நம்முடைய ஆசைகளுக்கு அளவே இல்லை. அதை திருப்திப்படுத்துவது என்பதே ஒரு நிறைவேறாத ஆசை என்பதும் தெரியும். ஆசைகளை நிறைவேற்றினால் நாம் ஆனந்தமாக இருப்போம் என்பது மிகப் பெரிய மாயை. உண்மையில் கானல் நீர் போல கிட்ட நெருங்க நெருங்க எட்டி போய்க் கொண்டே இருக்கும். இது பற்றி என் அனுபவங்களை, என் ஆசைகளை, நிறைவேறியது, நிறைவேறாதது போன்றவற்றைப் பற்றி சிந்திக்கும் போது, ஆசை தேவையா? அது இல்லை என்றால் நோக்கம் என்பதே இருக்காதே, நோக்கம் என்பதே இல்லை என்றால் வாழ்வு என்பதே இருக்காதே என்று தோன்றியது. அந்த பார்வையில் கர்மயோகியின் கட்டுரைகளைப் படித்த போது ஆசை இருக்கலாம், ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்தது.
முதலில் ஆசை ஏன் தோன்றுகிறது என்பது தெரிந்தால், அதை வழி நடத்த முடியும், திசை திருப்ப முடியும். என்னை பொறுத்த வரை என் ஆசைகளை கவனித்தால் அது உடல், மனம், உணர்வுக்கான ஆசை என்றே பெரும்பாலும் உள்ளது. இப்போது அதனுடன் ஆன்மீக ஆசைகளும், இந்த மூன்றிலும் சேராத, ஆன்மாவிலும் சேராத ஆசைகளும் வருகிறது. அவற்றை அடைய நினைக்கிறேன். அவற்றை அனுபவித்தால் அல்லது அடைந்தால் நான் ஆனந்தம் அடைவேன் என்று நினைப்பதால் அவற்றை நிறைவேற்றிக் கொள்ள தேவையான அனைத்தையும் செய்கிறேன்.
இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எனக்கு சந்தோஷம் தரும் அனைத்தையும் அது உடலுக்கான சந்தோஷமாக – கலவி, சாப்பாடு, சுக சௌகரியங்கள் என்று இருக்கலாம். உணர்வுக்கான சந்தோஷமாக இருக்கலாம் அறிவுஜீவி, பண வளம், சொத்து, அந்தஸ்து, அதிகாரம், ஏன் ஆன்மீக சக்திகளாக, சித்திகளாகக் கூட இருக்கலாம். அனைத்தையும் அடைய வேண்டும் என்பதே என் ஆசைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது. அவை ஒரு தனி நபர், குழு, பணம், பொருள், இடம், சூழல், நிகழ்வு என்று எதை ஒட்டி வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றில் அடைந்ததும் உண்டு, அடையாததும் உண்டு. நான் அனுபவித்த அடைந்த ஆசையில் உண்மையாகவே நான் நினைத்த ஆனந்தம் கிடைத்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதனுடன் உள்ள ஆசை அல்லது அதன் மீதுள்ள ஈர்ப்பு உடனடியாக போய்விடுவது போல தோன்றுகிறது. திரும்பவும் ஒரு வெற்றிடம் வருகிறது. அடுத்த நிலைக்கு ஆசை தள்ளப்படுகிறது. டிவி, கார், வீடு, புகழ், அந்தஸ்து என்று எதன் மீதும் என் ஆசை அதற்கான ஈர்ப்பு குறைந்த உடன் அதை மாற்றி அடுத்த நிலைக்கோ அல்லது வேறு நிலைக்கோ அல்லது அதற்கு இணையான ஒன்றுக்கோ தேடல் சென்று விடுகிறது.
ஒரு விதத்தில் இதை ஆசை நிறைவேறியதாக சொல்லலாம் என்றாலும் அதை saturation – நிறைவு அடைந்து விட்டதாகவோ அல்லது திரும்ப தேவை இல்லை என்னும் அளவிற்கு சொல்ல முடியாது. காரணம் அந்த ஒரு விஷயத்தில் ஒரு திருப்தி கிடைத்தது என்று வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த டிவி, அந்தப் பதவி, அந்த கார், அந்த அதிகாரம் என்று அந்த புகழ், என்று அந்த நிலையில், திருப்தி கிடைத்தாலும் உடனே அதன் தொடர்ச்சியாக வேறு ஒரு டிவி, பதவி, கார்,அதிகாரம், புகழ் என்று கிடைத்தால், இதை விட அதிக சந்தோஷம் கிடைக்கும் என்று தோன்றுகிறது. எப்போதும் அடுத்தவர் போடும் உடை, அடுத்தவர் table -க்கு வரும் உணவே நன்றாக இருப்பதாக அல்லது அதை நாம் தேர்ந்தெடுத்து இருக்கலாமோ என்றே தோன்றுகிறது.
There is no perfect tailor or husband என்பது போலவே இருக்கிறது.
என்னுடைய ஆசைகளும் அதற்கான ஈர்ப்புகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதாவது ஏதோ ஒன்று நாம் நினைக்கும் சந்தோசத்தை கொடுக்கும் என்ற உடன் அந்தப் பொருள், நபர், அல்லது சூழல், நம்மை ஈர்க்கிறது. உணர்வு ஈர்த்தால் மனம் அதை அனுபவிக்க நினைக்கிறது. அதுவே ஆசை என்னும் நம் நோக்கமாக மாறுகிறது. அதனால் பலருக்கும் வரும் ஆசை ஒன்று போல இருந்தாலும், ஒருவருக்கு ஒரு விஷயம் தரும் சந்தோஷம் மற்றவருக்கு தருவதில்லை. நமக்கே கூட முன்பு சந்தோஷத்தை கொடுத்த ஒன்று இப்போது தருவதில்லை. அல்லது அதே அளவு தருவதில்லை. மேன்மேலும் சந்தோஷத்தை நாடி craving – அதீத நாட்டம் உருவாகிறது. அந்த craving தான் நமக்கும் ஆசைகளுக்கும் ஆன தொடர்பை ஏற்படுத்துகிறது. அது ஏதோ ஒரு பகுதிக்கு மட்டும் சந்தோஷத்தை தரும் போது அதை, திருப்தி, பிடித்திருக்கிறது என்கிறோம். உணர்வுக்கும் சேர்ந்து தரும் போது அதை, lust – இச்சை என்கிறோம். மனதுக்கும் சேர்ந்து தரும் போது அதை passion – தீவிர வெறி என்கிறோம்.
உதாரணமாக ஒரு பாடலை கேட்கும் போது பொதுவாக பிடித்து இருக்கிறது என்கிறோம். அது உணர்வுடன் சேரும் போது உதாரணமாக காதல், இழப்பு, உறவுகள் போன்றவற்றுடன் தொடர்பு படுத்தப்படும் போது, அது emotion ஆகிறது. அதன் ராகம், சொற்கள், பதம், இலக்கியம், இசை போன்றவை சேர்ந்து மனதை தொடும் போது அது passion ஆகிறது. ஆண் பெண் உறவை இதில் பொருத்திப் பார்த்தால் இன்னும் நன்றாக இதை புரிந்துகொள்ள முடியும்.
அதாவது உடலை மட்டுமல்ல, உணர்வு, மனம், ஆன்மா என்று அனைத்து பாகங்களையும் நாம் திருப்திப்படுத்த முனைந்து கொண்டே இருக்கிறோம். அதற்கான ஆசை ஈர்ப்பாக, தாகமாக, தீவிர நாட்டமாக நம்முள் இருந்து கொண்டே இருக்கிறது. உடலுக்கான சுகங்கள், உடல் பாகங்களின் திருப்தி. உணர்வின் திருப்தி. உணர்ச்சிகளின் திருப்தி. மனதின் திருப்தி அகந்தையின் திருப்தி என்று அதன் பின்னாலுள்ள ஜீவனின் பகுதிகளின் (parts of the being) திருப்தியை நாம் கவனித்தால், நாம் நம் ஆசைகளை எங்கு மாற்ற வேண்டும் எப்படி திருவுருமாற்ற வேண்டும் என்பது புரியும். உதாரணமாக உடலின் தேவை பசி. அது ஆசையாக மாறும் போது அது வேலை செய்ய தேவையான சக்தியை தருவதற்கு வருகிறது என்பது மறந்து நாக்கின் ருசிக்கு என்று மாறி விட்டது அதோடு அதை காலத்திற்கு சம்பந்தப்படுத்தி இந்த நேரத்திற்கு சாப்பிட்டு ஆகவேண்டும், ஞாயிற்றுக்கிழமையானால், விசேஷ நாட்களானால், அசைவம், விருந்து, சிறப்பு சாப்பாடுகள், இனிப்பு, காரம் என்று தேவைகளும், ஈர்ப்புகளும் அதிகமாகி எல்லையில்லா ஆசைகளுக்கு அடிப்படையாக அமைகிறது.
உணர்வுக்கான தேவை பாதுகாப்பு என்பது மறந்து போய் உணர்ச்சிகளுக்கான தேவையாக மண், பெண், பொன், பதவி, அதிகாரம் என்று அளவற்ற ஆசைகளுக்கு அடிப்படையாக அமைகிறது.
அகந்தை என்பது கெட்டதிலிருந்து நல்லதை பிரித்தறிந்து ஆனந்தப்பட என்பது போய், சுயநலத்தை மட்டுமே புரிந்துக்கொண்டு அதை அனுபவித்து பார்க்கும் ஆசையாக மாறிவிடுகிறது .
நன்றாக கவனித்துப் பார்த்தால் இவை எல்லாம் உடல், உணர்வு, மனம் என்று தனித்தனியாக திருப்திப்படுத்துவதற்காக தான் இருக்குமே தவிர அனைத்து பாகங்களையும் அவை திருப்திப்படுத்தி இருக்காது. காரணம் இவை அனைத்தையும் முழுமையாக்கும் ஆன்மாவின் திருப்தியை நாம் எங்கும் கவனிப்பதில்லை. தேடுவதில்லை. அப்படி நாம் கவனித்தால், நாம் சந்தோஷம் என்று நினைப்பவை ஆனந்தம், பேரானந்தம் என்று மாறும்.