உண்மை முழுமையில் இருக்கிறது பகுதியில் இல்லை. முழுமை என்பது காலத்தைக் கடந்தது. உண்மை, சத்தியம் என்பதும் காலத்தைக் கடந்தது என்பதால் உண்மை முழுமையில் உறைகிறது. காலம் பகுதி, சத்தியம் முழுமை, குறுகிய காலம் சிறிய பகுதி. நெடுங்காலம் பெரிய பகுதி. எனவே உண்மை குறுகிய காலத்தை விட நெடுங்காலத்தில் உறைகிறது. மனிதன் தேடும் ஆனந்தம் அங்கே இருக்கிறது – என்பது ஒரு லைப் டிவைன் விளக்கம்.
குறுகிய கால பலனுக்காக நாம் பொய்யின் உருவங்களை , அதன் வழிகளை (false hood ) எடுத்துக்கொண்டால் அது தவறு. ஒரு விஷயத்தில் சத்தியம் ( truth ) எது என்று தெரிந்து கடைபிடித்தால் , குறுகிய காலத்தில் பலனளிக்காதது போல் தோன்றினாலும் நெடுநாளில் நிச்சயம் அது பலன் தரும். உதாரணமாக நான் அலுமினியம் பார்ட்ஸ் தயாரிக்க ஒரு பங்குதாரருடன் சேர்ந்து செய்தேன். நாளடைவில் அவர் பணமே குறியாக அன்னைக்கு பிடிக்காத தவறுகளை செய்ய ஆரம்பித்தார். அறிவுரை கூறினேன், ஆறு மாதம் பொறுத்தேன் . சரி வரவில்லை என்னும்போது அன்னைவழிகளே முக்கியம் என்று விலகினேன். ஏறத்தாழ ஒன்றரை வருட உழைப்பும் பத்து லட்சமும் நஷடமானது. ஆனால் ஒரு வருடம் கழித்து அவரைப் பற்றித் தெரிந்து அவர் வாடிக்கையாளர்கள் என்னை நாடி வந்தார்கள். நான் அலுமினியம் பார்ட்ஸ் தயாரிக்க ஆரம்பித்து இன்று ஓரளவு நன்றாக நடக்கிறது. நான் மதுரை ஆபீஸ் உதாரணம் ஒன்று அடிக்கடி சொல்லி இருப்பேன். எப்படி என் Manager – ஆல் இழந்த பிசினஸ் எனக்கு திருப்பி வந்தது என்று.
இந்த இரண்டு மூன்று நிகழ்வுகளிலும் நான் கண்டது – இழப்பது என் கர்மா அல்லது வாழ்வின் மறுமொழி என்றால் என்னை அறியாமல் பின்பற்றிய பண்புகள் அதை தடுத்தது. எதிரிகள் நண்பர்கள் ஆனார்கள், துரோகம் எனக்கு சாதகமாக முடிந்தது, வாழ்வின் சதி என் சுபிட்சமாக மாறியது.
அதாவது உண்மையை அதன் வெளிப்பாடுகளை முக்கியமாக கொண்டு நாம் வாழ்க்கையை நடத்தினால் எதுவும் நம்மை பாதிக்காது. அப்போது பாதிப்பு போல் தோன்றினாலும் எதிர்காலத்தில் அது ஒரு பெரிய நன்மையே தரும். உண்மைக்கான பலன் என்றும் உண்டு. இத்தகைய மன நிலை அன்னைக்கு உகந்த மன நிலை.
பண்புகள் என்பது முழுமையான இறைவனின் பகுதி. அதனால் புரியவில்லை என்றாலும் , முடியவில்லை என்றாலும், சம்பிரதாயமாக பின்பற்றினாலும் ஒரு method ஆகப் பின்பற்றினாலும் அது இறைவன் விரும்பும் பண்பு என்பதால் அதற்கான அருள் நமக்கு வராமல் இருக்காது.
வாழ்வில் பிரச்சினை என்பது ஒரே காரணத்தால் இருக்காது. அது பல பகுதிகளின் தொகுப்பாக இருக்கும்.. ஒரு வீடு கஷ்ட நிலைக்கு வந்தால் பணம் பற்றாக்குறையாகும், வேலை செய்ய விருப்பமில்லாமலிருக்கும், வீடு அசுத்தமாகும், தவறான பலனை நாடும் மனப்பான்மையிருக்கும். அர்த்தமற்ற விரயம் செய்வார்கள், எந்த ஒழுங்குமிருக்காது , falsehood முறைகள் மேல் நம்பிக்கை இருக்கும் என பல கோணத்தில் பல பகுதிகளாகப் பிரச்சினை சேர்ந்திருப்பது வழக்கம்.
இதில் இருந்து மீள வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் – இந்த அக்குடும்பம் வசதியாக வேண்டும் என்று நினைக்க வேண்டும் . அது முழுமை. அதற்கு பகுதியான பண்புகளாக – மேல சொன்ன துன்பத்தின் பகுதிகளுக்கு எதிரான நிலையை எடுத்துக் கடை பிடிக்க வேண்டும். அந்த பகுதிகளில் காட்டும் தீவிரம், உண்மை , மன நிலை – நாம் தேடும் முழுமையைக் கொடுக்கும். வசதியான குடும்பமாக மாறும். வழிகளைப் பல வகைகளாகக் கூறலாம்.
அடுத்த நிலையில் குடும்பத்தில் உள்ள பிரச்சினைக்குத் தான் எப்படிக் காரணம் ஆகிறோம் என சிந்தித்து புரிந்து கொண்டால் புரியும் அளவுக்குப் பிரச்சினை குறையும். ஒரு பிரச்சினைக்கு ஐந்து அல்லது பத்து பகுதிகளிலிருந்தால் – ஒவ்வொரு பகுதியையும் புரிந்துகொள்ள முயன்றால், அப்பகுதி வலுவிழந்து விலகும். நாம் முழுமையை நோக்கிச் செல்வோம்.
சுருக்கமாக சொல்வதானால் -முறை எதுவானாலும் அதன் பலன் தெரிய வேண்டுமானால் அம்முறை அன்னை விரும்பும் பண்புகளால் பூரணம் பெற வேண்டும் (It should be saturated with Mother’s Force). முறைக்குரிய பலன் எப்பொழுதும் உண்டு. பூரணப் பலன் பெற முறை பூரணம் பெற வேண்டும்.