இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு நிலைகளை. – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப் பொருத்தி பார்க்கலாம்.
நாமறிந்ததது மனித வாழ்வு, தெய்வீக வாழ்வு என்பது நம் கற்பனைக்கு எட்டாதது. அதனால் யோக வாழ்வு அல்லது வாழ்வில் யோகம் என்பது பற்றியே நினைக்க வேண்டி இருக்கிறது. தனி மனிதன் வாழ்வு, strength, might , வலிமை, பலம் என்னும் அடிப்படையிலேயே இருக்கிறது. அதற்கு பதவி, பணம், அதிகாரம், உயர் தொடர்புகள் , ஜாதி என்று எது வேண்டுமானாலும் அடிப்படையாக இருக்கலாம்.
அதாவது அன்னை கூற்றின்படி பொய்யே அதன் அடிப்படையாக இருக்கிறது. உண்மைக்கு, சத்தியத்திற்கு இன்று அந்த பலம் இல்லை. இந்த அடிப்படையை, பொய்யின் அடிப்படையை சத்தியமாக்கினால் அது வாழ்வில் யோகம். அது தெய்வீக வாழ்வுக்கான யோகப் பாதை. நம் வாழ்வில் தாழ்ந்த கட்டங்களில் பொய் அபரிமிதமாகவும், சில நிலைகளில் பொய் குறைந்தும் இருக்கிறது. பல இடங்களில் வேறு காரணங்களுக்காக, குறிப்பாக மாட்டிக்கொள்வோமோ என்பது போன்ற பயத்தினால் உண்மையை கடைபிடிக்கிறோம். இவற்றிக்கு இடையே மனித வாழ்வு உள்ளது. சத்தியத்தைப் பின் பற்றுவதை அதிகப் படுத்தினால் பொய் குறையும். அதை மனித முயற்சியால், வாழ்வில், சமுதாயத்தை நினைத்து செய்வதானால் முடியாது. சிரமம். ஆனால் அன்னை கோட்பாடுகளை ஏற்று நம் வாழ்வை சத்தியத்தின் பிடிக்குள் கொண்டு வர முடியும். அது சிரமத்தைக் குறைக்கும். வாழ்க்கைக்கு யோகத்தின் சக்தியை, உயர் சித்தத்தின் சக்தியை பயன்படுத்துவது அது. இது யோக வாழ்வு இல்லையென்றாலும் , மனித வாழ்வின் அடிப்படையான பொய்யை குறைத்து, பொய் குறைந்த வாழ்வாக உயரும். அது பிரபஞ்சமும், பிரம்மமும் தான் நினைத்ததை நம் வாழ்வில் சாதிக்க நாம் இடம் கொடுப்பது. நாம் இடம் தரும் நிலைக்கு ஏற்ப நம் வாழ்வும் – வளர்ச்சி, முன்னேற்றம் , பரிணாமம் என்னும் நிலையில் இருந்து பலன் அளிக்கிறது.
தனி மனிதன் தன் விருப்பத்திற்காக, தன் சந்தோஷத்திற்காக , தான் முன்னேற்றம் என்று நினைத்ததற்காக செய்து கொண்டது – அவன் திறமை, நேரம், அறிவு, பலம் ஆகியவற்றைப் பொறுத்தது.
உதாரணமாக, நம் பிள்ளைகளுக்கு கல்வி வேண்டும் என்று நினைத்து நாமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், எவ்வளவு சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால் கல்வி இன்றைய சமுதாய தேவை, பரிணாம முன்னேற்றம், என்று சமூக நோக்கத்தை நம் நோக்கமாக எடுத்து, அதன் பகுதியான ஒரு பள்ளியில் சேர்க்கும் போது, அது நமக்கு சேவை செய்கிறது. நூறு அல்லது ஆயிரம் ஆண்டு அனுபவத்தை அதன் சாரத்தை நமக்குத் 15 அல்லது 20 ஆண்டுகளில் தருகிறது. காரணம் பள்ளி ஒரு ஸ்தாபனம்.
அது போல வியாபார நிறுவனங்கள் ஒரு ஸ்தாபனம். அவற்றுக்கு வியாபாரம் , பணம் நோக்கமாக இருந்தாலும் யாரோ ஒருவர் அதன் ஸ்தாபகர் மாத சம்பளம் பெறும் சுகத்தை தாண்டிய, தன் வரையறையை தாண்டிய ஒரு நோக்கத்தை எடுத்துக் கொண்டதால் ஏற்பட்டது. அப்படி இல்லையென்றால் நாமே பயிரிட வேண்டும், நாமே, பேனா , பென்சில், உடை தயாரிக்க வேண்டும். முடியுமா? சமுதாயத்தில் ஒன்றியதால் , அதன் தேவை ஒன்றை பூர்த்தி செய்வதன் மூலம் ஒரு வியாபாரி பெற்ற முன்னேற்றத்தை, சௌகரியத்தை சிந்தனை செய்து பார்த்தால் புரியும்.
சமுதாயம் என்னும் ஸ்தாபனமே அத்தகைய பலன் அளிக்கும் பொது, பிரபஞ்ச ஸ்தாபனமான அன்னையுடன் ஒன்றினால் கிடைக்கும் முன்னேற்றத்தையும் சௌகரியத்தையும் யோசிப்பதில்லை. நம் சௌகரியம் எதையும், நம் குணம் , அப்பிராயங்கள், பழக்கங்கள் எதையும் விட யோசிப்பதும் இல்லை.
எனக்கு எவரும் இல்லை, உதவிக்கு யாரும் இல்லை. நான் சொல்வதை கேட்க, ஏற்க யாரும் இல்லை, என்னை புரிந்து கொண்டவர் யாரும் இல்லை என்னும் நிலையில் இருந்த நான் – இந்த சக்தியை, அன்னையை, சுயநலமான காரணங்களுக்காக என்றாலும் – அதை தொட்ட போது , சற்றே திருஉருமாற எத்தனித்த போது அன்பு, பரிவு, பணம், உதவி, பதவி என்று பல வழிகளிலும் வந்து பொழிவதை என் வாழ்வில் கண்டேன். இருண்ட வாழ்வுக்கு நம்பிக்கை ஒளி வந்தது. அன்னையிடம் வந்த பிறகு வாழ்வு பெற்ற மாற்றத்தை காணுவது, அதை பற்றி சிந்திப்பது, மாற்றத்தை தேடுபவருக்கு இன்றியமையாதது. இந்த மாற்றம் ஏற்பட்டால், வாழ்வு உயரும், வருமானம் உயரும், மனம், நடத்தை, நோக்கம், திறமை, திறன் அனைத்தும் உயரும்.
முன்பு சொன்ன Ascent and Descent என்னும் நோக்கில் பார்த்தால், எப்படியாவது வாழ்வை ஓட்ட வேண்டும் என்பதே பிழைப்பு என்ற நிலையில் இருக்கிறோம். சிலர் சமுதாயம் முன்னேறிவிட்டது நாம் இப்படியே இருந்தால் நடக்காது என்று சமுதாயத்தோடு ஒன்றி அதற்கு தேவையான திறமை, மனநிலை பெற்று வளர்ச்சி என்னும் நிலையில் இருக்கிறார்கள். அதைத் தாண்டிய லட்சியத்தை கொண்டவர்கள், அதை நோக்கி தன் செயல்களை அமைத்துக்கொள்பவர்கள் முன்னேற்றம் என்னும் நிலைக்குச் செல்கிறார்கள்.
இந்த மூன்றையும் , உண்மை, நேர்மை, சத்தியம் வழிகளில் அவற்றை வெளிப்படுத்தும் உயர் பண்புகளின் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்னும் நோக்கத்தை பிரதானமாக கொண்டவர்கள் பரிணாமத்தில் முன்னேறுகிறார்கள். அது நம் ஆன்மா விரும்புவதை சித்தப்பூர்வமாக நாம் தொடும் நிலை.
நாள் முழுதும் வேலை செய்து வரும், அசதி, சோர்வை நீக்கி தெம்பு பெற தூங்குவதில் நாம் சத்சித்தானந்தத்தைத் தொடுகிறோம் என்கிறார் கர்மயோகி . அதை Conscious ஆக பெற குறைந்த பட்சம் நாம் ஆன்மாவை தொட வேண்டும். ஆன்மீக பண்புகளை தொட வேண்டும். அல்லது உயர்ந்த மனநிலைக்குரிய லட்சியம் ஒன்றையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். அதை அடைய முயல வேண்டும். ஒரு பெரிய நம்பிக்கை, பெரிய லட்சியம், பெரிய கருத்து, சத்சித்தானந்தம் தரும் தெம்பைத் தரும். நம்மால் அதிக பட்சம் சாதிக்க கூடியதை, சாதிக்க எடுக்கும் முயற்சிக்கு சக்தியைத் தரும். பண்புகளின் நோக்கத்திற்கு ஒன்றுவது ஒரு வகை தியானம். அதுவும் சச்சிதானந்தத்தின் சக்தியை தரும். அது கிராமத்தில் இருந்து நகரத்தின் தொடர்பு பெற்றவர் பெறும் முன்னேற்றம் போன்றது.
அப்படி நாம் தொடும் நேரங்களில் நாம் வருமானத்தைப் பற்றி மட்டுமே யோசிப்பதால் அதை வைத்தே பண்புகளை, அது தரும் பலன்களை முடிவு செய்கிறோம். ஆனால் அத்தகைய நேரங்களில் வீட்டில் வரும் சுமுகம், சந்தோஷத்தை நாம் கவனிப்பதில்லை. காரணமில்லாமல் வரும் joy -ஐ கவனிப்பதில்லை, அடிக்கடி யாராவது ஒருவருக்கு உடல் நலம் குன்றும் வீட்டில், சில மாதங்களாக அது நடக்கவில்லை, எப்போதும் முரன்பாடு, சண்டை, சச்சரவு என்று இருக்கும் இடத்தில் அது குறைந்து விட்டது, பல வருடங்களாக உறவு, நண்பர்கள் அதிகம் இல்லாத நிலையில் வராத நிலையில், இன்று பலரும் நம்மை தேடி வருகிறார்கள், கஷ்டப்பட்டு pass செய்த பிள்ளைகள் இன்று சற்று எளிதாக pass செய்கிறார்கள். நம்மை சுற்றிய உறவு, அனைவரும் வளர்கிறார்கள், கெட்ட செய்திகள் வருவது குறைந்திருக்கிறது, விற்காத நிலம் விற்றிருக்கிறது. தீராத வழக்கு தீர்ந்து இருக்கிறது. விவாகரத்துக்கு போன கணவன் மனைவி ஒற்றுமையானார், என்பது போன்ற விஷயங்களை நாம் கவனிப்பதில்லை. அதெல்லாம் ஆன்மாவைத் தொட்டதால் நடந்தவை என்று நமக்கு சிறிதும் தோன்றுவதில்லை. இந்த மாற்றங்கள், அது தரும் ஆனந்தம் 100 கோடிக்கு சமம் என்பது நமக்குத் புரிவதில்லை.
இதன் அஸ்திவாரம் மனதின் உண்மை. அது ஏற்கும் ஆன்மாவின் பண்பு, அதை ஒட்டிய ஒழுங்குபடுத்தப்பட்ட மனநிலை, உழைப்பு.அதுவே அன்னையைத் தொடும் குறைந்த பட்சத் தேவை. அதுவே தனி மனித நோக்கம். பிரம்மத்தின் நோக்கம்.
சரி, இது வரை கூறியதே நடைமுறை தான் என்றாலும், இன்னும் விளக்கமாகக் கூற முடியுமா என்றால் – செய்து பார்க்கலாம். நம் குணங்கள் பெருமையுடையவை அல்ல. பொறாமை, சந்தேகம், பயம், சுயநலம், மற்றும் குறுகிய மனப்பான்மை, சிறுமையின் ஏராளமான பரிமாணங்கள் நம்மிடையே உள்ளது. நான் அப்படி இல்லை என்றே கூறுவோம். அப்படி இல்லை என்று கூறும் வரை – உதாரணமாக, பொறாமை இல்லை என்று கூறும் வரை நமக்கு மாற்றமில்லை. அதைப் பற்றிய consciousness -ஐ வளர்த்துக் கொண்டு, உதவி மனப்பான்மையாக, தாராள மனப்பான்மையாக, பரந்த மனப்பான்மையாக மாற்ற வேண்டும்.
சிறியவர் சிறுமையை ஏற்பது பிரம்மத்தை கொண்டு வரும் என்கிறார் கர்மயோகி அவர்கள். நமக்கு அது நிச்சயம் அன்னையைக் கொண்டு வரும். நாம் செய்யும் past consecration, correspondence , life response ஆகியவற்றின் பின் உள்ள தத்துவம் இது தான். மனமாற்றம் என்பது, பண்புகளுக்கான முழு மாற்றம், அவை அன்னை சக்தியை வெளிப்படுத்தும் இடங்கள்.
சுருக்கமாக சொல்வதானால், சிறுமையிலிருந்து விடுபட்டு, உயர்ந்த மனிதனாகி அன்னையின் அருளைப் பெறுவது யோக வாழ்க்கை. மனித இயல்பிலிருந்து விடுபட்டு, தெய்வ இயல்பை, மேற்கொண்டு நம் சுபாவத்தை மாற்றுவது பூரணயோகம்.
இதை கர்மயோகி அவர்கள் ஒரு புராண கதை மூலம் விளக்குகிறார். மகாவிஷ்ணுவை பார்க்க போகும் நாரதர், வழியில் ஒரு ஞானியையும், பக்தரையும் பார்க்கிறார். மகாவிஷ்ணுவிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். இருவரும் நாங்கள் எப்போது மோட்சம் பெறுவோம் என்று கேட்டு வாருங்கள் என்கின்றனர் . நாரதர் திரும்பி வரும் போது இருவரையும் பார்த்து – நீங்கள் ஆயிரம் வருடத்தில் மோட்சம் பெறுவீர்கள் என்றார். ஞானி அதை கேட்டு சோர்வடைந்தார். பக்தர் 1000 ஆண்டுகளில் நான் மோட்சம் பெற்று விடுவேனா என்று துள்ளி குதிக்கிறார். அக்கணமே மோட்சம் பெறுகிறார். இருவரும் விஷ்ணு பக்தர்கள் என்றாலும், ஞானி அறிவால் சிந்தித்து ஆயிரம் ஆண்டுகள் என்பது வெகு தூரத்தில் இருக்கிறது, எப்படி முடியும் என்று நினைக்கிறார். தன் முயற்சியால் விஷ்ணுவை அடையும் மனநிலை அதன் பின் உள்ளது. ஆனால் பக்தரோ விஷ்ணுவை அடைவதை மட்டுமே பார்த்தார். அது ஆயிரம் ஆண்டுகளை வினாடிகள் ஆக்கியது.
வாழ்வின் சட்டப்படி ஞானம், பக்தியை விட உயர்ந்தது. ஆன்மீகச் சட்டப்படி கூட பெரும்பாலான ரிஷிகளும், முனிவர்களும் அதையே பெற நினைத்தார்கள். ஆனால், அது பூரணம் பெற வேண்டுமென்றால் நம் நோக்கம், நம் லட்சியம், நம்மில் இருந்து , நம் சுபாவம், இயல்பு ஆகியவற்றில் இருந்து பிரிந்து இருக்கிறது என்பது நமக்கு புரிய வேண்டும். . உடல், உணர்வு, அறிவு, மூன்றில் அறிவு உயர்ந்தது, என்றாலும் அதுவும் ஒரு செயலில் அது பிரிந்தே நிற்கிறது என்பதை சிந்தித்தால் காண முடியும். அறிவுக்கு தெரிந்தது எல்லாம் , உயர்ந்தன எல்லாம், நாம் செய்வதில்லை என்பது புரியும். அப்போதுதான் உடலும் உணர்வும் ஏற்றால் தான் அறிவால் சாதிக்க முடியும் எனும் ஞானம் வரும்.
சாதிப்பது உடல், அதற்கு சக்தி தருவது உணர்வு. அதற்கு திசையை, இலக்கை தருவது அறிவு. மூன்றும் சேரும் போது வாழ்வில் அனைத்தும் க்ஷணத்தில் பலிக்கிறது. உயர்ந்தது செயல்பட, தாழ்ந்ததின் ஒத்துழைப்பு தேவை என்னும் LIFE DIVINE தத்துவத்தின் எளிய விளக்கம் அது. இறங்குவது எப்படி ஏறுகிறது என்பதை கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.
ஞானம் மனத்திற்குரியது. பக்தி உணர்வுக்குரியது. பக்தி, ஆத்ம ஞானத்தை விட தாழ்ந்தது என்றாலும் அது வாழ்வில் சக்தி மையத்தில் இருப்பதால் பக்திக்கு திறன் அதிகமாக இருக்கிறது. நம் அறிவால் செய்வதை விட, பக்தியால் அன்னைக்காக செய்வது, அல்லது சமர்ப்பணம் செய்வது உடனே பலிப்பதன் காரணங்கள் இதுவேயாகும். குறைந்த பட்சம் அது நம் பிரச்சனையை தவறான, பொய்யான வழியில் இல்லாமல், நல்ல வழியில், அன்னை விரும்பும் வழியில் தீர்க்க வேண்டும் என்னும் மனநிலை மாற்றம் நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்க்கலாம்.