கர்மயோகி அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு வரி – “நம் வெற்றி, முன்னேற்றம், நம் திறமை, திறன், ஆகியவற்றைப் பொறுத்தது அல்ல. அவற்றின் பின் உள்ள பண்புகளைப் பொறுத்தது என்பதே”.
அறிவு, அனுபவம், கடின உழைப்பு, திறமை , திறன், விவேகம் என்பவை எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் அவையெல்லாம் வாழ்வின் தேவையை, அதன் பகுதியை நிரப்ப மட்டுமே முடியும். ஆனால் அதனுடன் ஒழுங்கு, சுத்தம், செம்மை, நேரம் தவறாமை, கனிவு, சுமுகம், பரநலம் , நல்லெண்ணம் என்று ஏதாவது ஒன்று சேரும் போது அது தரும் பலன், சுபிட்சம் பல மடங்கு இருக்கும்.
பண்புகள் என்பது ஆன்மா விரும்பி வெளிப்படுத்தும் செயல். ஆன்மாவை தட்டி எழுப்பி வெளி வரச் செய்யும் செயல். Personality -யின் ஏற்புத்தன்மையை அதிகப் படுத்தும் செயல். கட்டாயத்திற்காக, சூழ்நிலைக்காக (cloistered virtue ) ஏற்கப்படும் பண்புகளும் அதன் பலனைத் தர தவறுவதில்லை. குறைந்த பட்சம் அது பொருளில், சுபிட்சம் (at material level) தரத் தவருவதேயில்லை.
நாம் பண்புகளால் ஈர்க்கப்படுகிறோம் என்பதே உண்மை. உதாரணமாக, நாம், உலகம், சமூகம், மனிதர்கள் மோசமானவர்கள், ஏமாற்றுக்காரர்கள் என்று பொதுவாக நினைப்பதும், அப்படி இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று இருப்பதும் சாதாரணம். ஆனால் அப்படி இருந்தால் கூட, ஒரு உண்மையான, நாம் நல்லது என்று நினைக்கும் பண்புள்ள ஒருவரைப் பார்க்கும் போது நாம் அவரை விரும்புகிறோம். லஞ்சம் வாங்காதவரை நாம் ஏமாளி, பிழைக்கத் தெரியாதவர் என்று கூறினாலும் உள்ளே சென்று பார்த்தால் அந்த நல்லதை நாம் விரும்புவது தெரியும். நாம் பின் பற்ற முடியாத நல்ல குணங்கள், திறமைகள், இருப்பவரைப் பார்த்தால் பொறாமையாக இருந்தாலும் உள்ளே அது சரியே என்று தோன்றுவதை கவனிக்க முடியும். காரணம், நம் மனம் சத்தியத்தை நோக்கி வளர்கிறது. மனமே அப்படி என்னும் போது வாழ்வு அதை விட வேகமாகச் செல்லும். சத்தியத்தின் உருவமான பண்புகளின் எந்த பரிமாணத்திற்கும் வாழ்வு பதிலளிக்கத் தவறுவதில்லை.
நாம் நல்ல பண்புகளை எடுத்துக் கொள்ள முயல்வோம். இன்றிலிருந்து செய்யப் போகிறேன் என்று கூறுவோம். ஆனால் சில நாட்களிலேயே அந்த ஆர்வம் குறையும். செயல் குறையும். என்னால் முடியவில்லை என்று விடுவோம். அல்லது எனக்கு இவ்வளவு தான் வரும், இவ்வளவு தான் கொடுத்து வைத்தது என்று இருப்போம். நம் அம்சம் அவ்வளவு தான் என்றும் இருப்போம்.
ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் நம் தீர்மானம், தேவையான அறிவை, ஞானத்தை, உறுதியைப் பெறவில்லை. சரியான திசையில் அவை செலுத்தப்படவில்லை.
நம் உறுதி மட்டுமே அதில் செயல்படாமல், நம் விருப்பம், ஆசை, அபிப்ராயங்கள், முன் முடிவுகள் எல்லாம் அதில் சேர்ந்து செயல்படுகிறது என்று பொருள். காரணம், இவையெல்லாம் அகந்தையில் இருந்து வருபவை. அதற்கு எதிரான ஆன்மாவின் பண்புகளோடு அது ஒன்று சேர முடியாது.
அதனால் ஒரு ஆன்மாவின் பண்பை இன்னொரு பண்பே வழி நடத்த வேண்டும். செம்மை, ஒழுங்கு, சுமுகம் போன்றவை எடுத்துக் கொள்ள வேண்டிய பண்பென்றால், அதை ஆன்மாவின் இன்னொரு பண்பான ஆர்வமே வழி நடத்த வேண்டும்
இறையார்வமாக அது இருந்தால் சிறப்பாக வழி நடத்தப்படும். உதாரணமாக அன்னைக்காக இதைச் செய்கிறேன் என்று எடுத்துக் கொண்டால் – அந்த ஆர்வம் நம் உறுதியை வளர்க்கும். நன்றியறிதல், சின்சியாரிட்டி போன்ற பண்புகள் மற்ற அன்னை விரும்பும் எல்லா பண்புகளையும் கொண்டு வர, அவற்றை வளர்க்க தேவையான முழு சக்தியை உள்ளடக்கியது.
அதனால் நாம் வாழ்வில், personality -இல் முன்னேற முடியவில்லை என்னும் இடங்களில் இருந்தால், அகந்தையின் எந்த பரிமாணம், வெளிப்பாடு அதைத் தடுக்கிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அப்போது தான் அதற்கு எதிராக நாம் எடுக்க வேண்டிய பண்புகள் நமக்குப் புரியும். அதை தெரியவில்லை, புரியவில்லை என்று நாம் சொல்ல முடியாது.
காரணம் –
- நம் அறிவை, நம் எண்ணங்களை, நம் கயமையை நாமறிவோம்.
- அன்னை விரும்பும் பண்புகள் எவை எவை என்றும் நமக்குத் தெரியும்.
- நாம் unconscious ஆக இருக்கும் இடங்களும், அன்னை நம்மிடம் எதிர்பார்க்கும் conscious ஆக இருக்க வேண்டிய இடங்களும் நமக்குத் தெரியும்.
- நம் மனப்பான்மை குறுகிய தன்மை, சுயநலம் நமக்குத் தெரியும். அதற்கு எதிரான பரநலம் , பரந்த மனப்பான்மை என்னவென்றும் நமக்குத் தெரியும்.
இதெல்லாம் தெரிந்த பிறகும் என்னால் செய்ய முடியவில்லை என்று சொல்வது செய்ய முடியவில்லை என்பதால் அல்ல. செய்யப் பிரியப்படவில்லை என்பதால். நான் இப்படி இருப்பதே எனக்குப் பிடித்திருக்குகிறது என்பதால்.