Share on facebook
Share on telegram
Share on whatsapp

காணிக்கை

“ஓ!”….. என்று கூச்சல், கைத்தட்டல். பால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தேன். நான் இருக்கும் அபார்ட்மெண்டின் சக குடியிருப்பாளர்களின் குழந்தைகள், சிறுவர்கள்…. களிப்புடன் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள். சில மாதங்களுக்குமுன் கிரிக்கெட்டை இதே கூச்சலுடன் விளையாடினார்கள்.  எது விளையாடினாலும் உலகக்கோப்பைக்கு விளையாடுவது போன்று அப்படி ஓர் உற்சாகம்….. ஈடுபாடு…. ஆச்சரியப்படுத்தியது.  சின்னஞ்சிறார்களுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு சக்தி?…. ஆர்வமாக விரும்பிச் செய்தால் எந்த வேலைக்கும் தேவையான எனர்ஜி தானே வந்துவிடுமோ?….

     யோசித்துக்கொண்டே ஹாலுக்குள் வந்து அமர்ந்தேன். எனக்குத் தான் எனர்ஜியே இல்லாமல் சோர்வாக இருந்தது.  இலக்கில்லாமல் ரிமோட்டைத் தட்டிச் சேனலை மாற்றி, மாற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தேன். மனம் நாளைய மாதாந்திர ரெவ்யூ மீட்டிங்கை எப்படிக் கையாளப்போகிறேனோ என்று இருந்தது. காரணம், காலையில் ஜி.எம்.க்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

     “மூர்த்தி!…. அந்த stadium rehabilitation வேலைக்கான பில் பாசாகி மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது.  என்றாலும் இன்னும் chequeஐ வாங்க முடியவில்லை.  வழக்கமாக அறுபது நாட்கள் தாமதம் ஆனாலே நம் தலைமை மெமோ கொடுக்கும்.  நமது கிளைக்கான போனஸ் ஊக்கத்தொகை அனைத்தும் குறையும்.  என்றாலும் உங்களுடைய கடந்த காலச் சிறப்பான உழைப்பை எண்ணி சென்ற மாதம் அந்த கேள்வி எழுப்பப்படவில்லை.  ஆனால் இந்த மாதம் என்னால் தள்ளமுடியாது….ஏதாவது செய்யுங்கள்….”

     “சார்! உங்களுக்கே தெரியும். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அனைத்து டெண்டர்களுக்கான பேமெண்டும் நிறுத்தப்பட்டது.  தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்தால் தாமதமானது.  அதன்பிறகு புதிய செயலாளர் பொறுப்பு ஏற்று இன்னும் சரிவர எதுவும் ஆகவில்லை. நான் என்ன செய்வது?” என்றேன்.

     “இல்லை மூர்த்தி! மூன்று மாதமாக மொத்த அரசே ஸ்தம்பித்து விட்டதா என்ன? எங்கே தவறென்று கண்டுப்பிடியுங்கள்…” எழுந்தார்.

    அவர் சாதாரணமாகத்தான் சொன்னார். ஏனோ அந்த வார்த்தை தைத்தது. “எங்கே தவறு?’ யோசித்துக்கொண்டே இருந்தேன்.

     ராஜன் நுழைந்தார். பக்கத்து ஃபிளாட்காரர். எனக்கு அன்னையை அடையாளம் காட்டியவர் என்பதால் மரியாதைக்குரியவர்.

     “நீங்கள் திறமைசாலி என்று தெரியும். ஆனால் இந்த அளவுக்கு என்று தெரியாது” என்று சிரித்தார்.

     விழித்தேன்.

     “ஏ.சி. ரிமோட்டை வைத்துக்கொண்டு டி.வி.யை பார்த்து அமுக்கிக் கொண்டிருக்கின்றீர்களே, அதுதான்….”

     வழிந்தேன்.

     “என்ன ஏதாவது பிரச்சினையா?” ஆதரவாகக் கேட்டார்.

      “ஆமாம்!” “……….” சொன்னேன்.

     “எனக்குக்கூட ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் தியானமையம் சென்று வந்துகொண்டு இருந்தோம்.  திடீரென்று நீங்கள், “இப்படி பிரார்த்தனைமூலமே அனைத்தையும் பெற்றுக்கொண்டே இருக்கிறோமே, அன்னைக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? இனி தொழில் அன்னை முறைகள் அனைத்தையும் பின்பற்றப்போகிறேன்” என்றீர்கள்.  அதன்பிறகுதான் இந்த பிராஜக்ட் வந்தது. இருபது இலட்சம் என்று சொன்னதாக ஞாபகம்….”

     “அதேதான்!….” இழுத்தேன்.

     “என்னால் முடிந்தவரை எல்லாவற்றையும் அன்னை முறையிலேயே செய்தேன். ஏதோ தவறு நடந்து இருந்தாலும் அன்னை மன்னித்திருக்கக்கூடாதா? தண்டிப்பதுபோல இருக்கிறதே”.

     சிரித்தார்.

      “அன்னை தண்டிப்பதேயில்லை.  தெரியுமல்லவா? ஒரு பேச்சுக்காக தண்டிப்பதாகவே வைத்துக்கொள்வோம், அன்னை தண்டிக்கும்அளவிற்கு அவரை நீங்கள் நெருங்கியிருக்கிறீர்களா என்ன?”…..

     சிரிக்கத்தான் கேட்டார். ஆனால் சுட்டது.

     “ஆமாம் அல்லவா? நம்மை நெருங்கியவர்கள், பாதுகாவலர்கள்தானே தண்டிக்க முடியும். அப்படி என்றால் அன்னையை நெருங்கி தண்டனை பெறுவதுகூட ஒரு ஸ்பரிசமல்லவா?”

     நான் யோசித்தது அவருக்கும் புரிந்திருக்க வேண்டும்.

     “தண்டனை என்று இனி எதையும் சொல்லாதீர். அனைத்தும் அருள் தான். துரதிர்ஷ்டம் என்று நாம் எண்ணியதுதானே நம்மை அன்னையிடம் கொண்டுவந்தது. எங்கே தவறு நடந்தது என்று பார்க்க வேண்டும்”….

     “நானும் அதையேதான் யோசிக்கிறேன். எல்லாவற்றையும் நேரம் தவறாமல், தரம் குறையாமல், சரியான கணக்குவழக்கோடு, காண்ட்ராக்டில் போட்டபடி அனைத்தையும் நேர்மையாகச் செய்யுங்கள்” என்று இன்ஸ்ட்ரக்ஷனே கொடுத்துவிட்டேனே”.

     “கொடுத்தீர்கள் சரி, செய்துவிட்டீர்களா?”

     “புரியவில்லையே”….

      “இதேபோலத்தான், ஆரம்பத்தில் நான் அன்னை முறைகளில் சுத்தத்தையும், தணிவான பேச்சையும் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் யோசித்துப்பார்த்தால் வீட்டை எனக்காக எல்லோரும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும், எல்லோரும் என்னிடம் பொறுமையாக, தணிவாகப் பேசவேண்டும். ஆனால் நான் என்ன செய்தேன் என்று பார்த்தால் துரும்பளவு செய்துவிட்டு என்னால் தான் இந்த வீடு சுத்தம் என்று நினைப்பேன். அதே போல என்னை ஏன் கத்த வைக்கிறீர்கள் என்பேனேதவிர நான் செய்தது கொஞ்சம்தான். நான் மட்டும்தான் பொறுப்பா, ஏன் எல்லோரும் செய்யக்கூடாதா என்று மனது கேட்டுக்கொண்டே இருக்கும். அதனால்தான் கேட்டேன், உன் இன்ஸ்ட்ரக்ஷனில் உன் பங்கு எவ்வளவு?”

    கேள்வி என் அடிப்படையையே அசைத்தது. “உளமாற நினைத்தேன்.அதனைப் பின்பற்றுமாறு ஆணையும் பிறப்பித்தேன். வேறு என்ன செய்ய முடியும்? இனி அது கிளார்க், சூபர்வைசர்கள் வேலை அல்லவா? என்னைப்பொருத்தவரை மனமாற்றம் வந்துவிட்டதல்லவா?” குழப்பத்துடன் கேட்டேன்.

     “அதேதான்! மனம் நினைத்தவுடன் தான் மாறிவிட்டதாக, செய்து விட்டதாக நினைக்கிறது. அதற்கு எல்லோரும் – அன்னை முதற்கொண்டு – துணை புரியவேண்டும் என்று நினைக்கிறது. நாமெல்லோரும் சுத்தமாக வைத்திருக்கும் அன்னை அறையின் சுத்தம் எத்தனை சதவிகிதம்? அதில் நம் உழைப்பின் பங்கு எவ்வளவு என்று யோசித்தது உண்டா?….”

     அவர் பேசிக் கொண்டே போக….. யோசனை பறந்தது. ஆமாம்!சுத்தத்தை வீட்டில் அனைவரும் செய்ய அதில் குறையை மட்டுமே நான் கண்டுபிடித்தது தெரிந்தது. ஆபீசில் அன்னை முறைகளைப் பற்றி ஒரு “பெரிய உரையே’ ஆற்றி இருப்பது தெரிந்தது.  என்றாலும் மனது “என்மேல் தவறில்லை.  நான் ஒருவன் மட்டுமே என்ன செய்யமுடியும்’ என்றே சொன்னது.

     “மூர்த்தி! நம் தவற்றை நம் அகந்தை ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது. அதனால் கேள்வியைத் திருப்பிப்போட்டுப் பார். இதன்மூலம் அன்னை என்ன சொல்ல வந்துள்ளார்கள் என்று யோசி. எதுவுமே நகராதபோது முறைகளை ஜடத்திலிருந்து – உடலிலிருந்து – ஆரம்பிக்க வேண்டும் என்று அன்னை கூறியிருக்கிறார்கள். விட்டுப்போன உன் கடமைகளைச் சரி செய்ய முடியுமா பார். நாளை வருகிறேன்” என்றவாறே எழுந்தார்.

     குழப்பத்துடன் குளித்து, ஊதுவத்தி ஏற்றி அன்னைமுன் அமர்ந்தேன். அலைபாயும் மனதை அடக்க ” Peace Mother, Peace Mother” என்று நிதானமாகச் சொல்ல ஆரம்பித்தேன். ஆம், அன்னையிடம் வந்தபிறகு யோகாசனம், சவாசனம், உடல் தளர்ச்சிப் பயிற்சிகள் எதுவும் தேவைப்- படுவதில்லை. Peace Mother….” என்று சொன்னவுடன் அனைத்தும் அமைதியாவது தெரியும். மெதுவாக…. மெதுவாக…. ஒவ்வொரு நரம்பிலும் அமைதி பரவுவதும், ஒவ்வொரு செல்லிலும் சில்லென்ற உணர்வும், சில சமயம் விரல் நுனிகள் குளிரை உணர்வதும் விவரிக்க இயலாத ஆச்சரியம்.

     உள்ளே…. உள்ளே…. சென்று கேட்டேன்: “அன்னையே! இதன்மூலம் என்ன சொல்ல வருகின்றீர்கள்?’….. கேட்டதுதான் தாமதம்…. பிரவாகமாக வந்த பதில்கள் முகத்தில் அறைந்தது. தினமும் அனைவருக்கும் அன்னையைப் பற்றிக் கூறுவதாலேயே நான் முழு அன்னை அன்பர் என்று நினைப்பதும், அதில் ஒன்றைக்கூட பின்பற்ற இயலாததும், இந்த பிராஜக்டிலேயே எத்தனைவிதமான mismanagement – வரவு-செலவு முதல், மனிதவள நிர்வாகம் வரை – செய்ய முடியுமோ அனைத்தையும் செய்திருப்பதும், “இதெல்லாம் வியாபாரத்தில் சகஜமப்பா’ என்று ஏற்றுக்கொண்டு இருப்பதும் தெரிந்தது.  எங்கே வந்தது இதில் அன்னை முறைகள்? இன்னும்… இன்னும்…. என்னுடைய அத்தனை நெகடிவையும் காட்ட…. காட்ட…. திகைத்தேன்.

     சரி, எதுவும் நகரவில்லையென்றால் ஜடத்திலிருந்து – உடலிலிருந்து – ஆரம்பி என்றாரே. எல்லாம் முடிந்துவிட்டது. அடுத்த வாரம் international tournament நடக்கப் போகிறது. இப்போதுபோய் தவற்றை எல்லாம் சரி செய்கிறேன் என்று எப்படிச் சொல்வது?…. அல்லது ஆபீசில் நடந்துபோனதை எப்படி மாற்றுவது?….

     யோசித்தேன். வழி தெரியாமலேயே வேண்ட ஆரம்பித்தேன். “தவறுதான் அன்னையே! மன்னியுங்கள். chequeஐ பாஸ் செய்து தாருங்கள்.  காணிக்கையாக….. சொல்லும்போதே மனதுக்குள் மின்னல்… அட! காணிக்கை உடலின் வழிபாடு அல்லவா? உடலுழைப்பின் பாக்கியை காணிக்கை நிறைவு செய்யாதா?”….. பதில் கிடைத்ததுபோல இருந்தது.

     உற்சாகத்துடன் ஆரம்பித்தேன். “ஆம் அன்னையே! அதிர்ஷ்டத்திற்கு அடிப்படை உழைப்பு. மனமாற்றத்திற்கான வெளிப்பாடு அதற்கான உழைப்பு.  அதை நான் களத்தில் இறங்கி செய்யாதது என் தவறுதான்.  நடந்த தவறுகளுக்கு நான் responsibility என்பதை மறந்து மற்றவர்களை குறை சொன்னதும் தவறுதான். அதற்கு ஈடாக இந்த பிராஜக்ட்டின்மூலம் எனக்கென வரக்கூடிய போனஸ், இன்சென்டிவ் அனைத்தையும் உங்களுக்கே காணிக்கை ஆக்குகிறேன். இனி என் கடமையில்,உழைப்பில் குறை வைக்கமாட்டேன். என்னால் என் கம்பனியும், சக தொழிலாளர்களும் பாதிக்கப்படவேண்டாம். உதவுங்கள் Mother!” உருகி வேண்டினேன்.

     நிம்மதி பரவ அப்படியே படுத்தேன். உறக்கத்தைச் சமர்ப்பணம் செய்ய, வெகுநாட்களுக்குப் பிறகு உண்மையான உறக்கம்.

     காலை 6 மணி.

     செல்போன் ரிங்கியது. “இவ்வளவு காலையில் யார்?’ எடுத்துப் பார்த்தேன். விளையாட்டு ஆணையத்தின் ஏ.ஓ. “என்ன சார்! இந்த நேரத்தில்?” கேட்டேன்.

     “உங்கள் cheque தயாராக இருக்கிறது.  பத்து மணிக்குள் வாங்கிக் கொள்ளுங்கள். நேற்றைய தேதியில் சீல் வேண்டும்”.

     “விளையாடாதீர்கள்! நேற்று மதியம்வரை ஃபைல் வரவில்லை என்றீர்களே” சந்தேகத்துடன் கேட்டேன்.

     “அதுதான் ஆச்சரியம்! நேற்று திடீரென அமைச்சர் அழைத்தார். இன்று சட்டசபையில் “cut motion’ஆம். உங்களுக்கு மட்டுமன்று, நிறைய ஒப்பந்தகாரர்களுக்குப் பாக்கி இருப்பது பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப இருப்பதாகவும், அது மட்டுமல்லாமல் கடந்த வருட budget allotment மீதமானால் இந்த வருட budget provision குறையும் என்பதாலும் அத்தனை பெண்டிங் பில்லையும் பாஸ் செய்ய சொல்லிவிட்டார்கள். நேற்று இரவு இரண்டு மணிவரை வேலை பார்த்து முடித்தோம்” அவர் சொல்ல….. சொல்ல….                             

     தலை சுற்றியது.

     இப்படியும் நடக்குமா? க்ஷணத்தில் நடப்பது என்பது வார்த்தையன்று…சத்திய வரிகள்…. உண்மையான மனமாற்றம் இவ்வளவு சக்திவாய்ந்ததா?அதைத்தான் அன்னை விரும்புகிறாரா? ஒன்றுமே புரியவில்லையே?…..

     ஒன்றுமட்டும் புரிந்தது. “ஆன்மீக சக்தியை அழைக்கும்முன் உனக்குரிய சக்தியைச் செலவழித்துவிடு” என்றாரே அன்னை. அது முடியாத இடத்தை பவித்திரமான காணிக்கை இட்டு நிரப்பும் என்பதும், அன்னையை நெருங்க நாமறியாத தடைகளை காணிக்கை தகர்க்கும் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

     மீண்டும் பால்கனியில் நின்றேன். காலைத் தென்றல் மரமல்லிகையின் வாசம், நான் திருவுருமாற இருப்பதைக் கட்டியம் கூறுவதுபோல இருந்தது. பக்கத்து பால்கனியில் ஒரு சுட்டிக்குழந்தையின் புன்முறுவலில் … அன்னை!

முற்றும்

****

Author Info
Parinaaman (Ramesh Kumar)

Parinaaman (Ramesh Kumar)

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

அடுத்த கட்டத்தில் அன்னையின் மறுமொழி

“வாருங்கள், வாருங்கள்”, வாய் நிறைய வரவேற்றார் ராஜன். ” ‘நாம் பின்பற்ற முடியாததை, பிறரைப் பின்பற்றச் சொல்வது கயமை’ என்கிறார் அன்னை. என்றாலும், நான் கொடுத்தப் பட்டியலை வைத்து உடனடியாக அன்னையைத் தரிசித்ததால் கயமையும்

Read More »

சாசனம்

மும்பை மேரிடன் ஹோட்டல். பன்னிரண்டாவது மாடி பால்கனியில் இருந்து பார்த்தபோது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சூரியோதயம். உள்ளே திரும்பினால் அதையும் தாண்டிய அதிசயமாய் அன்னையின் புன்முறுவல். கண்ணாலேயே கட்டிப்போடும் அந்த வாஞ்சையில் நெகிழ்ந்தேன்.

Read More »

அடுத்த கட்டம்

மொட்டைமாடி. நாள் முழுதும் அடித்த வெயிலுக்கு மேகமூட்டமும், தென்றல் உடலை வருடுவதும் இதமாக இருந்தது. தொடர்ந்து கும்மென்று மரமல்லிகையின் வாசம். ஆகஸ்ட் மாதத்தில் மரமல்லிகையின் பருவம் ஆரம்பிப்பதுகூட ஏதோ சொல்வது போலிருந்தது. என் பார்வையே அதைச் சொல்லி இருக்க வேண்டும். “ஆரம்பித்துவிட்டாயா?’ என்பது போல் பார்த்தார் நண்பர்

Read More »

More Articles

அடுத்த கட்டத்தில் அன்னையின் மறுமொழி

“வாருங்கள், வாருங்கள்”, வாய் நிறைய வரவேற்றார் ராஜன். ” ‘நாம் பின்பற்ற முடியாததை, பிறரைப் பின்பற்றச் சொல்வது கயமை’ என்கிறார் அன்னை. என்றாலும், நான் கொடுத்தப் பட்டியலை வைத்து உடனடியாக அன்னையைத் தரிசித்ததால் கயமையும்

Read More »

சாசனம்

மும்பை மேரிடன் ஹோட்டல். பன்னிரண்டாவது மாடி பால்கனியில் இருந்து பார்த்தபோது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சூரியோதயம். உள்ளே திரும்பினால் அதையும் தாண்டிய அதிசயமாய் அன்னையின் புன்முறுவல். கண்ணாலேயே கட்டிப்போடும் அந்த வாஞ்சையில் நெகிழ்ந்தேன்.

Read More »

அடுத்த கட்டம்

மொட்டைமாடி. நாள் முழுதும் அடித்த வெயிலுக்கு மேகமூட்டமும், தென்றல் உடலை வருடுவதும் இதமாக இருந்தது. தொடர்ந்து கும்மென்று மரமல்லிகையின் வாசம். ஆகஸ்ட் மாதத்தில் மரமல்லிகையின் பருவம் ஆரம்பிப்பதுகூட ஏதோ சொல்வது போலிருந்தது. என் பார்வையே அதைச் சொல்லி இருக்க வேண்டும். “ஆரம்பித்துவிட்டாயா?’ என்பது போல் பார்த்தார் நண்பர்

Read More »