை பரிசீலினை செய்து பார்த்தால், அதிலுள்ள உண்மை புரியும். நாம் செய்யும் 10% -ஐ 100% ஆக நினைப்பது தெரியும்.
- ஒரு system அல்லது organisation அல்லது standards -களை பின்பற்ற சொன்னால், அது நல்லதிற்கே, யாரோ ஒருவரால், அல்லது பலரின் பல ஆண்டுகளின் சாரம் அது என்று புரியாமல், அது பிடிக்கவில்லை என்றால், இவையெல்லாம் தேவையில்லை என்று நினைத்தால், அதன் பின் உள்ள உங்கள் அபிப்ராயங்களை ஆராய வேண்டும். திறமைக் குறைவை மட்டுமல்ல புதியதை ஏற்றுக் கொள்ளாதது, செய்வதையே செய்வேன், அதனால் நான் முன்னேறவில்லை என்றாலும் பரவாயில்லை என்னும் மனப்பான்மையும் நம் comfort zone -உம் நமக்குப் புரியும்.
- ஒரு விஷயத்தை விட விரும்பினால், அத்துடன் சார்ந்த அனைத்தையும் விலக்குவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். புகை பிடிப்பதை விட விரும்புபவர், அத்தகைய நண்பர்கள், அத்தகைய இடங்கள், சூழ்நிலைகள் அனைத்தையும் கொத்தாக விடுவதை பற்றி சிந்திக்க வேண்டும். அதே போல ஒரு முன்னேற்றம் பெற தேவையானவற்றை கொத்தாகப் பெற முயல வேண்டும். சுத்தம் என்றால் அழகாக அடுக்குதல், தேவையில்லாததை ஒழித்தல், எடுத்ததை எடுத்த இடத்தில் வைத்தல், தேவையானதை தேவையானவற்றிக்கு உபயோகப்படுத்துதல் போன்றவற்றை ஆராய வேண்டும்.
- சுபாவத்தில் தள்ளிப் போடும் பழக்கம் இருந்தால், திறமையின்மை, கயமை, அல்பத்தனம், தப்பித்தல், தவிர்த்தல் போன்றவற்றிற்க்கு எதிரான நிலைகளை கொத்தாகப் பெற முயல வேண்டும்.
இப்படி அறிவுக்கான உச்சக்கட்ட சிந்தனை முறைகளை பூர்த்தி செய்த பிறகு ஆன்மாவிக்குரிய சிந்திக்காத நிலையை, சமர்பணத்திற்கான நிலையை எடுக்க வேண்டும்.
உள்ளது பூர்த்தியானால், உயர்ந்தது தானே வரும் என்பது அப்போது தான் புரியும்.