இது எல்லாவற்றிக்கும் சுருக்கமான வழியாக கர்மயோகி அவர்கள் சொல்வது எந்த ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்னும் – இதை அன்னை முறைப்படி செய்வது எப்படி என்று கேள்வி கேட்டுக் கொண்டால், பாதி சுபாவத்தை கடந்தவராவோம். அந்த இடத்தில் என் மனப்பான்மை என்ன? அன்னை விரும்பும் மனப்பான்மை என்ன? என்று யோசித்தால் மீதி பாதி அகந்தையையும் கடப்போம் .
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் –
- வேலையின் பார்வையில் அது தர வேண்டிய முடிவின் சாரத்தில் பார்ப்பது.
- சூழலை, மனிதர்களை, சுமுகத்தின் பார்வையில் பார்ப்பது.
- எங்கெங்கே என் நம்பிக்கைகள், அன்னை மீதான நம்பிக்கையை தாண்டி இருக்கிறது (திறமை, வசதி, அந்தஸ்து, அதிகாரம், பலமான நண்பர்கள்)
- தோற்றுவிடுவோமோ, எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்னும் கலக்கம், பயம் என்பது போன்றவற்றின் பார்வையில் பார்ப்பது.
- ஒரு புது திறமையை, திறனை, சூழலை, பண்பை, ஏற்றுக்கொள்ள தயக்கம் அல்லது அது தொடர்பான மனப்பான்மை
- என்னுடைய இயலாமை, திறமைக்குறைவு, அறிவுக்குறைவு, குணக்குறைவு தெரிந்துவிடுமோ என்பதற்காக மறைக்கும் தயங்கும் இடங்களின் பார்வை.
மேற்கண்ட பார்வையில் நம் personality -ஐ வாழ்வில் பார்த்தால் நாம் மாற வேண்டிய இடங்கள், பெற வேண்டிய திறமைகள், வளர்க்க வேண்டிய குணங்கள், மாற வேண்டிய சுபாவங்கள் நமக்குத் தெரியும்.
சிறு சிறு மாற்றமே, சிறு சிறு வளர்ச்சியே, பெரிய மாற்றத்திற்க்கான பாதை என்கிறார். அதன் பின் உள்ள தத்துவம் என்னவென்றால் – சிறு விஷயத்தை சரியாகச் செய்பவனால் பெரிய விஷயத்தை செய்ய முடியும். சிறு விஷயத்தைக் கூட சரியாக செய்ய முடியாதவனால் பெரிய விஷயத்தை செய்ய முடியாது என்பதாகும்.
நாம் பெரும்பாலும் நம் பண்புகளால் தான் அறியப்படுகிறோம். நம் திறமை எதுவானாலும், உதாரணமாக நல்ல ஆசிரியர், புரியும்படி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர், அறிவுள்ள ஆசிரியர், மோசமான ஆசிரியர். நல்ல வேலைக்காரன், திறமையான வேலைக்காரன், சுறுசுறுப்பான வேலைக்காரன், விசுவாசமான வேலைக்காரன், நல்ல அம்மா, பண்பான அம்மா, கண்டிப்பான அம்மா – என்று எதை ஆராய்ந்து பார்த்தாலும் நம் திறமை ஒரு பண்போடு சம்மந்தப்படும் போது தான் அது முழுமை பெறுகிறது – நம்மை அறியமுடிகிறது. நல்லது, புண்ணியம் என்று நம்மில் விதைக்கப்பட்டது அனைத்தையும் ஆராய்ந்துப் பார்த்தால் அது ஒரு நல்ல பண்பு அல்லது குணத்தோடு சம்மந்தப்பட்டு இருப்பது தெரியும். அதை உயர்த்திக்கொண்டு செல்வது பரிணாம வளர்ச்சி.
முயற்சி முதலில் கட்டுப்பாடாக மாற வேண்டும். கட்டுப்பாடு பக்குவமாகி பண்பாகி சுபாவமாக மாற வேண்டும். உதாரணமாக கோபபடமாட்டேன் என்பது கட்டுப்பாடு. கோபம் வந்து அடக்கிக் கொள்வது பக்குவம். கோபமே வராதது பண்பு. கோபப்படவே தெரியாதது சுபாவம். இது கெட்டதிலிருந்து நல்லதிற்கு மாறுவது. அடுத்த நிலை நல்லதிலிருந்து மேலும் நல்லதிற்கு மாறுவது. Non -reaction , சமநிலை, understanding , other man point of view – பிறர் நிலை பார்வை, அன்பு, கருணை, அமைதி, etc .விற்கு மாற வேண்டும்.
நம் முன்தலைமுறை அம்மா, பாட்டி ஆகியவர்களை ஆராய்ந்தால் – ஈகோ நிறைந்த ஆண் வர்க்கத்திடம் எப்படி கட்டுப்பட்டு – பக்குவமாக – பண்பாக மாறி அடுத்த தலைமுறை உயர வழி செய்தார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் இந்த வழி (process )புரியும்.
அதற்கான ஆர்வம் அதற்கு ஒரு தொடக்கமாக அமையும். நம்பிக்கை வெற்றியை தரும் என்றாலும் வெற்றிகள் நம்பிக்கை தந்தால் அது அன்னையை அடுத்த கட்டங்களில் அறிய உதவும் என்கிறார் கர்மயோகி அவர்கள்.
இரண்டாவது வெற்றி தான் முதல் வெற்றியை உறுதிப்படுத்தும் – இல்லையெனில் அது நம்மால் வந்த வெற்றி அல்ல – நாம் முறை அறிந்து பெற்ற வெற்றி அல்ல. அடுத்த நிலையில் வெற்றி தான் முதல் நிலை வெற்றியை தக்க வைக்கும். காரணம் இப்போது நம் நம்பிக்கை முறைகள் மேல் இல்லை. முறைகளின் மூலமான பண்புகளின் மேல், அதை படைப்புத்திறனாக கொண்ட அன்னையின் மேல் இருக்கிறது.
பண்புகளுக்கு மாறுவது என்பது சத்தியத்திற்கு மாறுவது. சத்தியத்தின் உருவம் அனைத்தும் அன்னையின் படைப்புத்திறனுக்கான, பரிணாம முன்னேற்றத்திற்கான கருவிகள். பண்புகளில் முன்னேற்றம் என்பது பரிணாமத்தில் முன்னேற்றம். பரிணாமத்தில் முன்னேற்றம் என்பது நம் வாழ்வில் சுபிட்சமாக எதிரொளிக்கும்.