கடந்த வாரம் 25.02.23 சனிக்கிழமையன்று நடந்த கூடலில் உதாரணத்தை விளக்கமாக கூறிவிட்டதால் இங்கு மீண்டும் சுருக்கமாக தருகிறேன். ( தேவைப் படுபவர்கள் யூ – டியூபை மீண்டும் கேட்கலாம்).
வெள்ளம் வந்த பிறகு ஏராளமான நஷ்டத்திற்கு பிறகு பணப் புழக்கத்தின் தேவை அதிகமாக இருந்தது. அதனால் அப்போது வந்த ஒரு project -டை அன்னையிடம் சொல்லிவிட்டு ,அதாவது மற்றவர்கள் ஐம்பதிலிருந்து அறுபது நாள் ஆகும் என்று சொன்னதை நான் 40 அல்லது 45 நாட்களில் முடிக்கிறேன் என்று ரிஸ்க் எடுத்து சொல்லி எடுத்தேன். நான் நினைத்ததை போல வேகமாக செய்ய வேண்டும் என்றால் எனக்கு ஒரு மிஷின் தேவைப்பட்டது. அதன் விலை 7 அல்லது 8 லட்சம் ஆகும். அப்போது அவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் நிலையில் நான் இல்லை. அதனால் அந்த நினைவை சமர்ப்பணம் செய்தேன். மறுநாள் நான் அந்த ஆர்டரை எடுப்பதை தெரிந்து கொண்டு அதன் distributor ஹைதெராபாதிலிருந்து அழைத்தார். இப்போது scheme-இல் இருப்பதால் இப்போது வாங்கினால் 30% டிஸ்கவுண்ட் தருவதாக சொன்னார். ஆனால் அது ஜெர்மனியிலிருந்து வரவேண்டும் என்பதால் 4 முதல் 6 வாரம் ஆகும் என்றார். அதையும் சமர்ப்பணம் செய்தேன். பின் அதன் பாம்பே டிஸ்ட்ரிபியூட்டர் போன் செய்து ஓரிரு முறையே பயன்படுத்திய டெமோ மெஷின் இருக்கிறது 50% டிஸ்கவுண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். என்றார். நான் அதையும் சமர்ப்பணம் செய்தேன். இங்கே கவனிக்க வேண்டியது. நான் இதையெல்லாம் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. அவ்வளவு பணம் இல்லாததால் வேறு வழியில்லாததால் செய்தது அது. மறுநாள் அந்த கம்பெனியின் சேல்ஸ் எக்சிகியூடிவ் அழைத்து நீங்கள் இவர்கள் பின்னால் எல்லாம் செல்லாதீர்கள் பாலக்காட்டில் ஒருவர் வாங்கி விட்டு உபயோகப்படுத்த தெரியாமல் இருக்கிறார். 2 லட்சம் வந்தாலும் கொடுத்து விடுவதாகச் சொன்னார். அவரைப் பாருங்கள் என்று நம்பர் கொடுத்தார். அதையும் சமர்ப்பணம் செய்தேன். சற்று நேரத்தில் கோயம்புத்தூரில் இருந்து ஒரு கால் – நாளை ஒரு site inspection -க்கு வர முடியுமா என்று. அதை அன்னை தந்த sanction-ஆக எடுத்துக்கொண்டு கோவை சென்று அங்கிருந்து பாலக்காடு சென்று அந்த மிஷினை பார்த்தேன். நன்றாக இருந்தது.
2 லட்சம் பேசி மறுநாள் அரேஞ்ச் செய்து தருவதாக சொல்லி விட்டு, மறுநாள் மதியம் பணத்துடன் சென்றேன். ஆனால் அவர் இல்லை. அவருடைய பால்ய பள்ளி நண்பர்கள் திடீரென வந்ததால், அவர்களுடன் அவர் trekking சென்றிருப்பதாகவும் office assistant-டிடம் கொடுத்து விட்டு செல்லுமாறும், மீதியை மறுநாள் பேசிக் கொள்ளலாம் என்றும் சொல்லி சென்றிருக்கிறார். நான் செய்த call-களையும் எடுக்கவில்லை. இங்கு தான் சமர்ப்பணத்தை பற்றிய குழப்பம் வந்தது. மேலும், இதையும் அன்னை செயல் என்று எடுத்துக்கொண்டு கொடுத்துவிட்டு வருவோமா என்னும் குழப்பமாக வந்தது. காரணம் இது போன்று மிஷின்களுக்கு தேவை குறைவு. அதுவும் பழைய மெஷினை என்னைப் போல ஒரு சிலரே வாங்க முடியும். அப்படி இருக்கும் போது இவ்வளவு அலட்சியம் ஏன் என்று தோன்றியது. அதாவது இந்த ஒரு வாரத்தில், முதல் முறையாக, நான் என் அபிப்பிராயம், என் அனுபவம், என் முன்முடிவுகள் முன்னே வருகிறது. என் அகந்தையின் பரிமாணங்கள் , அதன் சக்திகளை அழைக்கிறது.. – பணத்தைத் தராமல் திரும்ப வந்து விட்டேன். அத்துடன் அந்த சமர்ப்பணம் முடிந்தது. என் பொதுப்புத்தியில் ஒட்டிய என் முடிவு சரியா அல்லது தந்திருக்க வேண்டுமா என்பதை இன்று வரை முடிவு செய்ய முடியவில்லை. பண விஷயங்களில் – பண்புகளை தாண்டிய தாக்கம் சமர்பணத்தில் இருக்கவே செய்கிறது. அது இல்லாமல், அன்னையிடம் கொடுத்த வாக்கு முக்கியம். வருவது அவர் விருப்பம் மட்டுமே என்று முழுவதும் எடுத்துக் கொள்ள முடிந்தால் அது முழுமையான சமர்ப்பணம்.
அன்னையிடம் சொல்லி விட்டு எதுவும் செய்யலாம் அகந்தை இருக்க கூடாது என்பதே முக்கியம். உதாரணமாக ஒருவர் எனக்கு பணம் தரவேண்டும். பலமுறை கேட்டும் தரவில்லை. எனக்கு தெரிந்த அன்னை முறைகள் – பிறர் நிலை பார்வை, நான் தரவேண்டிய பாக்கிகளை தருவது , மற்ற correspondence, கடந்த கால சமர்ப்பணம் என்று எனக்கு தெரிந்த அனைத்தையும் செய்தேன். வரவில்லை. அது பற்றி கர்மயோகிக்கு எழுதினேன். அவர் உன் பாணியில் இதை கையாள வேண்டும். ஆனால் அகந்தை இருக்க கூடாது என்றார். எனக்கு புரியவில்லை. அடுத்த மெயிலில் அவரிடம் விளக்கம் கேட்டபோது – இது எனக்கு வர வேண்டிய பணம் , இந்த வேளையில் எந்த தவறும் செய்யவில்லை – தடையை நீங்கள் எடுத்து விடுங்கள் அன்னையே என்று மட்டும் கூறிவிட்டு வேறு எந்த கோபம் , வெறுப்பு இல்லாத ஒரு நிலை – மன நிலை வரும்போது – அவரை அழைத்து மிரட்டு. உன் பாணியில் பணம் வரவில்லை என்றால் நடப்பதே வேறு என்று கூறு என்றார். இந்த கடிதம் வந்தது காலி ஆறு மணிக்கு. அவர் சொல்லும் நிலை புரியவில்லை என்றாலும் முடிந்த வரை எண்ணம், உணர்வு, செயல்கள் அனைத்தையும் சமர்ப்பணம் செய்து கொண்டு இருந்தேன். 12 மணி அளவில் மனம் அமைதியில் இருந்தது போல் இருந்தது. அவருக்கு போன் செய்யலாம் என்று எடுத்தேன். அப்போது ஒரு SMS வந்தது. என்னவென்று பார்த்தேன். அவர் தர வேண்டிய பணம் கிரெடிட் ஆகி இருந்தது.