ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உயர்ந்த விழிப்புணர்ச்சி மறைபொருளாக உள்ளது. அது அவனுடைய தற்போதைய நிலை / வாழ்க்கையை விடவும் ஒரு உயர்ந்த, பரந்த வாழ்க்கைக்கு எடுத்து செல்ல வல்லது. உண்மையில், நாம் அசாதரணமானவர்கள் என்று நினைப்பவர்களின் வாழ்க்கை இத்தகைய உயர்ந்த ஒரு விழிப்புணர்வின் மூலமே வழி நடத்தபட்டதாக இருக்கும். இந்த உணர்வே அவர்கள் வாழ்க்கையையும், வாழ்க்கைச் சூழலையும் ஒழுங்குபடுத்தி அந்த சூழலுக்கு ஏற்ற புரிதலுணர்வையும் அளிக்கிறது. மனித அறிவுக்கு புலப்படாதவைகளையும், தெரியாதவைகளையும் கூட இந்த விழிப்புணர்வு அறியும், செய்யும். புற சூழல்களால் மறைக்கப்பட்ட உணர்வுகளுக்கு நடுவிலும் வெளி தெரியும் ஒரு ஒளி அது.
ஆன்மா என்று சொல்லப்படும் இது இருப்பதால்தான் தனி மனிதனுடைய உண்மை / சத்தியம் என்பது அவனிருக்கும் சூழலையும் வாழ்க்கையையும் தொடர்பு கொள்ள முடிகிறது. பெரும்பாலான இடங்களில் ஆன்மாவின் செயல் வெளிப்படையாகத் தெரியாமலும், மிகச் சில இடங்களில் கண்கூடான செயல்பாடும், பலனும் தெரியவரும் என்றாலும் இவைபோன்ற எல்லா நிகழ்வுகளும் வாழ்க்கையில் ஒரு நிச்சயமான, ஐயம் இல்லாத நிலைக்குக் கொண்டு சென்று நம் விதியை நாமே நிர்ணயிக்கக் கூடிய ஒரு நிலைக்குக் கொண்டு வரும். அப்படி நம் வாழ்வு நம் கையில், நம் விதி நம் கையில் என்று கொள்ளத்தக்க அந்த திறமையை / அறிவைப் பெற்றுக் கொள்ளவும், வளரும் ஆன்மா நம்முள் இருப்பதை அறியவும் தான் ஆன்மாவிற்கான கல்வியை பழக வேண்டும், பின்பற்ற வேண்டும்.
முதலாவதும், முக்கியமானதும் என்னவென்றால் நம் அறிவு / மனம் ஆன்மீக விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது என்பதுதான். இந்த தலைப்பில் பேசியவர், எழுதியவர் அனைவரும் இதை கூறியிருக்கிறார்கள். வெகு சிலரே அதை பின்பற்றி இருக்கிறார்கள். அதனால் ஆன்மீகப் பாதையில் பயணிக்க முதல் தேவை அனைத்து வகையான அறிவு சார்ந்த கொள்கை, கருத்து, எண்ணம், நம்பிக்கை ஆகிய அனைத்திலிருந்தும் விலகி நடப்பதுதான்.
தனிப்பட்ட எந்த ஒரு சுகம், திருப்தி, மகிழ்ச்சிக்கான அத்தனை செயல்களையும் விலக்குவதும், ஆன்மீக முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக, வரும் அனைத்தும் முன்னேற்றத்திற்கே என்று எடுத்துக் கொண்டு இதன் மூலம் என்ன முன்னேற்றம் பெற முடியுமோ அதற்கான வேலை செய்வதும் முக்கியம்.
செய்யும் செயல் அனைத்திலும் சந்தோஷத்தைக் காண வேண்டுமே தவிர சந்தோஷத்திற்காக எதையும் செய்யக் கூடாது. எதனாலும் தூண்டப்படாமலும், கிளர்ச்சியூட்டப்படாமலும், பதட்டப்படாமலும், எதிர்புணர்வால் கொதிப்படையாமலும் இருப்பது மிக முக்கியம்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் முழு அமைதி காத்தலும், அதே சமயம் எப்போதும் விழிப்போடு இதன் மூலம் வரும் ஆன்மீக முன்னேற்றம் என்ன என்பதை கண்டுபிடித்து ஒரு க்ஷணமும் வீணாக்காமல் அதை செய்ய வேண்டும்.
கண்முன் நடப்பவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அதன் பின் உள்ள ஆன்மீக உண்மையை அறியவேண்டும். காரணம் அவையனைத்தும் வேறொன்றை தெரியவைக்க வந்த ஒரு வாழ்க்கை நடப்பு. அதையே கவனித்தோம் என்றால் உள்ளே இருந்த உண்மை நம் புரிதலின்றும் தப்பி விடும்.
யாரையும் குறை கூறாதே. உன்னால் அவர் குறை வந்த காரணத்தை அறிய முடிந்தாலோ அல்லது அவரை அத்தகையத் தன்மையிலிருந்து மாற்ற முடிந்தாலோ அல்லது அந்த சூழ்நிலையை மாற்ற முடிந்தாலோ, அல்லது அதற்கான அதிகாரம் இருந்தாலோ தவிர குறை கூறாதே.
எதை செய்தாலும் உன் குறிக்கோளை மறவாதே. சிறியது பெரியது என்று எதுவும் இல்லை. அனைத்தும் முக்கியம். அனைத்தும் நீ அறிய வேண்டிய மெய்யைத் துரிதப்படுத்தும் அல்லது மெதுவாக்கும்.
அதனால் சாப்பிடுவதனால்கூட ஆரம்பிக்கும் முன் சில வினாடிகள், இந்த உணவு உன் ஆர்வத்தையும், குறிக்கோளையும் உன்னுடைய அந்த கண்டுபிடிப்புக்கான முயற்சிக்கும் அவற்றிற்குத் தேவையான பொறுமை விடாமுயற்சி ஆகியவற்றிற்கு தேவையான சக்தி கொடுப்பதாக பாவித்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல தூங்கும்போதும், இந்த தூக்கம் தளர்ச்சி அடைந்த என் நரம்புகளுக்கு தெம்பு தரவும், நெகிழ்ச்சி அடைந்த என் மூளைக்கு தெம்பு தரவும், அதன் மூலம் நாளையும் என் பயணத்திற்குத் தேவையான சக்தியை பெறுவதற்கு இந்த தூக்கம் உதவும் என்று பாவித்து தூங்க வேண்டும்.
ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும் இந்தச் செயல் என் ஆன்மீகக் குறிக்கோளுக்கும், அதனை ஒட்டிய பயணத்திற்கும் எந்த தடையும் ஏற்படுத்தாது என்று நினைக்க வேண்டும்.
ஒவ்வொரு வார்த்தை வெளிவருவதற்கு முன்னும் நிதானித்து – பேசும் வாக்கியம், வார்த்தைகளை கவனித்து மிகத் தேவையானவற்றை மட்டுமே வெளிப்பேச வேண்டும். அந்த வார்த்தைகளிலும் உன் முன்னேற்றத்தை தடைசெய்யும்படி அல்லது ஏற்படுத்தக்கூடியதாக இருக்கக் கூடாது.
முடிவாக நீ பிறந்ததன், உன் வாழ்வின் நோக்கத்தை மறக்காதே. எதுவாக இருந்தாலும், எதை நினைத்தாலும், எதைச் செய்தாலும் ஆன்மாவைத் தேடும் அந்த நோக்கம் என்றும் தீவிரமாக இருக்க வேண்டும். ஒரு மிகப்பெரிய ஒளிக்கற்றைப் போல அது உன் வாழ்வை நடத்திச் செல்ல வேண்டும்.
சுருக்கமாக,
அறிவை நம்பாதே. ஆசைப் படாதே. வசதியைத் தேடாதே. குறை கூறாதே. புறநிகழ்ச்சியைப் பார். கடமைக்குரிய முழு முயற்சி எடு. உண்ணும் முன்பு, உறங்கும் முன்பு, பேசும் முன்பு, செயல்படும் முன்பு சமர்ப்பணம் செய்.