பிறர் அனுபவத்தில் இருந்து நாம் பெரும்பாலானவற்றை எடுத்து கொள்ள முன்முடியும். என்றாலும் சில விஷயங்கள் நமக்கு மட்டுமே உரியது. நாம் தவறு செய்த இடங்கள் நமக்கு மட்டுமே தெரியும். அவற்றை நாம் சரி செய்ய வேண்டும் என்றால் நாம் அதன் மாற்றை ( opposite) செய்து பார்த்தே புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த தவறு சரியாகும் . மீண்டும் வராது. அதாவது சித்தத்தின் அல்லது வாழ்வின் முன்னேற்றத்திற்கான விஷயங்களை நாம் செய்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தொழிற்சாலையில் கடை நிலையிலிருந்து வந்தவர் hands on experience என்று சொல்வார்களே அப்படிப்பட்டவர்கள் மேல் நிலைக்கு வரும் கம்பெனிகள் நல்ல முன்னேற்றத்தை விரைவில் அடைகிறது.
நான் token Act ஆக சில பண்புகளை குறிப்பிட்ட காலத்திற்கு பின்பற்றி அதன் மூலம் ஒரு செயலின் அதன் அத்தனை பரிமாணங்களும் புரியும் அளவிற்கு கற்றுக்கொள்கிறேன். மனித சுபாவம் புத்தகத்தில் 300-400 சூழ்நிலைகளை கர்மயோகி விளக்கி எழுதி இருப்பார். அதன் முன்னுரையில் அவையெல்லாம் Truisms – வாழ்வின் உண்மைகள் அதைத் தர நினைக்கிறேன் என்று எழுதியிருப்பார். அது புரிய அதன் சாரம் புரிய நாம் அதன் அனுபவத்தை பெற வேண்டும்.
உதாரணமாக ஒரு முறை “பிடியை விடுதல்” என்னும் பண்பை Token act ஆக எடுத்துக் கொண்டேன். என் தொழிலுக்கு நேரடி போட்டியாளர் ஒருவர் இருந்தார். அவரால் எனக்கு கிடைக்கும் விலை எப்போதும் குறைக்கப்படும். ஒரு நாள் அவர் போட்டிக்காக ஒரு project -ஐ எடுத்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பொருளை வைத்து சரியாக செய்யத்தெரியாமல் சுமார் 10 லட்சம் நஷ்டமடையக்கூடும் என்னும் நிலையில் இருந்தார். அது நோக்கியா ப்ராஜெக்ட் என்பதால் பெரும்பாலோனோர் பார்வை அதன் மேல் இருந்தது. என் manager மற்றும் நலம் விரும்பிகள் இது நல்ல சந்தர்ப்பம். அவருடைய project -ஐ நாம் எடுத்து செய்வோம் என்றனர். ஆனால் நான் பிடியை விடுதல் என்ற கொள்கையால், தொழில் ரகசியத்தை எதிரியிடம் சொல் என்னும் அகந்தையை அழிக்கும் ஒரு வழியைப் பின் பற்றி அதை சரியாக எப்படி செய்வது என்று சொல்லித்தந்தேன். அதன் மூலம் அவர் நஷ்டத்தில் இருந்து தப்பித்தார். அன்றிலிருந்து இன்றுவரை நான் போகும் project களுக்கு அவர் செல்வதில்லை. அதனால் எனக்கு விலை அதிகமாக கிடைக்க ஆரம்பித்தது.
எனக்கு சமர்ப்பணம் என்பது முழுதும் இன்னும் பிடிபடவில்லை. ஆனால் அப்பா சொல்வது சமர்ப்பணம் செய்வதை organization of consciousness செய்யும் என்கிறார். அதற்கு உதாரணமாக இதைச் சொல்லலாம்.
ஆனால் இதே organization of consciousness -ஐ பிடியை விடுதல் வேறு ஒரு இடத்தில் செய்தேன். நான் பல முறை எழுதிய மதுரை Branch Manager உதாரணம். ( பலருக்கும் நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்) அவருக்கு தொழில் ரகசியம், செய்யும் முறை, எல்லாம் சொன்ன பிறகு அவர் தனித் தொழில் ஆரம்பித்து எனக்கு எதிராக சென்றதால் நான் நஷ்டமடைந்து மதுரை கிளையையே மூட வேண்டியதாயிற்று.
இன்னொருமுறை X என்னும் நண்பர் ஒருவர் எனக்கு பணம் வெகு நாட்களாக பாக்கி வைத்து இருந்தார். இன்னொரு நண்பர் Y, X க்கு பணம் தர வேண்டும். நான் தராதே என்று சொன்னாலோ, எனக்குத் தந்து விடு X ன் கணக்கில் கழித்து விடு என்று சொன்னாலோ கேட்கக்கூடியவர். ஆனால் இங்கும் பிடியை விடுதல் என்னும் பண்பால், நீங்கள் X க்கு கொடுங்கள். அவர் எனக்கு கொடுக்கட்டும் என்றேன். அதன்படி Y-X க்கு கொடுத்தவுடன் X எனக்கு அப்படியே தரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தான் தந்தார். மிகுந்த சிரமப்பட்டு தான் வாங்க வேண்டி இருந்தது .
இந்த மூன்று அனுபவங்களின் சாரமாக எனக்கு புரிந்தது Organisation of consciousness -ஐ எப்படி செய்யக்கூடாது என்பது. யாரிடம், எந்த அளவில், எப்போது செய்ய வேண்டும் என்று முழுதும் புரிந்தது. இப்படி ஒவ்வொன்றையும் செய்யும் போது தான் நம் எண்ணம், அனுபவம், அபிப்ராயங்களை தாண்டிய உண்மை நமக்குத் புலப்படும். அது தான் consciousness க்கு புலப்படுவது.
இதற்கு கர்மயோகி தரும் உதாரணம் போர் விதிமுறைக்கு மாறாக துரியோதனன் தொடையில் பீமன் அடித்து வீழ்த்தியது. அது தவறு என்று உலகம் சொல்லும். நியாய அநியாயத்தை தெரிந்த கிருஷ்ணரின் அண்ணன் பலராமரே துரியோதனனுக்கு ஆதரவு தந்து பீமனுடன் போருக்குச் செல்ல இருந்தார். சாதாரண அறிவிற்கும், மனப்பான்மைக்கும் அது தவறு என்று படும். ஆனால் consciousness க்கு அது சூக்ஷமத்தின் வீரம், ஆழ்மனதின் வீரம் என்று புரியும். தர்மத்தை நிலைநாட்ட falsehood பயன்பட்ட விதம் புரியும். இறைநிலையில் சத்தியம் வெற்றி பெறுவது மட்டுமே முக்கியம், நியாய அநியாயங்கள் என்று அவற்றிற்கு கிடையாது என்று புரியும். அப்படி புரிவது consciousness ,. அது புரியாத புதிர் அனைத்தையும் புரியவைக்கும்.
-நாம் சம்பாதித்து வீடு வாங்குகிறோம். என் வீடு என்கிறோம் என்ன தான் நாம் அந்த வீட்டுடன் ஒன்றி இருந்தாலும் நானே வீடு என்று நினைப்பதில்லை. இப்போது நம்மிடம் இருக்கும் எண்ணங்கள், அனுபவங்கள், அபிப்ராயங்கள் அறிவு எல்லாம் நாம் சேகரித்தது. நாம் நம் செயல்களால் சம்பாதித்தது. ஆனால் என் அனுபவங்கள், என் எண்ணங்கள் என்று புரியாமல், நாமே அவை என்னும் நிலைக்கு மாறிவிடுகிறோம். அந்த உண்மையை புரிய வைக்க வேண்டுமென்றால் நாம் அந்த எண்ணங்களை விட்டு வெளியே வந்து உள் பார்வை பார்த்தால் அதன் மற்ற பரிமாணங்கள் புரியும். அறியமுடியாதது என்று ஒன்றில்லை. அனைத்தும் அறியக்கூடியதே என்பது புரியும். அதை அறிவது consciousness . Consciousness க்கு கர்மயோகி கொடுக்கும் ஒரு விளக்கம் – That which always looks at Divine – உன்னுள் எது இறைவனை நோக்கியே இருக்கிறதோ அது consciousness.
நாம் அறிவால் செயல்படுவதாக நினைத்தாலும் உண்மையில் நாம் செயல்படுவது உணர்வுகளால். அதையும் எதிர் எதிரான நிலையில் வைத்து புரிந்துக் கொள்கிறோம். கெட்டதிற்கு எதிரானது நல்லது, துன்பத்திற்கு எதிரானது ஆனந்தம் என்னும் நிலையே நம் அறிவு. உணர்வு என்று சொன்னாலும் உண்மையில் அது நம் அனுபவங்களே. அனுபவங்கள் என்று சொன்னாலும் உண்மையில் நம் அறிவு என்பது நாம் ஏற்கனவே பெற்ற இரண்டு அல்லது மூன்று அனுபவங்களின் ஒப்பீடுகளே. இவற்றிலிருந்து வெளியே வந்து விவேகம் , பாகுபாடு, என்ற அறிவு நிலையில் கூட நாம் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால் இதையும் தாண்டி சத்தியத்தின் பார்வை என்ன, அது எந்த பண்புகள் மூலம் வெளிப்படும் என்று பார்த்தால் அது consciousness -ன் பார்வை. அது நம்மைப் பற்றிய ஒரு முழுமையான பார்வையைத் தரும்.