பிடியை விடுதல் என்னும்போது கர்மயோகி அவர்கள் குறிப்பாக மூன்று கருத்துகளை வலியுறுத்துகிறார்கள்.
நம் பிடி என்பது நம் பழக்கங்கள் , நம் அப்பிராயங்கள், நம் முன் முடிவுகள்.
பழக்கங்கள் அவசியமானவையானாலும், அனுபவங்கள் , அப்பிராயங்கள் இன்றியமையாதவையானாலும், அவற்றை ஒட்டிய முடிவுகள் தேவைதான் என்றாலும் – அவை நல்லவையானாலும், கெட்டவையானாலும் -ஒரு செயல் பழக்கமாகி விட்டபின் – ஆன்மீகப் பார்வையில் பார்க்கும் பொழுது, பழக்கத்தில் ஜீவனில்லை. முடிவுகளை ஜடமாக எடுக்கிறோம் என்பதை கவனித்துப் பார்த்தால் புரியும். மனம் பழக்கங்களைப் ஏற்படுத்த மட்டுமே உள்ளது. அதனால்தான் தான் அன்னை, ‘‘சாதாரண மனதின் பிடியில் இருந்து வெளியே வந்தால் , இறைவனைக் காணலாம்” என்கிறார்.
பிடியை விடுதலின் இரண்டாவது வகை – அநியாயம் என்று நாம் நினைப்பதன் பின்னால் உள்ள நியாயத்தை இறைவன் விரும்பும் வகையில் புரிந்துக் கொள்வது. அது நம்மை மனதின், உணர்வின், உடலின் அத்தனை பிடியையும் விட்டு வரச்செய்யும்.
மூன்றவது எது இல்லாமல் – மனிதரோ, பொருளோ, குணமோ செயலோ- என்னால் இருக்க முடியாது என்று இருக்கிறோமோ அதன் பிடியில் இருந்து வெளியே வருவது. நம் வாழ்வில் முக்கியமான பிரச்சினைகள் , முக்கியமான இடத்தில் ஏற்படுகிறது. அதில் முக்கியமான குணம், செயல் கலந்திருக்கும். அதை தீர்க்க வேண்டும் என்றால் ஒரு முக்கியமான குணத்தை ( பிடிவாதம், அதிகாரம், நான் செய்வதே சரி) விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். எவ்வளவுதான் தப்பு என்று தெரிந்தாலும், எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும், முக்கியமான குணத்தை மாற்றிக்கொள்ள முன் வருபவர் மிகச் சிலரெ.
பிடியை விடுதல் என்பது வாழ்வின் – உயர் சித்ததின் – தோல்வியே இல்லாத சட்டம் என்று தெரிந்தாலும், நாம் இருக்கும் நிலையே நமக்கு பிடித்து இருப்பதால், அதன் மீதுள்ள பிடியை நாம் விட மறுப்பதால், அதை தக்க வைப்பது நம் பொறுப்பே என்று நினைப்பதால், அதை விட்டால் நாம் எதிர்பாராதது நடந்து விடுமோ, அல்லது எதிர்பார்த்தது நடக்காதோ என்று நினைத்து, நம் வரையறை, அறியாமை போன்றவற்றை பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.
பிடியை விடுதலில் நாம் கடக்க வேண்டிய முக்கியமான இடம் இது.. காரணம், உயர்ந்த ஆன்மீக அனுபவங்களை பெற நாம் பயப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. காரணம் அது இது வரை அறிந்தவற்றிலிருந்து முழுமையாக வெளியே வர வேண்டி இருக்கிறது. ஆனால் மனதிற்கு தெரிந்த உயர்ந்ததைக் கூட நம்மால் செயல்படுத்த முடியவில்லை என்னும் இடமே அதி இருள்.
சாதாரண விஷயங்களில் கூட நமக்குத் தெரிந்த உயர்ந்த பண்பை நாம் வெளிப்படுத்த மாட்டோம், உயர்ந்த திறமையை, ஆற்றலை வெளிப்படுத்த மாட்டோம். அதை வெளிப்படுத்தினால் இன்னும் அதிகம் பெறலாம், ஏற்புத்தன்மையை அதிகப்படுத்தலாம் என்று தெரிந்தும் கூட அதை செய்வதில்லை போன்ற இடங்களை கவனித்தால் நாம் எந்த அளவு இறுக்கமான பிடிக்குள் இருக்கிறோம் என்பது புரியும்.
இது பற்றி மேலும் சில கருத்துகள்:
நாம் என்னதான் அறிவை, அனுபவத்தை பெற்றாலும் – விவேகம் , பக்குவம் அடைந்து விட்டதாக நினைத்தாலும்- குறிப்பான நேரத்தில் – நாம் பெரும்பாலும் உணர்ச்சியின் பிடியிலேயே இருப்பதைக் காணலாம். அதன் பிடியில் இருந்து வெளியே வந்து உயர் சித்தத்தின் அடிப்படைக்குச் செல்ல வேண்டும்.
நாம் பெரும்பாலும் false hood / அசுரனின் பிடியில் இருக்கிறோம். அன்னையின் கோட்பாடுகளுக்கு நாம் எந்த அளவு வாழ்ல் இடம் கொடுக்கிறோம் என்பதை – நமக்கு false hood மேல் இருக்கும் நம்பிக்கையின் அளவைக் காட்டும். பொன்னாசை, பெண்ணாசை / ஆணாசை , மண்ணாசை , ஆதிக்க / அந்தஸ்து மேல் உள்ள ஆசைகள் மனிதன் அசுரனின் பிடியில் உள்ளதைக் காட்டும். அந்த பிடியை விடாமலே இருக்க மேலும் மேலும்
தவறு செய்ய தூண்டும். அதன் முக்கிய உதாரணம் பணத்தின் மேல் நமக்கு இருக்கும் பிடி. உண்மையில் ஒரு நிலைக்கு மேல் அவை நம்மை பிடித்து கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. நாம் விட நினைத்தாலும்
அவை நம்மை விடாது என்னும் நிலைக்குப் போய் விடுவோம். அது புரிந்து நடப்பது உயர்ச்சித்தம்.
அடுத்தது பிடி கொடுக்காமல் பேசுவது முதல் – சொன்ன சொல் காப்பாற்றாதது வரை – அனைத்தும் பிடியை வைத்திருப்பதே. அதன் பின் உள்ள உஷார்த்தனம், அலட்சியம் – கயமை.
நம் உடலிலுள்ள எல்லா சக்திகளும் அகந்தையின் முழுப்பிடியில் இருக்கின்றன. இவற்றை எல்லாம் ஒன்று ஒன்றாய் எடுத்து அதன் பிடியை விட்டு விலக்கி, ஆன்மாவின் பாதைக்குத் திருப்புவது அவசியம். பிடி, பிடிவாதம், சுயநலம் ஆகியவற்றை மறுத்து மறுத்து, ஆன்மாவின் பண்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் பயிற்சியை நாம் மேற்கொள்வது பிடியை படிப்படியாக விடுவது.
இரண்டாவது நிலை – நாம் இறைவனின் பிரதிநிதி எனபது புரிந்து முடுந்த இடங்களில் எல்லாம் இறைவன் விரும் பண்புகளை வெளிப்படுத்துவது அடுத்த கட்டத்தில் பிடியை படிப்படியாக விடுவது.
மூன்றாவது நிலை – முதல் நிலையைத் தாண்டி, பிரதிநிதியான இரண்டாம் நிலையைக் கடந்து நாம் பிரதிநிதி மட்டுமல்ல, நாமும் இறைவனும் ஒன்றே என்ற நிலை ஏற்பட்டு, நமக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளி மறைந்து நம் செயல் இறைவன் செயலாக நடைபெற வேண்டும். அது முழுதுமாக பிடியில் இருந்துவெளியே வருவது.