சிந்தனை – 1
வாழ்வு என்பது அடிப்படையில் உடலின் உழைப்பு. உழைப்பு செய்யப்படுவது எண்ணத்தின் அடிப்படையில். ஆனால் உற்று கவனித்தால் , இன்றைய உழைப்பு அனைத்தும் எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்பு, எண்ணம் ஆகியவற்றிற்கானது என்று புரியும். அந்த எண்ணத்திற்கு அடிப்படை சிந்தனை. ஆனால் சிந்தனை தான் நம் உடல் உழைப்பாக மாறுகிறது என்று நம்புவது கடினம். இதையே சிந்தனை என்பது எதிர்காலத்திற்கான மனதின் உழைப்பு என்று சொன்னால் ஓரளவு புரிந்துக் கொள்ள முடியும்.
அதை புரிந்துக் கொண்டால், வாழ்வைக் கடந்து, அன்னையை பின்பற்ற செய்ய வேண்டியது என்ன என்பது புரியும். நம்மை பற்றிய சிந்தனைகள், நம் வாழ்வைத் தருகிறது என்றால், அன்னையை பற்றிய சிந்தனைகள் அன்னை வாழ்வைத் தரும் என்பது உண்மையே. அத்தகைய சிந்தனைக்குச் செல்ல நாம் இருக்கும் நிலையில், சிந்திக்கும் நிலையில், ஒரு பூரணம் தேவை. உள்ளது பூர்த்தியானால் உயர்ந்தது தானே வரும் என்று தினசரி செய்திகளில் கர்மயோகி அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் பூரண நிலையான சிந்தனையற்ற நிலையை , தேவையற்ற சமர்பணத்தை நம் வசதிக்கு, நாம் எதுவும் செய்யத் தயாராக இல்லை என்பதற்கு பதிலாக, நம் இயலாமையை மறைக்க சொல்கிறோம்.
கர்மயோகி அவர்கள் சொல்வது – non -reaction , non -initiative , not thinking என்று எதுவாக இருந்தாலும் நம்மிடம் கடமையும், அதிகாரமும், பதவியும் ,ஆற்றலும் இருக்கும் போது அதை பயன் படுத்தாமல் இருப்பது, நம் முழு வலிமையுடன் அடுத்த கட்டத்திற்குச் செல்வது. அதிகாரம், பதவி, திறன், ஆற்றல், இல்லாதவன் – non -reaction , non -initiative , not thinking பற்றி பேசுவதில் பயனில்லை. சிந்திக்கத் தெரியாதவன், சிந்தனை இல்லாதவன் அதை விட்டேன் என்று எப்படி கூற முடியும்.
சிந்தனை சிறந்த செயலாக மாறி சிந்தனை அறுக்க வேண்டும் என்கிறார் கர்மயோகி அவர்கள்.
லட்சியமாக போராடிய பின்னரே, போராட்டம் மட்டுமே உதவாது என்று புரிய வரும். கடினமாக உழைத்து பலன் பெற்ற பிறகே, பலன் உழைப்பதற்கு மட்டும் வருவதில்லை என்பது புரியும். அது போன்ற வாழ்வின் சூட்சுமங்கள் புரிய பரிணாமத்தில் முன்னேற, ஒவ்வொன்றிலும் குறிப்பாக சிந்தனையில் அதன் உச்சத்தை அடைய வேண்டும்.
நாம் அவசரமாகச் செயல்படுவதை (impulsiveness) ஆர்வம் என்று நினைக்கிறோம் என்பது சிந்தித்தால் மட்டுமே புரியும்.
அன்னை பக்தர் என்று சொல்லிக் கொண்டு நாம் செய்வதெல்லாம் பிழைக்க கற்றுக் கொள்வதே என்பதை சிந்தித்தால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும். நம் சுயநலத்தை பக்தி என்று நினைக்கிறோம் என்பதும் புரியும்.
அதற்கு ஒரு ஆரம்பமாக எப்படிச் சிந்திக்க வேண்டும் என்று கர்மயோகி அவர்கள் கூறுகிறார்.
- ஒவ்வொரு முக்கியமான நேரத்திலும், நம்முள் உள்ள choice -களில் எது சித்தத்திலோ, வாழ்விலோ, முன்னேற உதவுகிறது என்பது பற்றிய சிந்தனை.
- அதன் அடையாளங்கள், நம் இலட்சியங்களையும் இலக்குகளையும் எப்படி நிர்ணயிப்பது என்ற சிந்தனை.
- நம்முன் உள்ள ஒவ்வொரு தடை, துன்பம், ஆகியவற்றிற்கு பின்னர் உள்ள வாய்ப்பு எது என்று சிந்திப்பது – அந்த தடை, துன்பம் ஏன் வந்தது என்று சிந்திப்பது.
- அதை வெற்றிகரமாக செய்ய, சந்தோஷத்தைப் பெற, நாம் பெற வேண்டிய திறமை, திறன், மனப்பான்மை, அறிவு எது என்று சிந்திப்பது
- செய்யும் அத்தனை செயல்களையும், சிறப்பாக செய்வது – அந்த வேலையில் சிறந்து விளங்குவது எப்படி என்று சிந்திப்பது.
- நமது இன்றைய அனுமானங்கள், கருத்துக்கள் , நம்பிக்கைகளை நாமே சவாலாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்திப்பது.
- ஒவ்வொரு நேரமும் இதை விட உயர்ந்தது ஒன்று உள்ளதா என்று சிந்திப்பது. காரணம் எப்போதும் நாம் எல்லாவற்றிலும் நாம் அறிந்த நிலையில் இருந்தே பார்க்கிறோம். பிரச்சினையான சூழ்நிலைகளை பகுப்பாய்ப்பு செய்கிறோம். நமக்குத் தெரிந்த வழியிலேயே பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைக்கிறோம்.