ஜடத்தையும் ஆன்மாவையும் இணைக்கும் போது வாழ்வு ஆனந்த மையமாக இருக்கும் என்பது கர்மயோகி பல கட்டுரைககளில் எழுதி இருக்கும் ஒன்று. லைஃப் டிவைன் இன் முக்கியமான கருத்தான True reconciliation of spirit and matter leads to intimate oneness and அந்த – ஆன்மாவிற்கும் ஜடத்திற்கும் ஏற்படும் உண்மையான சமரசம் ஒருமைக்கு வழி வகுத்து ஆனந்தத்தை அளிக்கும் என்னும் கருத்தை – ஜடத்தையும் ஆன்மாவையும் இணைக்கும் வழிகளை விலக எடுத்து கொள்கிறேன். எடுத்துக்கொள்கிறேன்.
ஜடமும் ஆன்மாவும் இந்த பிறவியில் படைப்பில் மனிதனுக்குரியவை என்பது நமக்கு தெரியும். அவற்றை நம்முள் இணைக்க வேண்டும். அக வாழ்வு ஆன்மாவிற்குரியது. புறவாழ்வு ஜடத்திற்குரியது. ஜடம் ஆன்மாவின் உண்மையைக் காண்பதாலும், ஆன்மா ஜடத்தின் உண்மையை உணர்வதாலும் அவை இணையும் என்று தெரிகிறது. அகங்காரம் ஒன்றே பிரிக்கிறது என்று புரிகிறது.
ஜடம் எப்படி ஆன்மாவுடன் இணைந்து செயல்படமுடியும், அதற்குரிய சட்டங்கள் என்ன என்று மனம் அறிய நினைக்கிறது. தெளிவு பெற்ற மனம் ஜடத்தையும் ஆன்மாவையும் இணைக்கும் கருவியாக செயல்பட முன் வருகிறது. உள்ளிருக்கும் ஆன்மாவை தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், அதற்கு சமர்ப்பணம் செய்வதாக சொல்லி தன்னைத் தானே பாராட்டிக்கொள்ள விரும்புபவர்கள், அது வெளியே வர உதவும் வகையில் தன்னுடைய எண்ணம், உணர்வு, மற்றும் வாழ்க்கைப் பாணியை மாற்றிக் கொள்ள முன் வர வேண்டும் என்கிறார் கர்மயோகி.
ஒருமைக்குத் தேவையான ஒரு முக்கியமான பண்பு பிறர் நிலைப்பார்வை. அகமே புறம், பிறர் நிலைப்பார்வை என்னும் இந்த இரண்டு விஷயங்களை ஒரு அன்பர் தீவிரமாக பின் பற்றினால் ஒரு ஆண்டில் அவர் தன் ஆன்மா வெளியே வருவதைக் காணலாம் என்கிறார். நாம் அதில் நம்பிக்கை வைத்து பின்பற்றினாலும் பெரும்பாலும் அதை compromise – சமரசம் என்னும் நிலையிலேயே செய்கிறோம். ஒரு முரண்பாட்டில் இரண்டு தரப்பு இருந்தால், இரண்டு தரப்பிலும் சில விட்டுக் கொடுத்தல் மூலம் வருவது சமரசம். அதில் சில இழப்புகள் இருக்கலாம். ஆனால் முரண்படும் இரண்டு தரப்புக்கும், இழப்பில்லாத லாபமாக ஒன்று அமைந்தால் அது இணக்கம்.
நமக்குத் தேவை அத்தகைய இணக்கமே . இதற்கு கர்மயோகி உதாரணமாகக் கூறுவது, இரு சகோதரர்களுக்கிடையே குடும்பச் சொத்தை பிரித்துக் கொள்வதில், பின் தங்கை திருமணம், தாய் யாருடன் இருப்பது என்பதில் பிரச்னை இருந்தது. பஞ்சாயத்து செய்தவர்கள் sago factory -ஐ அண்ணன் எடுத்துக்கொள்ளட்டும். நிலங்களை தம்பி எடுத்துக்கொள்ளட்டும். தங்கைக்கு அண்ணன் திருமணம் செய்து வைக்கட்டும். தாய் தம்பியுடன் இருக்கட்டும் என்றனர். அது ஓரளவு சரியான தீர்வாகத் தோன்றினாலும் அது சமரசத்திற்கான உதாரணம். ஆனால் sago factory -இல் அதிகம் போட்டியுள்ள இந்த ஊரில் இருவரும் இப்படி பிரிவது சரியில்லை என்று பின்னர் உணர்ந்தனர். அண்ணன் sago factory -ஐ எடுத்துக்கொண்டார். தம்பி விவசாய நிலங்களை எடுத்துக் கொண்டு வள்ளிக்கிழங்கு பயிரிட்டார். அண்ணனுக்கும் மற்றவர்களுக்கும் விற்பனை செய்தார். இரண்டு பெரும் வளர்ந்தனர் மனஸ்தாபமோ, சுமூகக் குறைவோ இல்லை. அதனால் குடும்பம் பிரியவில்லை. இருவர் குடும்பமும் ஒரு பத்தாண்டுகளில் ஊரிலேயே பெரிய குடும்பமாக வளர்ந்தது. இது இணக்கத் தீர்விற்கான உதாரணம்.
நமக்குத் தேவை ஆன்மாவிற்கும், ஜடத்திற்குமான இத்தகைய இணக்கம். ஆன்மா செயல்பட நாம் ஜடத்தை தயார்படுத்துவது தான் இந்த இணக்கத்தீர்வு. இதை நாம் பிறர்நிலைப்பார்வை, ஒத்திசைவு என்ற உள்ளே வெளியே என்னும் நிகர்நிலை கோட்பாடுகளை (inner outer correspondence ) ஒரு பண்பாக எடுத்துச் செய்திருப்போம். உதாரணமாக லஞ்சம் தர வேண்டி வந்தால், நாம் விரும்பாமல் இது வராது என்னுள் ஏதோ ஒன்று லஞ்சத்தை விரும்புகிறது, அவரிடத்தில் இருந்தால் நானும் அதையே செய்வேன், எனக்கு தகுதியில்லாததை அடித்துப் பிடுங்கும் எண்ணம் எனக்கு இருக்கிறது என்று பல வகையில் எடுத்துக் கொள்வோம். ஆனால் உன்னிப்பாக கவனித்தால் இவை அனைத்திலும் நம்மை சற்றே உயர்த்தி பிறரை தாழ்த்துவது தெரியும். நம் அடக்கத்தில் ஒரு இழை உயர்வு தெரியும். ஆனால் ஒருமை என்பது இருவரும் சமமாக இருக்கும் இடத்தைப் பார்ப்பது. அதற்கு ஒரு உதாரணமாக இந்த லஞ்ச விஷயத்தை எடுத்துக்கொண்டால், நான் சுபீட்சத்தை தேடுவது போலவே அவரும் சுபீட்சத்தை தேடுகிறார் என்பதே அந்த இணக்கம். அதை ஆழ நம்பினால், இதில் ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு இணக்கம் இருப்பது தெரியும். அதுவே ஒருமை.
முதலில் சொன்னதையெல்லாம் cosmic consciousness -க்கு , அண்ட ஜீவியத்திற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். அதை தாண்டி Transcendence consciousness -க்கு பிரம்ம ஜீவியத்திற்கு செல்ல வேண்டுமென்றால் எல்லா முரண்பாடுகளிலிருந்தும் , சுமூக குறைபாடுகளிலிருந்தும் நமக்குத் தெரிந்த சத்தியம், உண்மைகளைத் தாண்டி எங்கே ஒத்திசை வருகிறது, எங்கே சுமுகம் வருகிறது என்று அதை விட உயர்ந்த ஒன்றைத் தேடுவது பிரம்ம ஜீவியத்திற்குள் செல்வது. சுருக்கமாகச் சொன்னால் நானும் அவனும் ஒன்று என்று சொல்வதிற்கும், நானும் அவனும் ஒரே அம்சம் என்று சொல்வதிற்கும் உள்ள வித்தியாசம் அது.
இதற்கு உதாரணமாக அப்பா கூறுவது – Ball point pen , ink pen , குறைந்த விலைப் பேனா , உயர்ந்த விலைப் பேனா என்று எல்லாவற்றையும் பேனா என்றே சமநிலையில் பார்ப்பது ஒரு நிலை, பேனா , பென்சில், marker , highlighter , chalk என்று எல்லாவற்றையும் எழுது பொருளாகப் பார்ப்பது அடுத்தநிலை.
Ink -ஐ குச்சியை தொட்டு எழுதுவது, கையில் தொட்டு எழுதுவது, துணியை திருகி எழுதுவது, என்று எல்லாவற்றையும் பார்க்கும் போது இவற்றுள் எல்லாம் எழுதும் அம்சம் உள்ளது என்பது உயர்ந்த நிலை.
அந்த மனநிலை தான் நானும் அவனும் ஒன்று என்பதற்கும், இரண்டு பேரும் ஒரே அம்சம் கொண்டவர்கள் என்று உணர்வதற்கும் உள்ள வித்தியாசம்.
கணவன் மனைவி என்றால் உடலின் உறவு – ஜடத்தின் ஐக்கியம். உணர்வு நிலைக்கு ஐக்கியம் என்பது – தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்னும் நிலை. ஒரு அறையில் கணவன் shave செய்துகொண்ட போது , கன்னத்தில் கீறிக்கொண்டார் , சமையலறையில் இருந்த மனைவிக்கு கன்னத்தில் எரிச்சல் ஏற்பட்ட ஒரு உதாரணத்தை கர்மயோகி எழுதியிருக்கிறார். அறிவில் ஐக்கியம் என்பது குறிப்பறிந்து நடப்பது. ஆன்மாவில் ஐக்கியம் என்பது நானே அவர் என்பது. அந்நிலையில் இருவர் முகமும் ஒரே மாதிரி மாறும் நிலை என்று ஆஞ்சநேயரின் பக்தர் முகம், ஆஞ்சநேயர் போலவே மாறியதையும் உதாரணமாக கர்மயோகி சொல்லியிருப்பார். இதுவும் இருவர் என்பதிலிருந்து ஒரே அம்சமாக மாறுவதற்கான உதாரணம்.
இதையே கம்பெனியிழும் செய்து பார்க்கலாம். service, customer , தயாரிப்பு என்று அனைத்திலும் பிறர் நிலை பார்வை , ஒரு உயர்ந்த உண்மையை நோக்கி ஐக்கியமாக முடியும். அந்த கம்பெனி அபரிமிதமாக வளரும்.
இப்படிப் படிப்படியாகச் செல்வதை, பிராணன் – vital , மனம் – mind , ஜீவியம் – consciousness , ஜீவன் – Being என்று சென்று அடுத்து life , வாழ்வில், truth சத்தியம் என்று வளர்ந்து பிரம்மத்தில் முடிவது என்று கூறுகிறார். அப்படி consciousness வளரும்போது முதலில் ஒருமையை integration -என்றும் அதைவிட உயர்ந்ததை ஐக்கியம் oneness என்றும் குறிப்பிடுகிறார்.
இதற்கு உதாரணமாக கர்மயோகி தருவது – உள்ளூரில் இருக்கும் போது குடும்பம், அந்தஸ்து, ஜாதி என்று பல பிரிவினைகள் இருக்கிறது. மாநிலத்தை விட்டு செல்லும் போது வேறு ஒரு மாநிலத்தில் தமிழனாக உணர்கிறோம். வேறு நாட்டிற்கு செல்லும் போது இந்தியன் என்று உணர்கிறோம்.அங்கும் ஒரு இயற்கை சீற்றம் அல்லது பேரழிவு வரும் போது மனிதன் என்றே நினைக்கிறோம். இந்த மாற்றம் எப்படி வருகிறது? அந்த உணர்வை எப்படி பெறுகிறோம் என்று ஆராய்ந்தால் இந்த ஒருமை, ஐக்கியம் புரியும்.
மேலே போகப் போக அல்லது உள்ளே போகப் போக ஒன்று ஒருமையாகி ஐக்கியமாகிறது. ஆன்மாவையும், ஜடத்தையும் இணைக்க அந்த மனநிலைக்கு வர வேண்டும். பெரிய காரியங்களும் சிறு அசைவும் ஒரே சக்தியிலிருந்தே தோன்றுகின்றன என்னும் ஞானம் குறைந்தபட்ச தேவை. உடலின் அஞ்ஞானத்திலிருந்து சத்தின் ஞானம் வரை பல நிலைகள் உள்ளது. ஒவ்வொரு படியாகத் தாண்டி உயர்ந்த சத்தியத்துடன் ஐக்கியமாக வேண்டும்.
இதன் முதல் நிலை – அன்னையை அறிந்து உணர்ந்து, அவருக்கு தன்னை சேவகனாகக் கருதி அன்னையை செயலின் பிறப்பிடமாகவும், அன்னை தன் மூலம் செயல்படுவதாக நினைத்து தன்னை ஒதுக்கி தன் ஜீவனை அர்பணிப்பது.
இரண்டாம் நிலை – அந்த அர்ப்பணிப்பை அன்னை ஏற்றுக்கொண்டு நம் செயலை முறைப்படுத்தி தன் கருவியாக்கிக் கொள்வது.
மூன்றாம் நிலை – பிரபஞ்சத்துடன் ஒன்றி தன் இறை தன்மையை இழக்காமல் செயல்படும் நிலை.
அதன் ஆரம்பமாக அப்பா கூறுவது –
1. உடலால் பலனுக்காவும், உணர்வில் திருப்திக்காகவும், மனத்தில் ஆதாயத்திற்காகவும் சுயநலமாக செயல்படுவதிலிருந்து ஆன்மாவால் லட்சியமாக செயல்படல்.
2.. சுயநலத்திற்காக ஒரு வார்த்தை பொய்யும் சொல்லாமல் இருப்பது.
3. தன் ஆதாயத்தை விட தான் சார்ந்த ஸ்தாபனத்தின் உயர்வை கருதி எல்லாவற்றிலும் ஸ்தாபனத்தின் பக்கம் நிற்பது.
4. நாம் பிறருடைய கண்ணோட்டத்தை, கருத்துகளை, முன்முடிவு, அபிப்ராயம் இல்லாமல் ஏற்றுக் கொள்வது.
5. நாம் பிறரால் துன்பப்பட்டாலும், புண்பட்டாலும், எதிர்வினையாற்றாமல் செயல்படுவது.
6. நம் சொந்த நலனை விட, ஒரு உயர்ந்த கொள்கையை, லட்சியத்தை முக்கியமாக கருதுவது.
7. எண்ணம், உணர்வை கட்டுப்படுத்தி, மனதில் சமநிலை, மௌனம், அமைதியை விரும்புவது.
8. ஒருவர் செய்த தீங்கை பொருட்படுத்தாமல் அவர் மீது நல்லெண்ணம், கருணை காட்டுவது.
9. சராசரி மனித நிலைப்பாட்டிலிருந்து விலகி, எப்போதும் உயர்ந்த ஜீவிய பார்வையில் எதையும் பார்ப்பது.
10. இறை இலட்சியத்தை ஆதரிப்பது எப்படி, அதற்காக ஆன்மாவை சுதந்திரமாக செயல்பட வைப்பது எப்படி என்று யோசிப்பது.
இதெல்லாம் முடியுமா என்று நினைப்பவர்க்கு கர்மயோகி சொல்வது – நாம் நமக்கு நூறு அல்லது ஆயிரம் பேரைத் தெரியும் என்று நினைக்கலாம். எவ்வளவோ தொடர்புகள் உள்ளது, எவ்வளவோ பேரிடம் பழகுகிறேன், குடும்பம், நண்பர்கள் என்று உள்ளது, நான் எப்படி இதை செய்வது, என்று நினைப்பவருண்டு. அவர்களுக்கு கர்மயோகி சொல்வது –
எத்தனை பேருடன் நாம் தொடர்பில் இருந்தாலும் நம் நெருங்கிய தொடர்பு தொழில், சமுதாயம், குடும்பம் ஆகியவற்றில் நம் எண்ணத்தை, நம் உணர்வை, பாதிப்பவர்கள் மாற்றுபவர்கள் பத்திலிருந்து இருபது பேர் வரையே இருப்பர். அவர்களிடம் செய்யும் இந்த யோக முயற்சி வாழ்வை ஆனந்தமயமாக்கும் .