உதாரணமாக ஒருமுறை -மேல்மருவத்தூர், விருத்தாச்சலம், அரியலூர், மதுரை என்ற நான்கு இடங்களில் பிரிட்ஜ் வேலைக்கான டெண்டருக்காக இன்ஸ்பெக்ஷன் செய்ய சென்று இருந்தேன். மேல்மருவத்தூர் , விருத்தாச்சலம் இரண்டையும் பார்த்து முடித்த பிறகு – அரியலூர் செல்ல வேண்டும். மதியம் ஆகிவிட்டது. இந்த இரண்டிலும் பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லாதால் மீதி இரண்டு போய் பார்க்க வேண்டுமா என்று நினைத்தேன். அதோடு கள்ளகுறிச்சி கூட்டு ரோடு – பரோட்டா சால்னா சப்பிட்டே ஆகவேண்டும் என்று தோன்றியது. வேலையை மறந்து வண்டியை திருப்பி ஒரு பிடி பிடித்தோம். டெண்டர் அலோட் ஆகி வேலையை ஆரம்பித்தோம். முதல் இரண்டிலும் சாதாரணமாக நடந்து லாபம் கிடைத்தது. அடுத்தது அரியலூர் ஆரம்பிக்கும் போது ஏராளமான பிரச்சினைகள். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு , டிராபிக் நிறுத்த முடியாதது முதல் பொருட்கள் கிடைப்பது வரை ஏராளமான பிரச்சினைகள். போலீஸ் , highways ஆட்கள் நீங்கள் முதலிலேயே வந்து இருந்தால் விளக்கி இருப்போம் என்றார்கள். அதன் பிறகு அன்னையிடம் மன்றாடிய பிறகு no loss , no gain என்னும் அளவில் வர முடிந்தது.
அதே ஒரு முறை – அவசரமாக துபாய் செல்ல வேண்டி வந்தது. பாஸ்போர்ட் expire date நெருங்கி விட்டது. அப்ளை செய்தபோது மினிமம் 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் ஆகும் என்றார்கள். அதன் பிறகு விசா வேலைகள் என்று போக முடியாது என்றே நினைத்தேன். அதோடு அப்போதுதான் விவாக ரத்து பெற்று இருந்ததால் , புது அட்ரஸ் புரூப் போன்றவை இல்லை. முடியாது என்றே ஏஜெண்டுகள் சொன்னார்கள். என்றாலும் நம் கடமையாய் செய்து பார்ப்போம் என்று சமர்ப்பணம் செய்து அப்ளிகேஷன் நிரப்புவது முதல் அனைத்தையும் நானே சமர்ப்பணம் செய்து செய்தேன். பாஸ்போர்ட் ஆபீஸ்-இல் இன்டெர்வியூவில் முதல் நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றே சொன்னார்கள் . என் ஏஜென்ட் சிபாரிசில் ஏற்று கொண்டு அடுத்த கட்டத்திற்கு அனுப்பினார். அடுத்த நிலை நபர் வெகு கறார் பேர்வழி நாங்கள் அனுப்பினாலும் அவர் ரிஜெக்ட் செய்து விடுவார் – எதாவ்து “கவனித்து” கொள்ளுங்கள் என்று கூறினார் ஏஜென்ட். அவரிடம் சென்ற பொழுது கடுகடு என்று பார்த்தார். எல்லாம் கடைசி நிமிஷத்தில் தான் வருவீர்களா என்று கேட்டார். அட்ரஸ் புரூப் முதலிவற்றை இன்னும் பார்க்க வில்லை. பார்த்தால் என்ன செய்வாரோ என்று இருந்தது. முதலில் “கவனிக்கலாம்” என்று நினைத்தேன். ஆனால் இதுவரை சமர்ப்பணம் செய்து செய்தோம் இனியும் அப்படியே இருக்கட்டும் என்று நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருந்தேன். அப்போது அவர்க்கு ஒரு கால் வந்தது. மேலிட அழைப்பாக இருக்க வேண்டும் . அப்படியே பவ்வியமாக எழுந்து பேச ஆரம்பித்தார். என் அப்பிளிக்கேஷனின் கடைசி தாளை திறந்து கையெழுத்து இட்டு போ போ என்பது போல் சைகை செய்தார். நான் நகர்ந்தாலும் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. காரணம் போலீஸ் வெரிஃபிகேஷன் இல் நான் அந்த அட்ரஸ் இல் இல்லை என்பது தெரியும். அதோடு அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன் என் மாமனார் no -1 கு வேண்டியவர்கள் . விவாகரத்து கதைகள் , தகராறுகள் அவர்களுக்கு தெரியும். அதனால் ரிப்போர்ட் எப்படி இருக்கும் என்று தெரியாது. அவநம்பிக்கையுடனே அன்று இரவு படுக்க சென்றேன், மறு நாள் 11 மணிக்கு வீட்டின் அழைப்பு மணி சத்தம். கதவை திறந்தால் போஸ்ட் மேன் . சாதாரண போஸ்ட் மேன் . கொரியர் கிடையாது. வாங்கி திறந்து பார்த்தால் பாஸ்போர்ட். நேற்று மதியம் 12.30 மணிக்கு இண்டர்வீயூ இன்று புது பாஸ்போர்ட் . எப்படி நடந்து என்பதற்கு கர்மயோகியால் கூட “அருள்” என்பதை தவிர வேறு விளக்கம் தர முடியவில்லை.
இது எதை காட்டுகிறது என்றால் எந்த நிலையில் எந்த பண்பை எடுத்துக் கொள்கிறோமோ, அந்த நிலையே அதன் பலனை நிர்ணயிக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் ஒவ்வொரு கணத்திற்கும் நம்மில் ஒரு psychological dimension இருக்கிறது. மனப்பான்மை, நோக்கம், ஆசைகள், எதிர்பார்ப்புகள், பழக்கம், சுகங்கள், comforts, முன்முடிவு, அபிப்ராயங்கள் இருக்கிறது. அதுவே நம் செயலுக்கான பலனை முடிவு செய்கிறது. அது spiritual dimension ஆக மாறினால் ஆனந்தத்திற்கான பலனைப் பெற முடியும்.
இந்த நிலைகளுக்கு நாம் ஒரே நாளில் வர முடியாது என்பதால் இழையிழையாக படிப்படியாக organised ஆக வரச் சொல்கிறார். அதற்கு அவர் கொடுக்கும் படிகள் – Change – Shift – Transformation .
Change என்பதை முறை மாற்றம் என்றும்
Shift என்பதை நிலை மாற்றம் என்றும்
இந்த இரண்டும் திருவை அதாவது nature -ஐ , சுபாவத்தை மாற்றினால் அது Transformation – திருவுருமாற்றம் என்று கூறுகிறேன்.
It is an expansive movement to be accomplished by expansive heart . இந்த மிகப்பெரிய காரியம் , மிகப்பெரிய மனதாலேயே செய்ய முடியும் என்கிறார் கர்மயோகி அவர்கள். அதற்கு ஏற்றாற்போல் அருளோ, அன்னைஅருளோ, பேரருளோ செயல்படும்.
Change – முறை மாற்றம் என்பது நம் தவறுகள், நம் திறமைக் குறைவு, குணக்குறைவு, பண்புக்குறைவு, நமக்கு புரியும் நிலை. நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று தோன்றும் இடங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி இடங்களில் நம் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், முன்முடிவுகள், அபிப்ராயங்கள் மாறி இருக்காது. ஆனால் அத்தகைய மனப்பான்மையில் இருந்து வெளியே வர முடிவு எடுத்து நமக்குத் தெரிந்த அடுத்த நிலை உயர்ந்ததைச் செய்வது, தாழ்ந்ததை செய்யாமல் இருப்பது. ஒரு பிரச்சனையில் இந்த மாதிரி முடிவு எடுத்தால் அது முறை மாற்றம். அருள் அந்த பிரச்சனையால் பாதிக்கப்படாமல் அவரை விடுவிக்கிறது. Grace relieves the sufferer not the problem.
Shift என்பது நிலை மாற்றம். நம் விருப்பங்கள், அபிப்ராயங்கள், முன்முடிவுகள் ஆகியவற்றில் இருந்து வெளியே வந்து அதிலிருந்து வெளியே வரும் பண்புகளில் மட்டுமே நம்பிக்கை வைத்து செய்வது. இது அன்னை அருளைக் கொண்டு வரும். இங்கு அவர் பிரச்சனையிலிருந்து விடுபடுவார். அவரது தீவிரம் intensity தகுந்தாற்போல இனி அது போன்ற பிரச்சனையே வராது என்று சொல்லும் அளவுக்கு இருக்கும்.
Transformation – திருவுருமாற்றம் என்பது தான் எடுத்த பண்புகளின் வலிமையை எண்ணம், உணர்வு ஆகியவற்றில் முழுமையாக (integrally ) ஏற்று நம்புவது. அதற்கு எதிரானவற்றை செய்ய முடியாதது, அல்லது செய்ய தெரியாத நிலை. அது செயல் முறையில் மனப்பான்மை, ஒருமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதால் அது அவருக்கு மட்டுமல்ல, அவரை சுற்றியிருப்போருக்கும் அதே போன்ற பிரச்சினை வராது. அது பேரருள். அது நம் திறமை, திறன், முன்முடிவுகள், அபிப்ராயங்கள், சுகங்கள், ஆசைகள் ஆகியவற்றை அறவே விட்ட நிலை. இது பிரம்மம் தானே வெளிப்படுத்தும் இடம் என்கிறார்.
Absolute coming down without lower calling for it என்கிறார். அது பேரருள். Super Grace .
மாற்றத்தை நாடுபவர் தான் உள்ள நிலையிலிருந்து நோக்கம், குணம், மனப்பான்மையிலிருந்து ஒரு நிலை உயர முயல்வது முறை மாற்றம். அந்த குணம் அல்லது மனப்பான்மையின் உச்சத்தை அடையும் வரை அதை தொடர்வது நிலை மாற்றம். அதை தவிர வேறெதுவும் தெரியாது என்பது திருவுருமாற்றம்.
முறை மாற்றம் என்பதை கட்டுப்பாடு என்றும், நிலைமாற்றம் என்பதை பக்குவம் என்றும், திருவுருமாற்றம் என்பதை பண்பான சுபாவம் என்றும் புரிந்துக் கொள்ளலாம்.
உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் – கண்டதை தின்பதற்கு, ருசிக்காக தின்பதற்கு பதிலாக தேவையில்லாமல், பசிக்காமல் சாப்பிட மாட்டேன், என்பது முறை மாற்றம், ஒரு கட்டுப்பாடு.
சாப்பிடுவது என்பது அடுத்த வேலைக்கான சக்தி தரவே என்பது புரிந்து அதற்கு தேவையானவற்றை மட்டும் சாப்பிடுவது Shift – நிலைமாற்றம்.
சக்திக்கு தேவையானதை ஆனந்தமாக, ரஸாவிற்காக சாப்பிடுவது, அதைத்தவிர வேறெந்த நாட்டமும் , நினைவும் கூட இல்லாதது திருவுருமாற்றம்.
வேறு ஒரு உதாரணம் வேண்டுமென்றால் -கோபம் தவறு என்று அடக்கிக்கொள்வது முறை மாற்றம்,
கோபமே வராதது நிலைமாற்றம், கோபப்படவே தெரியாதது திருவுருமாற்றம்.
அப்படி பார்க்கும் போது நம் விருப்பம், நம் பழக்கங்கள், நம் அனுபவம், நம் அபிப்ராயத்தின் அடிப்படையில் ஒன்றை செய்யாமல் இருப்பது அல்லது அதைத்தாண்டி நம் அறிவு உயர்ந்த நிலையில் செய்வது முறை மாற்றம்.
அந்த செயலில் அகந்தையின் அத்தனை பரிமாணங்களையும் விட்டு பண்புகளே முக்கியம் என்று மாறுவது நிலைமாற்றம். வாழ்வு பண்புகளுக்காகவே . அதுவே பிரம்ம நோக்கம், பரிணாமத்தின் நோக்கம் என்று இருப்பது திருவுருமாற்றம்.
பண்புகளின் நோக்கம் புரிவது முறைமாற்றம். அதற்கான முழு முயற்சி நிலைமாற்றம். பரிணாமத்தில் முன்னேறுவது சமநிலை அடைவது திருவுருமாற்றம்.
ஆசைகளை, விழிப்பாக கவனித்து முறைப்படுத்துவது முறை மாற்றம். தேவையா? ஆசையா? என்பதை பிரித்தறிந்து தேவையை மட்டும் செய்வது, அதன் மூலம் ஆசைகளை வெல்வது நிலைமாற்றம். ஆசைகள், விருப்பங்கள், பற்றுகள் இல்லா நிலை திருவுருமாற்றம்.
ஒரு செயலில் உடலளவில் மாற்றம் கொண்டு வருவது முறை மாற்றம். உணர்வில் மாற்றம் கொண்டு வருவது நிலை மாற்றம். அறிவில் மாற்றம் கொண்டு வருவது திருவுமாற்றம்.
பண்புகளை வெளிநடத்தைக்கு கொண்டு வருவது, Behaviour முறை மாற்றம். character – சுபாவத்தை கொண்டு வருவது நிலைமாற்றம். personality -இல் கொண்டு வருவது திருவுருமாற்றம்.
பிரார்த்தனை முறை மாற்றம். சமர்ப்பணம் நிலைமாற்றம். சரணாகதி திருவுருமாற்றம்.
இவை சில உதாரணங்களே. இந்த நோக்கில் சிந்தித்தால் நாமே பல உதாரணங்களை, நிலைகளை முடிவு செய்ய முடியும். இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்க்கலாம்.