பிரம்மன் நம்மில் வெளிப்பட போவது , அல்லது அன்னை நம்மிடம் வரப்போவது பொதுவான அருளாகவா , அன்னை அருளாகவா , பேரருளாகவா என்பது எதை பொறுத்தது என்றால் நம் நம்பிக்கை, மன மாற்றத்திற்கான ஆர்வம், பரந்த மனநிலை ஆகியவற்றின் அளவைப் பொறுத்தது. காரணம் நம் மனதின் அத்தனை நிலைகளும் அகந்தையின் நிலைகள். சுயநலத்தின் அத்தனை பரிமாணங்களும் அகந்தை தான். நம் பக்தி, நம் பிரார்த்தனை என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதில் சுயநலம் இல்லாமல் இல்லை. அதனால் நம் அகந்தையின் நிலைக்கேற்ற பலன் தான் நமக்கு கிடைக்கும். அதனால் அது பிரச்னையோடு இருக்கும். அல்லது அதற்கு மேல் வளர்ச்சி இருக்காது. காரணம் நாம் கேட்பது எல்லாம், நமக்கு, நம் குடும்பத்திற்கு, திருமணம், வேலை, படிப்பு, ஆரோக்கியம் என்றே இருக்கும். அதுவும் அன்னைக்கு – அது பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது என்று நினைத்து நமக்குத் தெரிந்த நல்லதைக் கேட்போம். அதில் எந்த பண்பின் வெளிப்பாடோ , பரிணாம முன்னேற்றமோ இல்லாததால், அதோடு அது நின்று விடும். முன்பு சொன்ன Loyola College உதாரணம் போல எந்த அளவிற்கு குறிப்பாக இருக்கிறதோ அந்த அளவில் நின்று விடும்.
அன்பர்களுக்கு வந்த புதிதில் இருந்த வளர்ச்சி, மாற்றம் இப்போது இல்லை என்று சொல்பவர்கள் நிறைய பேர். அதற்கு காரணம் இது தான். அடுத்த நிலைக்கான, அடுத்த கட்டத்திற்கான பண்புகளை வேண்டுபவர் வெகுச் சிலரே. நல்ல college , நல்ல வேலை, நல்ல வரன் என்று சற்றே அகண்டு கேட்கும் போது வருவதை நல்லது என்று ஏற்றுக்கொள்ளும் போது, மனம் விரிவடையும் அளவிற்கு அருள், அன்னை அருள், பேரருள் பலிக்கிறது. நாம் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு , மனமார ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு, பலனை எதிர்பாராமல் பண்பை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பிரம்மத்தின் ஆனந்தம் நம்மில் வெளிப்படுகிறது. அது வாழ்வில் அபரிமிதத்தை கொண்டு வருகிறது.
எனக்கு தெரிந்த ஒரு பெண், வேலை இல்லாமல் கஷ்டப்பட்டார். பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையும் இருந்தது. என்றாலும் கிருஷ்ணகிரி அருகில் ஒரு கிராமத்தில் வேலை கிடைத்த போது உடனே ஒத்துக்கொண்டு சென்றார். பெண்கள் அதிகம் செய்ய முடியாத granite unit வேலை அது. மனம் கோணாமல், கடினமாக உழைத்தார். ஒரு வருடத்தில் அவருடைய உழைப்பு, நடத்தை, திறமை, பண்பை பார்த்து பிடித்துப் போன அந்த முதலாளி, ஜாதி அந்தஸ்து பார்க்காமல், தன் factory -ஐ திறமையாக நடத்துவார் என்று கருதி தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இன்று அவர் 40 கோடி turn over செய்யும் கம்பனிக்கு Director . 10 கோடிக்கே பத்து வருடமாக நான் போராடும் போது, இரண்டு மூன்று வருடத்தில் 40 கோடியை அடைந்து விட்டார் அந்த பெண். காரணம் வந்த வேலையை சற்றும் சுணங்காமல் எந்த சிந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொண்ட அவர் மனநிலை. திறமை, பண்பு, ஆகியவற்றை அதன் உச்சத்தில் வெளிப்படுத்தியதால் வந்தது.
அன்னை அருள் நமக்கு வர வேண்டும் என்றால் Mother ‘s Consciousness நமக்கு வர வேண்டும். அதாவது அன்னைக்குப் பிடித்த விஷயங்கள், நமக்குள், நம் மனதுக்குள், நம் அறிவுக்குள், நம் செயலுக்குள் வர வேண்டும். அதாவது நம் consciousness, Mother ‘s Consciousness ஆக மாற வேண்டும். அன்னைக்கேற்ற மனநிலை, அன்னை முறைப்படி செயல்கள், அன்னைக்கான நோக்கங்களை நாம் எடுத்துக் கொள்ளும்போது அதற்கு ஏற்றாற்போல அருள், அன்னை அருள், பேரருள் , தானாகவே நம்மைத் தேடி வரும். ஒரு சின்ன மனமாற்றம் , எவ்வளவு பெரிய வாழ்க்கை மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது என்பதை நம்மில் பலர் பார்த்து இருக்கிறோம். காரணம் அது மனதின் எதோ ஒரு மூலையில் இருந்த ஒரு சின்ன உண்மை. அதுவே அன்னைக்குத் தேவை. அத்தகைய மனதின் உண்மை அருளைக் கொண்டு வரும்.
அது போலவே, வாழ்க்கையை புரட்டிப் போட்ட தருணங்கள், கசப்பான தருணங்கள், அவமானப்பட்ட தருணங்கள், என்ன செய்வது என்றே தெரியாமல் நின்ற தருணங்கள் போன்றவை நம் வாழ்வில் நடந்து இருந்தால், அந்த மனநிலை புரிந்தால், அந்த நேரத்தில், அன்னையிடமோ, வேறு தெய்வத்திடமோ, அடிவயிற்றில் இருந்து எழுந்த இயலாமையின் குரல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அபயக்குரல், சொல்லும், செயலும் அற்ற நிலை அது. அகந்தையை முற்றும் தொலைத்த நொடி அது. அன்னை என்ன சொன்னாலும் கேட்கும் நிலை அது. அன்று இருந்த மன நிலையை ஆராய்ந்து புரிந்து அன்று unconscious ஆக செய்த அந்த நிலையை conscious -ஆக கொண்டு வர முடிந்தால் “Consciousness” ஆக கொண்டு வர முடிந்தால் அது பேரருளைக் கொண்டு வரும்.
- அன்னைக்கு எதிரான விஷயங்களைச் செய்யாமல் இருந்தால், அது அருளைக் கொண்டு வரும்.
- அன்னைக்கு பிடித்த விஷயங்களைச் செய்தால், அன்னை அருளைக் கொண்டு வரும்.
- எதையும் அன்னை விரும்பும் பண்புகளுக்காக, பரிணாம வளர்ச்சிக்காக எதிர்பார்ப்பில்லாமல் செய்தால் பேரருள் தேடி வரும்.
- அருள் துன்பத்திலிருந்து விடுவிக்கும்.
- அன்னை அருள், இது போன்ற துன்பம் இனி வாழ்வில் வருவதைத் தடுக்கும்.
- பேரருள் – இது போன்ற துன்பம் இனி யாருக்கும் வராது என்று இருக்கும்.
இது எப்படியென்றால் ஒருவர் நிலத்தில் விதை விதைத்து விட்டு, தான் செய்ய வேண்டியதை எல்லாம் குறை இல்லாமல் செய்து விட்டு மழைக்காக வேண்டுகிறார். கர்மயோகி அவர் நிலத்தில் செய்ததை புத்தகத்தில் படித்து அதை எல்லாம் நினைவில் கொண்டு வந்து செய்தார். அவர் எதிர் பார்த்த அளவு மழை வந்து நல்ல மகசூலைத் தருகிறது. இது அன்னை அருளே என்று நம்புகிறார். அந்த பயிரின் நடுவே தற்செயலாக Star Fruit வளர்ந்திருப்பதைப் பார்க்கிறார். வறண்ட நிலத்தில் வளருவது இங்கு வளருமா , செல்லம் அண்ணி செய்தது என்றால் இதுவும் அன்னை செய்ததுதான் என்று அதை களையாக நினைத்து அகற்றாமல் அதையும் அன்னை தந்ததாக நினைத்து வளர்க்கிறார். அதிலும் லாபம் பெறுகிறார். அதை பற்றி அறிந்த விவசாய துறை, அது வறண்ட பூமி என்பதால்,அத்தகைய பயிர்களையும், ornament flowers எனப்படும் அலங்கார பூக்களையும் விளைவிக்க எல்லா விவசாயிகளையும் ஊக்குவித்தது. பழம், பூக்கள், பதப்படுத்தும் unit -கள் , Blast freezer van -கள் transit godown என்று பல தொழில்கள் வளர்ந்தது. அதன் பிறகு முதலமைச்சர் வெற்றி பெற்ற தொகுதி உள்ள மாவட்டம் என்பதால் வேகமாக அனைத்து தொழிலும் வளர்ந்தது. அது அந்த ஊரின் கட்டமைப்புகள், வசதிகளை வளர்த்தது. அதனால் இன்று 1500 கோடி Ola , 1000 கோடி Shoe Company என்று பல project அங்கு வந்துள்ளது. தனி ஒருவருக்கு வந்த அருள், ஒரு மாவட்டத்திற்கே பேரருளாக மாறியதை கண்கூடாக பார்க்கிறேன்.
இது போன்றவற்றை, அதாவது அன்னைக்கென்று நினைத்து நாம் செய்பவற்றை பார்த்தாலே, அதன் மூலம் நாம் பெரும் பலன்களை பார்த்தாலே அருள், அன்னை அருள், பேரருள் செயல்படும் விதம் நமக்குப் புரியும். இது போன்றவற்றையெல்லாம் தினம், தினம், பிறர் வாழ்வில், தொலைக்காட்சியில், செய்தித்தாள்களில் பார்த்துக் கொண்டு இருக்கிறோம், கேட்டுக் கொண்டு இருக்கிறோம். சொற்பொழிவுகளில் கேட்கிறோம். நம் வாழ்வில் அதைப் பொறுத்திப் பார்ப்பதில்லை. அன்னை அன்பர்கள் என்று நடிக்கும் கயவர்களிடம் பொருத்தி பார்த்து சொல்லும்படி கேட்கிறோம். அவர்கள் அர்த்தமில்லாது சொல்பவற்றை ஏற்றுக்கொண்டு அன்னையை விட்டு இத்தகையோரை அன்னைக்கு இணையாக ஏற்றுக்கொள்கிறோம். அதன் மூலம் நாம் இழப்பதை அருளை தடை செய்வதை நாம் கவனிப்பதில்லை. அன்னைக்கு கருவி ஆவதில்லை. அத்தகையோரின் அகந்தைக்கு மட்டுமே கருவி ஆகிறோம். ப்ரம்மம் வெளிப்பட முடிவதில்லை.
நாம் அருளுக்காக ஒரு பண்பை பின்பற்றும் போது , ஒரு உயர்ந்த மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளும்போது அன்னை அருளோ, பேரருளோ, அதை அதோடு விட்டுவிடுவதில்லை. நம் ஏற்புத் திறனுக்காக காத்திருப்பதில்லை. நம்மிடம் அதற்கான திறமையை உற்பத்தி செய்து அந்த அருளைக் கொடுக்கிறது. இதைத்தான் கர்மயோகி அவர்கள், நாம் அன்னையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அன்னை நம்மை நோக்கி இரண்டு அடி எடுத்து வைக்கிறார் என்று கூறுகிறார். காரணம் அன்னை அருளை அவர் Grace is the Gratitude of the Mother என்று வரையறுக்கிறார். நாம் அன்னைக்கு ஏற்றபடி வாழ்ந்தால் , அதற்காக அன்னை நமக்கு காட்டும் நன்றியறிதலை அன்னை அருள் என்கிறார். அன்னை நமக்கு நன்றி அறிதலோடு இருப்பதை விட வேறு என்ன வேண்டும் நம் வாழ்க்கையில் . அதை விட ஆனந்தம் தரும் ஒன்று இருக்க முடியுமா?
எனக்கு Professional qualification / Science based qualification என்று எதுவும் கிடையாது. ஆனால் அவற்றைப் படிக்கும் ஆர்வம் உண்டு. மனித சுபாவம் புத்தகத்தில் இருந்து சில பண்புகளை எடுத்துக் கொண்டு கடைபிடித்தேன். தினம் ஒரு வார்த்தை ஆங்கிலம், என் துறையை பற்றி ஒரு புது தகவல் என்று தினமும் படிப்பேன். இன்று பிற technical persons என்னிடம் பேசினால் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்கும் அளவிற்கு நான் ஈடுபடும் தொழில்களில் பற்றிய தொழில்நுட்ப அறிவு வளர்ந்து இருக்கிறது. இது வெறும் படிப்பினால் வந்தது அல்ல. அதற்கும் நான் பெற்ற அறிவுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. பண்புகளுக்கான என் ஆர்வம் திறமைகளை உற்பத்தி செய்து அருளைக் கொடுத்து இருக்கிறது. தமிழில், ஆங்கிலத்தில் கதை,கட்டுரை எழுதுவது, போன்ற திறமைகள் எதுவும் பத்து வருடங்களுக்கு முன் எல்லாம் இருந்ததில்லை. என் ஆர்வம் அருளைக் கொடுத்தது. அன்னை அருள் திறமைகளை உற்பத்தி செய்து , வாழ்வில் முன்னேற்றத்தை தந்தது. இன்று அது இந்த வலைத்தளம் மூலம் சில பேருக்காவது உதவியாக, சேவையாக மாறியது பேரருள். மாடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன் என்று துரத்த பட்ட எனக்கு இன்று இருக்கும் திறமைகள் அருள் உற்பத்தி செய்தவையே. ஒரு முறை கர்மயோகி என் ஆங்கில கட்டுரையை பார்த்து – சில வார்த்தைகளின் பொருளை ஆங்கில அகராதி பார்த்தே தெரிந்து கொண்டேன் என்றார் . அவர் ஆங்கில ஆசிரியர் என்பது பலருக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இதை பெருமைக்காக சொல்லவில்லை. அந்த அளவிற்கு அன்னையால் திறமைகளை உற்பத்தி செய்து அருளை தர முடியும் என்பதற்கு உதாரணமாக கூறுகிறேன். உண்மையில் இதை தட்டச்சு செய்யும் போது கண் கலங்குகிறது. எந்த பிறவியில் செய்த புண்ணியமோ அன்னையை தெய்வமாக அல்லாமல் ஒரு சக்தியாக அறியும் அறிவு வந்து இருக்கிறது. அதை ஒரு துளி கூட வீணாக்காமல் பரிணாமத்தில் உயர்வதே நாம் அவருக்கு காட்டும் நன்றி அறிதல்.
இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்க்கலாம்.