என் வாழ்வில் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்வது? என்று ஒரு பக்தர் கேட்ட கேள்விக்கு என் பதில் இது:
என்ன வேண்டும் என்ன நடக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியுமா என்பதை என் பதில் கேள்வியாக கேட்கிறேன். காரணம், முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் தேவை என்று நினைத்தது அடுத்த 10 ஆண்டுகளில் பைத்தியக்காரத்தனமாக பட்டது. அதற்கு அடுத்து நினைத்தது அடுத்த 10 ஆண்டுகளில் முட்டாள்தனம் என்று புரிந்தது. ஏன் மூன்றாண்டுக்கு முன் நினைத்தது இன்று சிறுபிள்ளைத்தனமாக படுகிறது. என் தேவை என்னவென்று இன்று வரை தெளிவாக இல்லை. அப்படி இருக்கும் போது இன்று என்ன முடிவு செய்தாலும் அது நம் அறிவுக்கு உட்பட்ட அல்லது இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அறியாமைக்கு உட்பட்ட முடிவாகத் தான் இருக்கும். நாம் இதுவரை செய்த பிரார்த்தனைகளை கவனித்தால் கூட இதை புரிந்து கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் better -ஆக கேட்டிருக்கலாமே என்று தோன்றும். சில கேட்டு இருக்க வேண்டாம் என்றும் தோன்றும்.
காரணம் நம் தேவை எது என்று நமக்கு தெரியாதது தான். அதைத் தெரிந்துக் கொள்ள கர்மயோகியின் கட்டுரைகளில் பல வழிகள் உள்ளது, என்றாலும் மிக அடிப்படையாக சொல்லக்கூடியது என்னவென்றால் நம் வாழ்வின் முதல் மற்றும் முக்கியமான நோக்கம் என்னவென்று பார்ப்பது. படிக்காத பெற்றோர்கள் என்றால் நம் தலைமுறையை படித்தவர்களாக மாற்றுவது, சாதாரண வேலை என்றால் professional ஆவது, வேலையில் ஓரளவு நல்ல நிலையில் இருக்கும் குடும்பங்கள் தொழில் முனைவோர் ஆவது, தொழில் முனைவோர் என்றால் அடுத்த கட்ட, technology, automation, diversification செல்வது என்று அடுத்த கட்டத்திற்கு தேவையானதை செய்ய வேண்டும், நடக்க வேண்டும், என்று நினைப்பது. வாழ்வு சூழல், சமுதாயம் அனைத்தும் அடுத்த கட்டத்திற்கு செல்ல தேவையானவை நடக்க வேண்டும் என்று விரும்புவது சரியான ஆர்வம்.
அதே போல personality-யில் நாம் அறிந் த உயர்ந்த மனநிலைகளை, சித்தத்தை அடைய தேவையானவை நடக்க வேண்டும் என்று நினைக்கலாம். இத்தகைய நினைவுகள் எல்லாம் பொதுவாக நம் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும். அது பேராசையாகக் கூட இருக்கலாம். ஆனால் அது நடக்க நம் ஆசை ஆர்வமாக மாற வேண்டும்.
அது சாதிக்க வேண்டும் என்னும் உறுதியாக மாறி, முழு முயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றைத் தருவதாக மாறவேண்டும்.
எந்த முயற்சியும் இல்லாமல் நடக்க வேண்டும், சிறு முயற்சிக்கு பெரிய result வேண்டும், குறுக்கு வழியில் செல்லும் எண்ணங்க ள் போன்றவை இருக்கக் கூடாது. ஆர்வம் தன்னை தானே பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு அதற்கான சக்தியை பெற வேண்டும். நோக்கம் தெரிந்த பிறகு, அதை energise செய்த பிறகு, அதை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று நினைக்க வேண்டும். அது specific- குறிப்பான குறிக்கோளைக் காட்டும். உதாரணமாக, உதவும் நிலைக்கு வர வேண்டும் என்பது பொதுவான நோக்கம் என்றால், பணம் தர போகிறோமா, கல்வித் தரப் போகிறோமா, முன்னேற்றத்திற்கான உபகரணம், systems தரப் போகிறோமா, motivation, advise, consultancy போன்றவற்றை தரப் போகிறோமா என்று உதவும் முறை பற்றிய தெளிவு குறிப்பானால் அது specific என்றாகிறது. அதன் பின் அதுவே நம் வாழ்வு முறையாக வேண்டும்.
- இதுவே நினைக்க வேண்டியது முதல் முடிய வேண்டியது வரையான வட்டம். அதற்கு அடிப்படை அதற்கான தகுதி வேண்டும் என்று நினைப்பது.
- அதை முனைந்து பெற தேவையான நேரம், உழைப்பை தர தயாராக இருப்பது.
- மனதில், உணர்வில், குணத்தில், நடத்தையில் உள்ள குறையை நிறைவாக மாற்ற நினைப்பது.
- எல்லாவற்றுக்கும் தேவையான பொறுப்புணர்ச்சி, பொறுமை, நிதானம், விடாமுயற்சி, பெறுவது.
– என்று நாம் பெற வேண்டியவற்றைப் பற்றி நாம் நினைக்க வேண்டும். இது எல்லாம் இருந்தால் என்ன வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்க வேண்டும் என்று நினைக்கலாம்.