ஒரு முயற்சி தோல்வியடைந்தால், அடுத்த முறை அதையே செய்யாமல், செய்ததையே செய்யாமல் – ஏற்கனவே செய்ததில் இருந்த தவறுகளை, அறியாமையைத், திறமைக்குறைவை தவிர்த்து செய்வது, போன்ற சிறு சிறு மாற்றம், முன்னேற்றம் அருளைக் கொண்டு வரும். அது முழுமையான அறிவைத் தரும் வரை அந்த முயற்சியை உயர்த்திக்கொண்டே போனால், பொறுமை, பக்குவம், நிதானம், சமநிலை என்று முழுமையை அடையும் போது அன்னை அருள் , பேரருள் செயல்படும்.
ஒரு விஷயத்தை சோதனைக்காக எடுத்துக்கொண்டு பலனை மட்டும் பார்ப்பது சரியல்ல . பலனை இரண்டாம் பட்சமாக்கி காரியம் எந்த லட்ஷணத்தில் நிறைவேறி இருக்கிறது, எந்த நிலைக்கான அருள் நம் வாழ்வில் பூர்த்தியாகி இருக்கிறது, இன்னும் எந்த குணம், பண்பு இருந்தால் அடுத்த நிலைக்கான அன்னை அருளை அருளைப் பெற முடியும் என்பது போன்றவை நம் சோதனையின் நோக்கமாக இருக்க வேண்டும். அப்படி சிந்தித்து ஏற்கனவே பெற்ற அருளைத் தாண்டி அதிகம் பெற முடிந்தால், நாம் அருளை உற்பத்தி செய்யும் நுட்பத்தை தெரிந்து கொண்டு விட்டோம் என்று பொருள்.
மனித சுபாவம் புத்தகத்தில் – செய்யும் வேலையை பக்தியோடு செய்தால், ஒரு வருடத்தில் 10 மடங்கு சம்பாதிக்கலாம். அதன் முதலாளியின் லட்சியத்தோடு ஒன்றினால், அந்த கம்பெனிக்கே முதலாளி ஆகலாம் அல்லது அதே போன்ற கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று எழுதியிருப்பார். இரண்டுமே என் வாழ்விலும் என் நண்பர்கள் வாழ்விலும் நடந்தது. ஒரு மனிதனுடைய லட்சியத்தோடு ஒன்றும் போதே இந்த ளர்ச்சியென்றால் அன்னையின் லட்சியத்தோடு ஒன்றினால் நம் வாழ்வு எப்படி இருக்கும்.
அதாவது
– பக்தியின் உயர்வை அறிந்து அதன் நிபந்தனைகளை நம் வாழ்வில் பின்பற்றுவது அருளைப் பெறும் வழி.
– பக்திக்கான சக்தியின் உயர்வை அறிந்து அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்வது அன்னை அருளைப் பெறும் வழி.
– பக்தி, சக்தி இரண்டின் மூலத்தை அறிந்து அதோடு ஒன்றுவது பேரருளைப் பெறும் வழி.
இவையெல்லாம் நம் மன வளர்ச்சிக்கு ஒரு அளவுகோல். உதாரணமாக நம் சந்தோஷம் , நம் மனதைப் பொறுத்தது. சிறு வயதில் சந்தோஷம் தந்தது எல்லாம் இப்போது சந்தோஷம் தருவதில்லை. இன்று நமக்கு சந்தோஷம் தரும் விஷயங்கள் எவை என்று பார்த்தால் , நம் மனம் நமக்குப் புரியும். அல்பத்தனம், cheap ஆன சந்தோஷங்களை நாடுகிறோமா, உயர்ந்த விஷயங்களில் சந்தோஷத்தை தேடுகிறோமா, TV Serial சந்தோஷத்தை தருகிறதா, ஞானம், அறிவு தரும் புத்தகங்கள் சந்தோஷத்தை தருகிறதா, வதந்தி, கேலி, கிண்டல் சந்தோஷத்தை தருகிறதா. இனிமை , சுமுகம் சந்தோஷத்தை தருகிறதா, என்று தினம் தினம் நம்மை கவனித்தாலே நம் நிலை நமக்குப் புரியும். சும்மா இருக்கும் போது நம் நினைவில் ஓடும் விஷயங்களை கவனித்தால், நம் கயமை, சந்தேகம், பொறாமை, கெட்ட எண்ணம், இயலாமை, ஏமாற்றம், பயம், எல்லாவற்றையும் கண்டு கொள்ள முடியும். நாம் மாற வேண்டிய இடங்களை, பெற வேண்டிய பண்புகளை அது காட்டும். நாம் பெறும் முறைமாற்றம், நிலை மாற்றம், திருவுருமாற்றத்திற்கு ஏற்ப அருளோ, அன்னை அருளோ, பேரருளோ செயல்படும்.
– அன்னையை தெய்வமாக ஏற்பது அருளைத் தரும்.
– அன்னையின் அவதார நோக்கத்தை அறிந்து ஏற்பது அன்னை அருளைத் தரும்.
– நம் அவதார நோக்கத்தை அறிந்து நாம் உண்மையில் யார் என்பதை அறிந்து – நாமே இறைவன் என்பதை அறிந்து அதற்காக அன்னையை ஏற்றுக் கொள்வது பேரருளைத் தரும்..
இதையே தொழிலில் பொறுத்திப் பார்க்கும் போது:
– தொழிலில், திறமையையும், அறிவையும் அதிகப்படுத்தும் போது அருள் செயல்படும்.
– அதில் ஆர்வம், பண்புகள் கொண்டு வரும் போது அன்னை அருள் செயல்படும்.
– தொழிலில் சேவை மனப்பான்மையைக் கொண்டு வருவது பேரருளைக் கொண்டு வரும்.
– பலனுக்காக நாடும் போது அன்னை முறைகளை பயன்படுத்தினால் வருவது அருள்.
– பலனை நாடினாலும் அன்னையை நெருங்க இந்த வேலை ஒரு கருவியாக இருக்கும் என்று நினைத்தால் வருவது அன்னை அருள்.
– இது போன்ற பலன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நினைத்து செய்தால் வருவது பேரருள்.
– உழைப்புக்கு அன்னை சொல்லிய விதிகளைப் பின்பற்றுவது அருள்.
– குணத்திற்கு அன்னை சொல்லிய விதிகளைப் பின்பற்றுவது அன்னை அருள்.
– மனதுக்கு அன்னை சொல்லிய விதிகளைப் பின்பற்றுவது பேரருள்.
இப்படி ஒவ்வொன்றையும் உடல், உணர்வு மனம் – என்ற நிலைகளில் பிரித்து பார்க்க முடியும்.இவை எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அன்னை அன்பர்கள் தான் என்று இல்லை. பொது புத்தி – common sense உள்ளவர்கள் கூட இதில் பெரும்பாலானவற்றை யூகிக்க முடியும். ஆனால் இதையெல்லாம் தெரிந்த நாம் 1% கூட செய்வதில்லை என்பதே உண்மை. நமக்கு அன்னையைப் பற்றி எவ்வளவோ தெரியும். இருந்தாலும் நமக்கு ஜீவனற்ற பக்தி, பிரார்த்தனை என்பது மட்டுமே பிடித்திருக்கிறது. இதையெல்லாம் விட 108 பூ வை, சுற்றி வா, விரதம் போல ஏதாவது ஒன்று என்று இருந்தால் ஆர்வமாக செய்வோம். அன்னையை திருப்தி படுத்துவதை விட , கர்மயோகியை திருப்தி படுத்துவதை விட அவர்களுடன் இருந்தவர்களை , அவர்களின் கயமை , நடிப்பு தெரிந்தும் விடுவதில்லை.
அன்னை ஒரு சக்தி, முன்னேற்றத்திற்கான சக்தி, சுபீட்சத்திற்கான சக்தி என்பதை நாம் பயன்படுத்த விரும்புவதில்லை. நாம் முன்னேற நம் வாழ்க்கை முன்னேற தான் நாம் விரும்புகிறோம் என்பது உண்மை.
ஆனால் செய்து பார்க்க மட்டும் தோன்றுவதில்லை. பக்தி என்று சொல்பவர்கள் கூட அதை முழுமையாக செய்வதில்லை. நமக்குத் தெரிந்ததை எல்லாம் நம் அபிப்ராயத்திற்கு உட்பட்டு செய்து விட்டு முடியவில்லை என்னும் போது தான் வருவோம். கஷ்டமோ, நஷ்டமோ, சிறியதாக இருந்தால் அதை பொருட் படுத்துவதில்லை. வாழ்வில் இது சகஜம் என்று எடுத்துக் கொள்வோம். பிரார்த்தனை செய்யத் தோன்றுவதில்லை. செய்தால் ஆழத்தில் இருந்து வருவதில்லை. இதற்கு மேல் தாங்க முடியாது என்னும் போதே பக்தி, பிரார்த்தனை, ஆழத்தில் இருந்து வருகிறது. நமக்குத் தெரிந்ததைக் கூட செய்து பார்க்க தயாராக இல்லை. அப்படி செய்வதால் நஷ்டம் என்று எதுவும் கிடையாது. லாபம் மட்டுமே என்னும் நிலையில் கூட தெரிந்ததை செய்வதை விரும்புவதில்லை, மாறத் தயாராக இல்லை. பண்புகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் நமக்கு அருளை பெறத் தகுதி இருக்கிறதா என்ற கேள்விதான் எழுகிறது.
ஒவ்வொரு முறையும் நாம் பின்பற்றும் பண்புகளுக்கு அன்னை உடனே பதில் அளிப்பதை பாக்கிறோம். அதாவது அன்னை நம் அருகிலேயே இருந்து ஏதாவது செய்ய மாட்டார்களா , அருளை தர காத்திருப்பதை நினைத்தால் அன்னைக்கு நாம் அளிக்கும் கொடுமைகளை புரிந்து கொள்ள முடியும். நினைக்கும் பொது கண் கலங்கும்.
இறைவன் தன் ஒளியை தானே அனுபவிப்பதற்காக, அதன் மூலம் ஆனந்தப்படுவதற்காக தன்னைத்தானே இருளில் ஒளித்துக்கொண்டான். அதிலிருந்து வெளியே வந்து ஒளியைக் கண்டு ஆனந்தப்படுகிறான். அதாவது ஆன்மாவின் பண்புகளில் வெளிப்படுகிறான். அதையே நடைமுறையில் பார்க்கும்போது நான் நம்மை நம் உண்மையான தன்மையை இறைத்தன்மையை இறைவனே நாமாக மாறி இருக்கிறோம் என்பதை மறந்து நம்மை ஒளித்துக் கொள்கிறோம். இறைவன் செய்வதையே செய்கிறோம்.
– உடலை நோயிலும் வலியிலும் புதைத்துக் கொள்கிறோம்.
– உணர்வை பயத்திலும் சோகத்திலும் புதைத்துக் கொள்கிறோம்.
– மனதை அறிவை குழப்பத்தில் சந்தேகத்தில் புதைத்துக் கொள்கிறோம்.
இவற்றை அழித்து அவற்றிலிருந்து வெளியே வந்து அதற்கான ஒளியை அடையும்போது ஆனந்தம் வருகிறது. பிரம்மம் வெளிப்படுகிறது.
– ஆரோக்கியத்திற்கான வழிகள் நோயிலிருந்து வலியிலிருந்து விடுவிக்கிறது.
– தைரியமும் நம்பிக்கையும் – உணர்வில் ஒளிக்கு வர வைக்கிறது.
– ஞானம் மனதை ஒளிக்கு கொண்டு வருகிறது.
இவை எல்லாம் நமக்கு தெரிந்தவை தான். அனால் செய்வதில்லை. தெரிந்தும் செய்யாத இந்நிலைகளை unformed intelligence என்னும் நிலை. நம் ஆன்மா விரும்பும் அன்னை விரும்பும் பண்புகளை அடைய சரியான நிலை இதுவே.
அறியாமை என்பது – மனதின், உணர்வின் உடலின் – ஒரு பகுதி மற்ற பகுதிகளின் அறிவை விலகுவது. அது அடுத்த பகுதியை ஏற்றுக் கொள்ளும் போது அது முழுமை பெறுகிறது. உதாரணமாக அறிவு சொல்வதை எல்லாம் உணர்வு ஏற்று கொண்டால் உடல் பல துன்பங்களை தவிர்க்க முடியும். நிழல் என்பது இருள் அல்ல. அதை சுற்றியுள்ள ஒளி ஒரு குறிப்பிட்ட இடத்தில் பட வில்லை என்பது போன்றது அது. ஒளிப்பட்டால் இருள் நிழல் மறைந்துவிடும். அப்படி பார்க்கும்போது எண்ணங்கள் அன்னையே தொடும்போது அமைதி (Silence) வருகிறது. ஆசைகள், எதிர்பார்ப்புகள் அன்னை தொடும் போது சமநிலை (Equality) வருகிறது. உணர்வுகள் அன்னையே தொடும் போது ஆர்வம் (aspiration) பொறுமை (patience) விடா முயற்சி ( perseverance ) சக்தி (force) வருகிறது. இவை எல்லாம் சேர்ந்து அன்னை விரும்பும் பண்புகளை வெளிப்படுத்தும் செயல்படுத்தும் ஆற்றல் (energy) தைரியம் (courage ) வருகிறது அதாவது அன்னையின் சிம்பலில் உள்ள பெரும்பாலான படைப்புத்திறன் கொண்ட (manifesting aspects ) நம்மிடம் வருகிறது அதுவே பிரம்மம் பண்புகளில் வெளிப்படுவது. அது தரும் பலன் வாழ்வில் சாதாரண நடைமுறை பலனைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும். அது அன்னை அருள் நம் வாழ்வில் வெளிப்படும் முறை அது.
இத்துடன் இந்த கட்டுரை முடிகிறது. வேறு ஒரு லைஃப் டிவைன் தீம் பற்றி வரும் வாரங்களில் பேசலாம்.