வருட பிறப்பு அன்று ஒரு ஒரு உறுதி மொழியை ஏற்பது நம் பழக்கம். என்ன மாதிரி உறுதி மொழியை ஏற்கலாம் என்பதற்கு உதாரணமாக கர்மயோகி அவர்களின் புது வருட செய்திகளின் அடிப்படையில் ஒரு தொகுப்பு.
சமூகம் நம் வாழ்வை நடத்தத் தயாராக இருக்கிறது. சமுத்திரம் நம் வாழ்வைச் சமுத்திரமாக மாற்ற விரும்புகிறது. அதைக் கடந்த நிலையில் அனைத்துப் பொறுப்பையும் ஏற்க அன்னை காத்திருக்கிறார். நாம் குடும்பப் பொறுப்பை முழுமையாக ( inner outer responsiblity ) ஏற்கலாம். மனதால் நாட்டின் பொறுப்பை ஏற்க விழையலாம். முழுமூச்சுடன் முழுமையை நாடலாம் ( Truth Conciousness / Mother ) . அதற்கு முடிந்ததை எல்லாம் செய்து முடிக்கலாம்.
பழையது தங்கம் – old is gold – என்பதை மாற்றி பழையது போக வேண்டியது என ஏற்று புதியதிற்கு மாறலாம். வேத பாராயணத்தைக் கைவிட்டு வேதம் என்ன கூறுகிறது என்பதைப் பின்பற்றலாம். சாங்கியத்தைத் தவிர்த்து சாஸ்திரத்தின் உட்பொருளை அறியலாம். கர்மம், கட்டுப்பட்டி, சாங்கியம், சாஸ்திரம், சம்பிரதாயம் உயிரிழந்தன என்று உணர்ந்து புது வருஷத்தில் புது வாழ்வை ஏற்கலாம்.
பிரம்மத்தை ஜடத்தில் கண்ட மேல் நாட்டார் நம்மைப்போல் 100 மடங்கு வளமாக இருக்கும்பொழுது பிரம்மத்தை ஆன்மாவில் கண்ட நமக்கு சொர்க்கம் காத்திருப்பதை அறியலாம்.
சுத்தம் ஜடத்தின் சத்தியம் எனப் பின்பற்றலாம்.
நேரம் செல்வம் என அறிந்து நேரத்தில் காரியத்தை நடத்தலாம்.
ஒழுங்குக்கு உயிருண்டு என்பதால் ஒழுங்கைக் கடைப்பிடிக்கலாம்.
எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் சத்தியத்தை மட்டும் கடைப்பிடித்து அன்னைக்குரிய செல்வத்தை 10 மடங்கு பெருக்கலாம்.
இளைஞன் படிப்பது தவிர மற்றனவெல்லாம் கல்லூரியில் செய்வதைப்போல் நாம் இருக்கிறோம். அன்னையிடம் நாம் செய்ய வேண்டியதை மட்டுமே செய்வது என ஏற்கலாம்.
எல்லாத் தவறுகளையும் எல்லோரும் செய்யும்பொழுது நாடு மேலும் முன்னேறும் விந்தையை அறியலாம். அதன் மூலம் எது எனக் காணலாம். அம்மூலத்தை நம் வாழ்வில் செயல்பட அனுமதிக்கலாம்.
புது வருஷம். புது யுகம். நாம் எதை நாடுகிறோம் என்பது நம் வாழ்வு காட்டி கொடுக்கும்.
நான் செய்தேன், நான் செய்தேன் என்பதை உற்று நோக்கினால் இறைவன் தான் செய்தான், நாம் வெறும் கருவி என்பது விளங்கும். இதுவரை நடந்தது அவனால். இனி நடக்க போவதும் அவனால் என்று சரண் அடையலாம்.
வாழ்வு துன்பமயமானது, எப்படியும் கழிக்க வேண்டும் என்பது மாறி, வாழ்வு ஜீவன் உள்ளது. நாம் காண்பதே முடிவு அல்ல. பின்னணியில் உள்ளது மிகப்பெரிய பரம்பொருள் என்று எண்ணலாம்.
நான் எப்படி செய்ய முடியும் என்பது தவறான கேள்வி. செய்வது அன்னை. என் பங்கு நம்பிக்கை செயலில் தூய்மை சரணாகதி மட்டுமே. நான் செய்யும் வேலைகள் அன்னை அருளை வெளிப்படுத்தும் கருவிகள் என்று இருக்கலாம்.
அன்னையின் பாதுகாப்பில் இருந்து விலகும் எந்த காரியத்தையும் நான் செய்ய மாட்டேன் என்று இருக்கலாம். .
தகப்பனார் சம்பாதித்ததை பிள்ளைகள் விரயம் செய்வார்கள். அன்னை நம்மில் சேர்ப்பதை, குணம் அழிப்பதை நாம் உணர்ந்து தடுக்கலாம்.
நாம் நடப்பதை அறிய முடியுமா? நம்ம நம்மை அறிய முடியுமா? அறிந்ததை ஏற்க முடியுமா? ஏற்றதைச் செயல்படுத்த முடியமா?
அதுவே இறைவன் வரும் தருணம்.