ஒரு பக்தர் அன்னை அன்பர் ஆக வேண்டும் என்று நினைத்தால் அவருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச அக உணர்வுகளை அக நிலைகளை கர்மயோகி கொடுத்திருக்கிறார். இவை திருவுருமாற்றத்தின் அடிப்படைத் தேவை என்பது அவர் கருத்து. அவை விழிப்பான சித்தம். வளைந்து கொடுக்கும் தன்மை. சரணாகதி.
விழிப்பான சித்தம் ( attentive consciousness) .ஒவ்வொரு கணமும் நம் உடல் உணர்வு மனம் ஆகியவற்றை கவனித்து அன்னை விரும்பும் வேலையை செய்கிறதா, அன்னை விரும்பிய விதத்தில்தான் செய்கிறதா, அவர் சக்தி, அவர் நோக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்த தான் செய்கிறதா, நமக்கு அதைப் பற்றிய தெளிவு இருக்கிறதா அல்லது புலன்களின் பிடியில் மனிதனுக்கே உரிய அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறோமா, அவரை நம்மால் நம் வாழ்வில் செயல்பட விட முடிகிறதா என்று பார்ப்பது.
அடுத்தது வளைந்து கொடுக்கும் தன்மை (Plasticity) . என்பது நம் சுபாவம் அனைத்தும் அவர் சக்தி இறங்கி வேலை செய்யும் அளவிற்கு நெகிழ்வாக, இறுகிய ( rigid )அபிப்பிராயங்கள், நடத்தைகள், மனப்பான்மைகள், நோக்கங்கள் இல்லாமல் இருக்கவேண்டும் அவரது ஒளி நம் உள்ளொளியை தொட முயலும் போது, ஆன்மாவை தொட முயலும் போது, நம்முடைய எந்த முட்டாள் தனமான சந்தேகமும், அவநம்பிக்கையும் அதைத் தடுக்கக்கூடாது அந்த அளவு நம் சுபாவம் இறுக்கமாக இல்லாமல், தளர்வாக, அவரால் வளைக்க முடிந்ததாக இருக்க வேண்டும். குறிப்பாக நம் உணர்ச்சிகள் விருப்பங்கள் எதிர்பார்ப்புகள் எதையும் அன்னையிடம் வலியுறுத்தக் கூடாது. மனதின் இயலாமை, உடலின் தாமஸ், உணர்வில் -இது வேண்டாம் என்னும் நிலை – என்று எதுவும் நம்மிடம் இருக்கக்கூடாது. இருந்தால் அதை கரைக்கத்தான் அன்னையின் ஒளி செலவாகும் என்கிறார். இவையெல்லாம் நம்மிடையே இல்லாமல் எந்த அளவிற்கு பார்த்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் சுபாவம் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்கும். ஏற்புத்தன்மை அதிகமாகும் . அன்னையின் கருவியாக செயல்பட முடியும்
அடுத்தது சரணாகதி. சரண்டர்(surrender) என்பது நம் அகத்தின் உள்ளே வெளியே நடக்கும், உடலில், உணர்வில், மனதில் நடக்கும் அத்தனையையும் கவனித்து அதை எண்ணத்திற்கு கொண்டு சென்று அபிப்பிராயங்களாக மாற்றாமல் – ஆன்மாவிற்கு கொண்டு சென்று பண்புகளாக மாற்றுவது. இது மேலே சொன்ன சித்தத்தையும் வளைந்து கொடுக்கும் தன்மையும் ஒவ்வொரு அணுவிலும் கொண்டுசெல்லும். அன்னை ஒளி வர, விவேகம், ஞானம் வர, தன்னை தடையில்லாமல் திறக்கும் வழி அது. நம் அகம், புறம் ஆகியவற்றுக்கான ஒருமை, சுமுகம் ஆகியவற்றை தரும் சிறந்த வழி அது. அது செய்யும் வேலையில், உணர்வில், மனதில், அன்னை விரும்பும் செம்மையை தரும். ஜடமான உடல் கூட, அன்னை ஒளியை நேரடியாகப் பெறும் அளவிற்கு, அந்த செம்மை ஏற்புத் தன்மையை அதிகப்படுத்தும். அவரை ஆழ்மனதில் தான் உணர வேண்டும் என்ற நிலை இல்லாமல், மேல் மனதில் , சூழலில் நம்மால் உணர முடியும். குறிப்பாக நமது சிறுபிள்ளைத்தனமான அறியாமையின் செயல்களை அது அனுமதிக்காது. இதைவிட ஞானம் பெற பெரிய திறமைகள் தேவையில்லை என்பதால் இந்த வகையான சரணாகதியை நாம் முயல வேண்டும் என்கிறார் கர்மயோகி.
உடல் வளரும் போது உடலின் பாகங்களுக்கான வளர்ச்சியும் ஏற்படுகிறது. மனம் வளரும்போது உணர்வு, உணர்ச்சிகள், எண்ணங்கள், நோக்கங்கள் மாறுகின்றன. ஆன்மா வளரும்போது பக்தி, ஞானம் இடையறாத அன்னை நினைவு, சேவைக்கான ஆர்வம் ஆகியவற்றுக் கான ஆர்வம் வளரும். அது, தான் விரும்பிய ஒரு மாற்றத்தை நம்மில் தரும்.
மனம் இத்தகைய முறையை நாடுகிறது இதை கடைபிடிக்க தோன்றுகிறது என்றால் அதர்க்கான வித்து உள்ளது என்று பொருள். அதற்குரிய முயற்சி பலன் தரும். ஆர்வம் இதற்குரிய சக்தியை தரும். நாம் உள்ள நிலையில் மற்றவர்களை விட அதிகமாக சாதிக்க இது உதவும்